Daily Archives: செப்ரெம்பர் 12th, 2016

விண்டோஸ் 10: அறிமுகத் திரைகளை அழகாக அமைக்க

விண்டோஸ் 10 இயக்க முறைமை, இதுவரை விண்டோஸ் இயக்கங்கள் தந்த அறிமுகத் திரைகளை (Lock and Sign in screens) புதுமுறையில் தந்துள்ளது. சிலர் இவை திரும்ப திரும்ப காட்டிய திரைகளையே காட்டி வருகின்றன. எனவே, இவற்றை நிறுத்திவிட்டேன் என்று கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவ்வாறு செயல்படத் தேவையே இல்லை. இவற்றை நாம் விரும்பும் வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.
லாக் ஸ்கிரீனில் கார்டனா:

Continue reading →

பணத்தை மிச்சப்படுத்தும் பசுமை வீடுகள்!

இன்றைக்கு நம் பட்ஜெட்டில் கணிசமான பணத்தைச் சாப்பிட்டுவிடுகிறது வீட்டுப் பராமரிப்புக் கான செலவு. ஒரு மாதத்துக்கு கரன்ட் பில் ரூ.1,000, குடிதண்ணீர் செலவு ரூ.750 என நம் வருமானத்தில் 5 முதல் 10 சதவிகிதம் இது மாதிரியான கட்டணங்களைச் செலுத்தவே செலவாகி விடுகிறது.
காலம் செல்லச் செல்ல இந்தச் செலவுகள்  எகிறிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற சில மாதாந்திர செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி, பசுமை வீடுகள்தான். சுத்தமான காற்றும், சூரிய வெளிச்சமும் இல்லாமல் நகர நெரிசலில் புறாகூண்டு வீட்டுக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் இந்தப் பிரச்னைக்கு எளிதான தீர்வு பசுமைத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும்  வீடுகள்தான். 

Continue reading →

‘மலச்சிக்கல்… மலைக்க வேண்டாம்!’’

சரிசெய்துகொள்ள மருத்துவரின் பரிந்துரைகள்…கம்ப்ளீட் மெடிக்கல் கைடு!

‘‘படுத்ததும் உறக்கம், எழுந்ததும் மலம்கழித்தல்…. இதுவே ஆரோக்கிய வாழ்வு. ஆனால், இன்று 90% பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். அதை சரிசெய்துகொள்ளக்கூடிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றிப் பார்ப்போம்’’ என்று அதுபற்றிய மருத்துவ விழிப்பு உணர்வு தகவல்களை விரிவாகப் பகிர்ந்தார், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர் டாக்டர் கே.பிரேம்குமார்.
மலம் வெளியேறும் முறை

Continue reading →

கதை கதையாம் கணபதியாம்!

சரணம் கணேசா

கோகுலத்துக் கண்ணன் போலவே கயிலை கணபதியும்  பல தருணங்களில் பல இடங்களில் எண்ணற்ற அற்புத லீலைகளை நிகழ்த்தியிருக்கிறார். விநாயக சதுர்த்தி புண்ணிய தினத்தில் அந்த லீலைகளை- கணபதி குறித்த திருக்கதைகளைப் படிப்பதால், சகல சுபிட்சங்களும் கைகூடும்.
மூஷிக வாகனம் வந்த கதை!
அற்புதமான இந்தக் கதை கந்தபுராணத்தில் உள்ளது.
மாகத முனிவருக்கும் விபூதி என்ற அசுரப் பெண்ணுக்கும் தோன்றிய அசுரன் கஜமுகன். அவன் அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சார்யரின் உபதேசத்தின்படி சிவபெருமானை எண்ணி தவம் இயற்றி, ஆயுதங்களால் அழிக்கமுடியாத வரத்தைப் பெற்றான். தனது வரத்தின் பலத்தினால் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை. இந்திரனும் திருக்கயிலைக்குச் சென்று பிள்ளையார் பெருமானிடம் முறையிட்டான். அவர்களது துன்பங்களைத் தீர்க்க திருவுளம் கொண்டார் விநாயகர்.
ஆகவே, கணங்களும் படை பரிவாரங்களும் சூழ, கஜமுகாசுரனுடன் போருக்குச் சென்றார். அசுரன் பல அஸ்திரங்களை விநாயகர் மீது ஏவினான். அவற்றை எல்லாம் தன் திருக்கரத்தில் இருந்த உலக்கையால் முறியடித்து வீழ்த்தியபடி, அசுரனை நெருங்கிய விநாயகர், அதே உலக்கையால் அவனது மார்பில் ஓங்கி அடித்தார்.
ஆனாலும் அசுரன் மயங்கத்தான் செய்தானே தவிர, மடியவில்லை. ஆயுதத் தால் அவனை அழிக்க முடியாது என்பதை உணர்ந்த விநாயகர் தன் தந்தத்தை உடைத்து, அவன் மீது ஏவினார். அசுரனோ, பெருச்சாளியாக உருவம் கொண்டு வந்தான். விநாயகர் அவனை ஆட்கொண்டு, தம் வாகனமாக அமர்த்திக் கொண்டார்.
அறுகம்புல்லுக்கு இணையேது?
பெரும் தவசீலரான கெளண்டின்ய மஹரிஷி, நாள்தோறும் விநாயகரை பூஜிப்பவர். அத்துடன், தன் மனைவியான ஆசிரியைக்கு அறுகம்புல்லின் பெருமையை விரிவாக விளக்கியிருந்தார். மிதிலாபுரி எனும் ஊரில் வசித்த திரிசுரன் எனும் அந்தணன், அறுகம்புல்லால் விநாயகரை வழிபட்டு அருள்பெற்ற சம்பவத்தையும் அவளிடம் கூறியிருந்தார்.
ஒருநாள் ஆசிரியை தன் கணவரிடம், “ஸ்வாமி, மிதிலாபுரி திரிசுரனை விடவும் அளவற்ற அறுகம்புற்களால் அனுதினமும் ஆனைமுகனை நாம் வழிபடுகிறோம். எனினும் நமக்கு நற்பேறு வாய்க்கவில்லையே’’ என்று குறைபட்டுக்கொண்டாள். அவளுக்கு  மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகுக்கும் அறுகம்புல்லின் மகிமையை உணர்த்த விரும்பினார் கெளண்டின்யர். ஆகவே, விநாயகருக்கு அர்ச்சிக்கப்பட்ட ஓர் அறுகம்புல்லை அவளிடம் கொடுத்து, ‘‘இதை தேவேந்திரனிடம் கொடுத்து, இதன் எடைக்கு எடை பொன் பெற்று வா’’ என்று பணித்தார்.

அவளும் அவ்வண்ணமே தேவேந்திரனிடம் சென்று, தன் கணவரின் செய்தியை அவனிடம் கூறியதோடு, அறுகம்புல்லை தந்து அதன் எடைக்குச் சமமாக பொன் தரும்படி கேட்டாள். தகுந்த மரியாதையுடன் அவளை வணங்கித் தொழுத தேவேந்திரன், குபேரனிடம் சென்று இதற்கு இணையாக பொன் பொருளை பெற்றுக் கொள்ளும்படி அனுப்பிவைத்தான். அவள் குபேரனைச் சந்தித்தாள். அவன் மலை போன்ற ஒரு பொற்குவியலைக் காட்டி, தேவையானதை எடுத்துச் செல்லும்படி கூறினான். ஆனால், ஆசிரியையோ, ‘‘இந்த அறுகுக்கு இணையான பொன் தந்தால் போதும். ஆகவே, இதை ஒரு தராசுத் தட்டில் வைத்து, தக்க அளவில் பொன் தரவேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டாள்.
குபேரனும் அதற்கு இசைந்து, ஒரு தராசைக்கொண்டு வந்து அதன் தட்டு ஒன்றில் அறுகம்புல்லை வைத்து, மற்றொன்றில் ஒரு பொற்காசை வைத்தான். நிறை சமமாக வில்லை. அடுத்தடுத்து அந்தத் தட்டில் பொன்னை நிரப்பியபோதும் நிறை சமமாக வில்லை; அறுகு இருந்த தட்டு மேலெழும்ப வில்லை. குபேரன் தன் செல்வம் முழுவதையும் வைத்துப் பார்த்தும் பயன் இல்லை. பிறகு தன் குடும்பத்துடன் தானும் தட்டில் ஏறி நின்றான். அப்போதும் தராசுத் தட்டுகள் சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த குபேரனும் நிலைமையை உணர்ந்தான். அவன் முதலாக தேவர்கள் எல்லோரும் தட்டில் ஏறி நின்றார்கள். அப்போதும்  தராசுத் தட்டுகள் சமமாகவில்லை.
அப்போது, அங்கே ரிஷபாரூடராகக் காட்சியளித்த சிவபெருமான், ‘‘தேவர்களே! அறுகம் புல்லின் மகிமைக்கு இணை எதுவும் இல்லை.
ஆகவே, உங்கள் செல்வச் செருக்கை விட்டுவிட்டு தட்டில் இருந்து இறங்குங்கள். எல்லோரும் கெளண்டின்ய முனிவரிடமே செல்வோம்.’’ என்றார்.
அதன்படியே அனைவரும் முனி வரின் ஆசிரமத்துக்கு வந்தனர். அனைவரையும் வணங்கித் தொழுத முனிவர், ‘‘அறுகம்புல்லின் மகிமையை அனைவரும் அறியவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன். என்னை மன்னித்தருள்க’’ என்று வேண்டிக் கொண்டார். சிவனாரையும் பணிந்து தொழுதார்.
உடனே சிவமூர்த்தி, ‘‘அருந்தவ முனிவரே! உமக்கும் அறுகம்புல் கொண்டு நீ நடத்தும் வழிபாட்டின் சிறப்புக்கும்  மூவுலகங்களும் ஈடாகாது. உமக்குச் சகல செல்வங்களும் கிடைக் கட்டும். உமது விநாயக வழிபாடு மிக உன்னதமானது. வாழ்க உமது புகழ்’’ என்று திருவருள் புரிந்தார்.  மற்ற தேவர்களும் முனிவருக்கு வரங்களை வாரி வழங்கினார்கள். அன்றுமுதல் காம தேனு, கற்பகத் தருவும் கூட அவருக்குப் பணிவிடை புரியத் துவங்கின.

இதையெல்லாம் கண்ட ஆசிரியை உள்ளம் நெகிழ்ந்தாள். ‘‘கணேச வழிபாட்டின் மகிமையையும் அறுகம் புல்லின் சிறப்பையும் பரிபூரணமாக அறிந்தேன்’’ என்று கூறி கணவரின் திருவடிகளை வணங்கி எழுந்தாள்.
இந்த திருக்கதையை படிப்பவர் களுக்கும், மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்களுக்கும், அதை செவிமடுக்கும் அன்பர்களுக்கும் சகல சம்பத்துகளும் ஸித்திக்கும். அவர்கள் வீட்டில் சுபிட்சங்களும் பெருகும்.
வன்னி இலையும் மந்தாரை பூக்களும்!
வன்னி இலையாலும் மந்தார மலராலும் விநாயகரை அர்ச்சித்து வழிபடுவதால், விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல், இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்களைத் தரிசிப்பதும் சிறப்பு.
அப்படியென்ன சிறப்பு இந்த இரண்டு விருட்சங்களுக்கும்?
ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி. தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும்கூட. பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.
ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார். இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை. மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர். ஆம்! புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர். அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். “விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்” என்று கூறிச் சென்றார் முனிவர்.
சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர். இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர். இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.
செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார். அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார். அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார். அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.
உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார். ஆகவே, வன்னி இலைகளும் மந்தார புஷ்பங்களும் பிள்ளை யாருக்கு உகந்தவை ஆயிற்று.
சிந்தை மகிழ வரம் தருவார் சிந்தாமணி விநாயகர்!
ருக்மாங்கதன் விதர்ப்ப தேசத்தின் அரசன். ஒருநாள், அவனைச் சந்தித்த குடிமக்கள் தங்களின் விளைநிலங்களை வன விலங்குகள் பாழ்படுத்துவதாக புகார் அளித்தனர். மன்னவனும் காட்டு விலங்குகளை வேட்டையாடப் புறப்பட்டான்.
காட்டில் படைபரிவாரங்களைப் பிரிய நேரிட்டது. கடும் தாகமும் மன்னனை வாட்டியது. அருகில் ஓர் ஆஸ்ரமத்தைக் கண்டவன், வாயிலில் நின்று குரல் கொடுத்தான். குடிலுக்குள் இருந்து வெளிப்பட்ட ரிஷிபத்தினியிடம், தாகத் துக்கு தண்ணீர் வேண்டினான். அவளோ மன்னனின் அழகில் மெய்ம்மறந்தாள். தன் காதலை மன்னனிடம் தெரிவிக்கவும் செய்தாள். அறத்துக்குப் புறம்பான அவளின் விருப்பத்தை மன்னன் ஏற்கவில்லை. ஆகவே, அவள் அவனை குஷ்டரோகியாகும்படி சபித்தாள்.

சாபவயப்பட்டு காட்டில் அலைந்து திரிந்த ருக்மாங்கதன், ஒருநாள் நாரதரைத் தரிசித்தான். அவரிடம் தனது துயரத்தைக் கூறி வருந்தினான். உடனே நாரதர், “கலங்காதே மன்னா! இங்கிருந்து சற்று தூரத்தில் சிந்தாமணி விநாயகர், கோயில் கொண்டிருக்கிறார். அருகிலேயே ஒரு திருக்குளம் உள்ளது. அதில் மூழ்கிய குஷ்டரோகி ஒருவன், குணம் பெற்று எழுந்ததை நானே கண்டேன். நீயும் அங்கு சென்று, சிந்தாமணி விநாயகரைத் தரிசித்து, திருக்குளத்திலும் மூழ்கி எழு. உன் நோய் நீங்கும்” என்று அறிவுறுத்தியதுடன், கெளதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன், சிந்தாமணி விநாயகரை வழிபட்டு அருள்பெற்ற கதையையும் எடுத்துரைத்தார்.
ருக்மாங்கதனும் அவர் கூறியபடியே, சிந்தா மணி விநாயகரை வழிபட்டு, திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கப் பெற்றான். நாமும் சிந்தா மணி விநாயகரின் திருவுருவை வழிபட்டால், நம் சிந்தை மகிழும் இனிமையான வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்.