மிஸ்டர் கழுகு : ஜூ.வி.ஆக்‌ஷன்… அரசு ரியாக்‌ஷன்!

‘உமது நிருபர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடும்’’ என்றபடி என்ட்ரி ஆனார் கழுகார்.
“ ‘கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள்’ என்கிற தலைப்பில் 14.8.16  தேதியிட்ட இதழில் சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கிறதா? அதே மாதிரி கடந்த இதழில் ‘தலை இல்லாத செயலகம்’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியானது. அன்று மாலையே 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் வெளியானது. பல மாதங்களாக நிலவிவந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது. நிருபர்களுக்கு என் பாராட்டை சொல்லும்’’ என சொல்லிவிட்டு செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தலைமைச் செயலகத்தில் முக்கியமான துறைகளுக்குச் செயலாளர்கள் இல்லாதது, சிலர் காத்திருப்பு பட்டியலில் வைத்திருந்தது, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், பழிவாங்கப்பட்டவர்கள் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் நிலவிய கோபத்தை கவர் ஸ்டோரியாக கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அது, தலைமைச் செயலகத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சாகக் கிளம்பியது. உடனே ஐ.ஏ.எஸ். தொடர்பான ஃபைல்கள் அனைத்தும் முதல்வரின் அலுவலகத்துக்குக் கொண்டு போனார்கள். விறுவிறு என வேலைகள் தொடங்கின. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டத்தில் நிலவிய பிரச்னை பற்றி பேசப்பட்டது. அதன்பிறகு 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் பற்றிய அறிவிப்பை தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் வெளியிட்டார்’’
‘‘ஓஹோ’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பிரச்னைக்கு முக்கிய காரணகர்தா அரசின் ஆலோசகரான ஷீலா பாலகிருஷ்ணன்தான் என பலரும் குமுறுகிறார்கள். முக்கியத்  துறைகளான பொதுத் துறை, உயர்கல்வித் துறை, கால்நடைத் துறை, எரிசக்தித் துறை… ஆகியவற்றின் செயலாளர்கள் பதவிகள் இன்னும்கூட நிரப்பப்படவில்லை. அந்தப் பதவிகளை சிலர் கூடுதலாகக் கவனித்து வரும் மர்மம் என்னவென்று புரியவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதுல் ஆனந்த், எல்காட் நிறுவன சேர்மனாக இருந்தார். அதோடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர் பதவியையும் பல வருடங்களாகக் கூடுதலாகக் கவனித்து வந்தார் என சொல்லிக் காட்டுகிறார்கள்.’’
‘‘டி.ஜி.பி. அசோக்குமார் விவகாரம் என்ன?’’
“தமிழகக் காவல் துறையின் ‘ஹெட் ஆஃப் ஃபோர்ஸ்’ என அழைக்கப்படும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பதவியில் யார் அமருவது என்கிற போட்டி எப்போதுமே நிலவும். சீனியர்கள் சிலர் இருந்தும், அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, அசோக்குமாரை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தார் ஜெயலலிதா. அசோக்குமார் ஓய்வு பெறுவதற்கு முன்பே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி கடந்த 2014-ம் வருடம் நவம்பர் மாதம் பதவி நீடிப்பும் தந்தது. இரண்டு வருடங்கள். அதாவது, வருகிற நவம்பர் மாதத்தில்தான் முறைப்படி அவர் வீட்டுக்கு செல்லவேண்டும். ஆனால், செப்டம்பர் 6-ம் தேதியே அரசிடம் தனது விருப்ப ஓய்வுக் கடிதம் கொடுத்துவிட்டார் அசோக்குமார். ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. தினமும் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. அசோக்குமார் சரிவர செயல்படவில்லை’ என மீடியாக்கள், எதிர்க் கட்சிகள் புகார் பட்டியலை வாசித்தன. ஓய்வுபெற்ற பிறகு பதவியில் இருப்பதால் தனது வாய்ஸுக்கு உரிய மரியாதை இல்லை என அசோக்குமார் புலம்பி வந்ததாக பேசிக்கொள்கிறார்கள். அதன் எதிரொலிதான் விருப்ப ஓய்வாம்.’

 

“பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை விவகாரம் என்ன?’’
“அரசு நிர்வாகத்தை விமர்சித்து கட்டுரை ஒன்று பத்திரிகையில் வெளியானது. அந்த கட்டுரையில் அரசு மேலிடத்துடன் நேரடி தொடர்பில் உள்ள சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயங்கள் இடம்பெற்றிருந்தாம். உடனே உளவுத் துறை அதன் பின்னணியை துருவியபோது, அசோக்குமார் மீது ஆட்சியாளர்களுக்கு சந்தேகப் பார்வை விழுந்ததாம். சட்டமன்ற தேர்தலின் கருத்துக் கணிப்பு தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்ததால் பதவி ஆசையால் கோபாலபுரத்துக்கு ஆதரவாக டி.ஜி.பி-யின் செயல்பாடுகள் இருந்தாகவும் அதையொட்டி உளவுப்பிரிவு உயர்அதிகாரி ஒருவரின் கார் பறிமுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சொல்கிறார்கள். மேலிடத்தின் கோபத்தைக் குறைக்க இந்தப் பிரச்னைக்கு எல்லாம் காரணம் இன்னொரு அதிகாரிதான் என்று அசோக்குமார் தரப்பினர் போட்டுக் கொடுத்தார்​களாம். உடனே, அந்த அதிகாரி தூக்கியடிக்கப்பட்டார். நொந்துபோன அந்த அதிகாரி வெளியில் இருந்தபடியே, அசோக்குமாரின் இன்னொரு பக்கத்தை அரசு மேலிடத்துக்கு வேறு சானல்கள் மூலமாக ஆதாரத்துடன் தெரிவித்து உண்மையைப் புரிய வைத்தாராம். விஷயம் கேள்விப்பட்டு முதல்வரை சந்திக்கப் போனார் அசோக்குமார். சந்திக்க முடியவில்லை. இதன்பிறகே, விருப்ப ஓய்வில் செல்வதாகக் கடிதம் கொடுத்தாராம். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்த ரவிந்திரநாத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது போல உங்களுக்கும் நடக்கலாம் என அசோக்குமாரிடம் சொல்லப்பட, அதன்பிறகே இந்த முடிவை உடனடியாக எடுத்தாராம்.’’
“சென்னை மாநகர போலீஸின் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பதவியில் இருந்த அருணாசலம், டம்மியான பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டிருக்கி​றாரே?”
“அருணாசலம் முன்பு சி.பி.ஐ-யில் அசோக்​குமாருடன் இணைந்து பணி செய்தவர். அந்த வகையில், இருவருக்கும் நல்ல நட்பு உண்டு. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கும் அருணாசலத்துக்கும் சில விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது. கமிஷனர் சொன்ன பல அசைன்மென்ட்களை அவர் சரியாக செய்யவில்லை. தி.மு-க. எம்.எல்.ஏ ஒருவரை கைதுசெய்ய கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவர் அதை செய்யாமல் இழுத்தடித்துள்ளார். இதனால் டி.கே.ராஜேந்திரன், அருணாசலம் இடமாறுதலுக்கு அப்போதே பிள்ளையார் சுழியைப் போட்டார். அதன்படி, அருணாசலம் மாற்றப்பட்டாராம். அசோக்​குமார் மாற்றப்பட்டதன் பின்னணியில், ‘நன்றியுடைய தமிழக காவலர் சங்கம்’ என்கிற பெயரில் அதிர்ச்சிகரமான வாட்ஸ்-அப் செய்திகள் உலா வந்தன. மாநகர போலீஸ் அதிகாரி ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

 

‘பான், குட்கா போதைப் பாக்குகளை தமிழகத்தில் தடை செய்தவர் முதல்வர். ஆனால், சென்னையில் அந்த போதைப் பாக்குகள் வெளிப்படையாகவே கடைகளில் விற்கப்பட்டன. சில மாதங்களுக்கு முன்பு, போதைப் பாக்குகளை விற்கும் இரு வியாபாரிகளின் இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு செய்தது. அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் டைரியும் ஒன்று. அந்த டைரியில் யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டது என்கிற விவரம் இடம்பெற்றிருந்தது. அதில் சில ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களும் இருந்தன. சென்னை மாநகரக் காவலில் முக்கிய பொறுப்பைக் குறிப்பிட்டு மாதம் 20 லட்சமும்  வேறு சிலருக்கு பதவிகளை பொறுத்து பத்து லட்சம், ஏழு லட்சம் என விவரங்கள் இருந்ததாம். அந்த டைரியில் இருந்த விவரங்களை வருமான வரித்துறையினர் சேகரிக்க தொடங்கியதும் விஷயம் டி.ஜி.பி. ஆபீஸ் வரை போனது. அங்கிருந்தவர்கள் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை களத்தில் இறக்கி துப்பறியும்படி சொல்லியிருக்கிறார்கள். அந்த டைரியின் ரகசியங்களை வாங்கி முதல்வரிடம் காட்டிவிட முனைப்பு காட்டியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த டைரியை வருமானவரித் துறையினர் கொடுக்கவில்லை. இதற்கிடையே, டைரியில் பெயர் அடிபடும் இன்னொரு உயர் போலீஸ் அதிகாரிக்கு  லேட்டாகத் தகவல் போனது. ‘அந்த டைரி சிக்கினால் தனக்கு சிக்கல் வரும்’ என பயந்து போயிருக்கிறார். உடனே, அரசு மேலிடத்துக்கு நெருக்கமான ஒருவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘தனக்கும் மாமூலுக்கும் சம்பந்தமில்லை. வேண்டுமென்றே மாட்டிவிடப் பார்க்கிறார்கள்’ என் சொல்லி​யிருக்கிறார். இதையடுத்து, உளவுத் துறையினர் விசாரித்து ரிப்போர்ட் கொடுத்தனர். இப்படிப்​பட்ட சூழலில்தான், டி.ஜி.பி. விருப்ப ஓய்வில் சென்றார். மாநகர உயர் அதிகாரி டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டார். இந்த டிரான்ஸ்ஃபர்களுக்கும் அந்த டைரி விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் முடிச்சுப் போடுகிறார்கள்’ என்கிறார் அவர்.’’
“ம்’’
‘‘அந்த டைரி விவகாரத்தைக் கிளறினால் பெரிய பெரிய போலீஸ் தலைகள் உருளும். போலீஸ் அதிகாரிகளுக்கு மாமூல் தந்த ஏஜண்டுகளான நந்தா என்று ஆரம்பிக்கும் நபரும், ராஜே… என்று பெயருள்ளவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள். அவர்கள் அகப்பட்டால் முழு விஷயமும் அம்பலமாகும். வருமான வரித்துறையினர் மத்திய உளவுப்பிரிவுக்கும் மத்திய விஜிலென்ஸ் பிரிவுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர். அங்கிருந்து உறுதியான நடவடிக்கை உத்தரவு வரவில்லை என்றால், இந்த விவகாரத்தை ‘சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்’ என் சமூக ஆர்வலர் யாராவது நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பு இருக்கிறது. வருமானவரித் துறை ஏன் மௌனம் சாதிக்கிறது என்பதுதான் புரியாத புதிர்.
அவர்களை தடுக்கும் சக்தி யார் எனத் தெரியவில்லை.”
“அடுத்த டி.ஜி.பி. யார்?’’

“அசோக்குமார் பதவி காலியானதுமே அந்த இடத்தை பிடிக்க சீனியர்கள் முட்டி மோதுகிறார்கள். இதில் டி.கே.ராஜேந்திரனுக்கும், ஜார்ஜுக்கும் இடையே கடும் போட்டி. ராஜேந்திரன் கவனிக்கும் உளவுத்துறைத் தலைவர் ப்ளஸ் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி (பொறுப்பு) இரண்டிலும் படு தீவிரமாக இறங்கி​விட்டார். அதேபோல், மூன்றாவது முறையாக சென்னை போலீஸ் கமிஷனராக அமர்ந்துள்ள ஜார்ஜ், க்ரைம் சம்பவங்களை அறவே குறைக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார். இருவரில் யார் ஆட்சி மேலிடத்தில் ‘சபாஷ் பெறுவது’ என்கிற போட்டியில் குதித்துவிட்டனர். மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படவுள்ள பெயர் பட்டியலில்
டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் பெயர்கள் இடம் பெறும். ஜார்ஜ் ஓய்வுபெறும் நாள் 14.9.2017. அதாவது, இன்னும் ஒரு வருடம் உள்ளது. டி.கே. ராஜேந்திரன் ஓய்வு பெறும் நாள் 15.6.2017. அதாவது, இன்னும் ஒன்பது மாதங்கள்தான். மத்திய அரசு யாருக்கு ஒ.கே. செய்தாலும் இரண்டு ஆண்டுகள் டி.ஜி.பி பதவியில் தொடரலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி எப்படி ராமானுஜம், அசோக்குமார் பதவி நீடிப்பு பெற்றார்களோ அதே பாணியில் போட்டியில் உள்ள ஜார்ஜ் அல்லது டி.கே. ராஜேந்திரன் இருவரில் ஒருவருக்கு சான்ஸ் அடிக்கலாம். அதற்காகத்தான் இருவரும் வரிந்துகட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.’’ என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: