தேசிய கண் தான இருவார விழா’ செப்டம்பர் 8 வரை…
உலகில் 4.5 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். அவர்களில் 1.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், நமக்குக் கிடைக்கக்கூடியதோ, வெறும் 35 ஆயிரம் கருவிழிகள்தான். கண் தானம் பற்றி பிரசாரம் செய்யப்பட்டாலும், விழிப்புஉணர்வு குறைவாகத்தான் உள்ளது.
கண் தானம்… யார் செய்யலாம்?
ஒரு வயதுக் குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். வயது வரம்பு கிடையாது. கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் கண் அல்லாது பிற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்பட்டு இறந்தவர்கள்கூட கண்களைத் தானமாக வழங்கலாம்.
யாரெல்லாம் செய்ய முடியாது?
காரணமே தெரியாமல் திடீரென இறந்தவர்கள், வெறிநாய்க்கடி, எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்தவர் களிடம் கண்கள் தானமாகப் பெறப்படுவது இல்லை.
எப்படிச் செய்யப்படுகிறது?
மருத்துவர் குழு வந்ததும், 20 நிமிடங்களுக்குள் கார்னியாவை எடுத்துவிடுவர். கண் எடுக்கப்பட்ட பிறகு, இறந்தவரின் முகத்தில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஒரு கார்னியா, பொதுவாக நான்கு முதல் பதினைந்து நாட்கள் வரை பாதுகாக்கப்படலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கண்கள் இருவருக்குப் பொருத்தப்படும். யாருக்குப் பொருத்தப்பட்டது, யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற தகவல்கள் தெரிவிக்கப்படாது.