ஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து?

ரவோ, பகலோ, மழையோ, வெயிலோ… எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் வாங்கச் செய்யும் வசீகர வலையாக பரந்து விரிந்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். நேரில் பார்த்து, பல நூறு கேள்விகள் கேட்டு, தொட்டு உணர்ந்து, அதன் பிறகே திருப்தியாகி பணத்தை எடுக்கும் நம் மக்கள் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங்.

கம்ப்யூட்டர்கூட தேவையில்லை… கையடக்க மொபைல் போன் திரையிலேயே பொருளின் சகல பரிமாணங்களையும் அலசி, சட்டென வங்கிக்கணக்கிலிருந்தோ, கார்டிலிருந்தோ பணத்தைப் பரிமாறி, காத்திருந்தால் கை வந்து சேரும் காலம் இது. இதன் பின்னணி என்ன? பிரச்னைகள் என்ன? இலக்கு என்ன? நம் கேள்விகளை முன்வைத்து பேசினார் கஃபில். பெண்களுக்கான ஆன்லைன் கைப்பைகள் விற்கும் போர்டல் நடத்தி வருகிறார் இவர்.

 

ஏன் ஆன்லைன் ஷாப்பிங்?

நேரம் சேமிக்கப்படுவது முக்கியமாகச் சொல்லப்பட்டாலும், கவர்ச்சிகரமான தள்ளுபடி களில் மயங்கி, தேவையே இல்லாமல் வாங்கிக் குவிப்பவர்களும் நிறையவே உண்டு. கரன்சிகளை கையில் எடுக்காமலே பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், ஆயிரம் ரூபாய்க்கும் 10 ஆயி ரம் ரூபாய்க்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட அதிகம் யோசிப்பதில்லை. வங்கிக்கணக்கில் பணம் இல்லாதபோதும் கிரெடிட் கார்டு தயவில் வாங்குகிறார்கள். ரிட்டர்ன் பாலிசி இருப்பதால், பிடிக்கவில்லையென்றால் திருப்பிக்கொடுத்து விடலாம் எனவும் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பொருட்கள் கைக்கு வந்தபின் திரும்பக் கொடுக்கும் ஜென் நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!

அடுத்தது சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் டெக்னிக்… 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் டெலிவரி சார்ஜ் 50 ரூபாய் மிச்சப் படுத்துவதாக நினைத்து, அவசியமில்லாமல் அடிஷனல் பொருட்களையும் வாங்குகிறார்கள். அதுமட்டுமல்ல… மொபைல் வாங்கினால் பவர் பேங்க், ஜீன்ஸ் வாங்கினால் டி-ஷர்ட் என தொடர் புடைய பொருட்களுக்கு தள்ளுபடி தந்து இன்னும் ஈர்க்கின்றன ஷாப்பிங் தளங்கள். 3 ஆயிரம் ரூபாயைக்கூட தவணை முறையில் கட்டலாம் என்கிறபோது ஆர்வம் இன்னும் அதிகமாகிறது.

என்னென்ன… யார்… எப்படி?

“போக்குவரத்து நெரிசல்கொண்ட நம் நாட்டில் கடைகளுக்குச் சென்று வருவதை மக்கள் சுமையாகவும் அலுப்பாகவும் கருதுகிறார்கள். மால்களில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், அதையும் ஒதுக்குகிறார்கள். இப்படி பல காரணங்கள் இருந்தாலும், இணையத்திலேயே ஒரு வேலையை முடிப்பதை இந்திய இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமையாக நினைக்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த எண்ணத்தை மூலதனமாக்கியே ஆன்லைன் நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன” என்கிறார் கஃபில். 

   ஆன்லைன் விற்பனையில் புத்தகங்கள், விமான டிக்கெட் சேவைகள், எலெக்ட்ரானிக் பொருட் கள் ஆகியவையே முன்னணியில் உள்ளன. உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நிறையவே விற்பனையாகின்றன.

    இணையத்தில் கிடைக்காத பொருள் ஏதுமில்லை. காலையில் ஃப்ரெஷ் காய்கறிகள், நள்ளிரவில் பிறந்த நாள் கேக் அல்லது பிரியாணி… இப்படி எதையும் விரும்புகிற நேரத்தில் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன.

    வாங்குவது மட்டுமல்ல… தேவையற்ற எந்தப் பொருளையும் வீட்டில் இருந்தபடியே விற்க முடியும்.

`ஒரு பொருளை பார்க்காமலேயே எப்படி… அதுவும் முன்பணம் கட்டி வாங்குவார்கள்’ என்ற கேள்வி பலருக்கு உண்டு. இந்த மனத்தடையை உடைக்க இணைய நிறுவனங்கள் கொண்டுவந்த திட்டம்தான் Cash on delivery. இது ஓரளவு நம்பிக்கை அளித்த பிறகே ஆன்லைன் பிசினஸ் அசுர வேகம் எடுத்தது.

பிரச்னை என்ன?

   முதலில் இலவச ஷிப்பிங் அளித்த நிறுவனங்கள், இப்போது ரூ.50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். டெலிவரி தாமதமும் ஏற்படுகிறது.

   இணையத்தில் கிரடிட் கார்டு மோசடிகள் அதிகம் நடக்கின்றன. இதனால் வங்கிகள் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

   ஆன்லைன் ஷாப்பிங் அடிக்‌ஷன் – மிகப்பெரிய மனநலப் பிரச்னையாக மாறிவருகிறது.

 

இது பற்றி மனநல நிபுணர் அபிலாஷாவிடம் பேசியபோது, “ஆன்லைன் ஷாப்பிங் அடிக்‌ஷனை `ஆன்யோமேனியா’ என்போம். அலுவலகத்தில் இருந்தும் ஷாப்பிங் செய்யலாம் என்பதால், பக்கத்தில் இருப்பவரிடம் ‘நான் எவ்ளோ வாங்கு றேன் பார்’ என பந்தா காட்டுவதில் ஒருவித திருப்தியை உணர்கிறார்கள். திட்டமிடாமல், அந்த நொடியில் முடிவெடுத்து வாங்கும் Impulsive buying பழக்கம்தான் அடிக்‌ஷனாக மாறுகிறது. அழகான வடிவமைப்புடன் கூடிய இணையதளம், கலர்கலரான புகைப்படங்கள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்… இவற்றைப் பார்த்ததும் இளைஞர்கள் வாங்கியே தீர வேண்டும் என்கிற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்” என்கிறார்.

“பிரைவசி என்பதே இணையத்தில் கிடையாது. நமது தேவை என்ன, நமக்கு எப்போது சம்பளம் வரும், பொதுவாக எந்த நேரத்தில் நாம் அதிகம் வாங்குவோம் என நம்மைப் பத்தின எல்லா தகவல்களையும் நம்மிடம் இருந்தே வாங்கித் தொகுத்து வைத்திருக்கிறது இணையம். நம்மை சரியாகக் கணித்து ஆசையைத் தூண்டி வாங்க வைத்துவிடுகிறார்கள்” என்கிறார் மென்பொருள்துறை இன்ஜினீயர் ஒருவர். இவர் பணிபுரிகிற நிறுவனம் இணைய பயனாளர்களிடம் இருந்து இத்தகைய தகவல்களைச் சேகரித்து வேண்டியவர்களுக்கு விற்று வருகிறதாம்.

சமூக வலைத்தளங்களும் இளைஞர்களை வாங்க வைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. கருத்து பரிமாற்றங்களும், தொடர்ச்சியான உரையாடல்களும் சோஷியல் மீடியாக்களில் இயங்கும் சிலரின் மீது நம்பிக்கையை விதைக்கின்றன. அவர்கள் ஒரு பொருளை வாங்கியதாக பகிர்ந்தாலே,
மற்றவர்களும் அதை நம்பி வாங்கத் தயாராக இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களிடம் சில பிராண்டுகள் தங்களது பொருட்களைப் பயன்படுத்தக் கொடுத்து விமர்சனம் எழுதச் சொல்வதும் உண்டு! 


பாதிச் சம்பளம் காணாமல் போகும்!

     இந்த ஆண்டில் இணைய பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் இந்தியா அமெரிக்காவை முந்தும் என்கிறது கூகுள். பல்லாயிரக்கணக்கான கோடிகளை பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யும். முதுகில் ஆளுயர பைகளை சுமந்தபடி சாலைகளில் டெலிவரி வண்டிகள் அதிகரிக்கும். தலைவலி தைலம் முதல் பாதவெடிப்பு மருந்து வரை ஆன்லைனிலே ஆர்டர் செய்யப்படும். சம்பாதிப்பதில் பாதிப்பணம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கவோ, வாங்கியதற்கு EMI கட்டவோ செலவாகும்!

    இணையம் பயன்படுத்துபவர்களில் 10-ல் 8 பேர் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. 

    71% பேர் குடும்ப உறுப்பினர்களின் பரிந்துரைகளையும், 64% நண்பர்களின் பரிந்துரைகளையும், 29% இணையத்தில் எழுதப்படும் பரிந்துரைகளையும் நம்புகிறார்கள்.

    ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் 10 பேரில் நால்வர் தங்களுக்குத் திருப்தியில்லை என இணையத்தில் கருத்து பதிவு செய்கிறார்கள். 

    கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலம் வாங்கும்போது மற்ற இணையதளங்களில் விலைகளை ஒப்பிட்ட பின் வாங்க வழியுண்டு. மொபைலில் அது சிரமம் என்பதால், ஆப்ஸ் மூலம் வாங்க வைக்கவே பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார்களாம். சில இணையதளங்கள் மூடப்பட்டு ‘ஒன்லி ஆப்ஸ்’ ஆக மாற்றப்பட்டதற்கும் இதற்கும் தொடர்பு உண்டு!

%d bloggers like this: