உங்கள் அலுவலகத்தின் புதிய மேனேஜர்!

ரு அலுவலகத்தில் மேனேஜர் என்பவர்தான் முக்கியமானவர். காரணம், அவர்தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வேலைகளையும், இலக்குகளையும் நிர்ணயிப்பவர். பணியாளர்கள் இலக்குகளை நோக்கிதான் பணிபுரிகிறார்களா எனக் கண்காணிப்பவரும் அவர்தான்.

இத்தனை நாளும் இந்த வேலைகளை எல்லாம் ஒரு மனிதர் செய்துவந்தார். இனி இந்த வேலையை ஒரு சாஃப்ட்வேர் பக்கவாக செய்துதந்துவிடும் என்றால் நம்புவீர்களா? யெஸ், நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ‘ஸ்லாக்’(slack) என்னும் சாஃப்ட்வேர், மிகப் பெரிய நிறுவனங்களில் பிசினஸ் சொல்யூஷன் சாஃப்ட்வேராக பயன்படுத்தப்படுகிறது. இதனைக்கொண்டு அலுவலக அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

ஸ்டீவர்ட் பட்டர்ஃபீல்டு என்பவர்தான் ‘ஸ்லாக்’ என்னும் சாஃப்ட்வேரை உருவாக்கியவர். ஆரம்பத்தில் வீடியோ கேம் ஒன்றைத் தயார் செய்து அது தோல்வியில் முடியவே, அதிலிருந்து கற்ற அனுபவத்தில் ஃப்ளிக்கர்(Flickr) எனும் அப்ளிகேஷனை வடிவமைக்க, அதனை யாகூ வாங்கியது. அதன்பின் நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர் தயாரித்த ஆன்லைன் கேமும் தோல்வியையே தழுவியது. அப்போது உதித்த ஐடியாதான் இந்த ஸ்லாக். இது நிறுவனங்களுக்கு இடையே தொடர்புகொள்ளும் மென்பொருளாக தயாரிக்கப்பட்டது. இதற்கு மிகப் பெரிய அளவில் நிறுவனங்களிடமிருந்து வரவேற்பு கிடைத்தது.

ஸ்லாக் மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்? குழுக்களுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றம், ஒட்டுமொத்த நிறுவனத்தின் கருத்துப் பரிமாற்றம், வேலைகளை நிர்ணயிப்பது, அதனைக் கண்காணிப்பது, தனிநபர் தகவல் தொடர்பு ஆகியவற்றை இதன் மூலம் செய்ய முடியும்.

ஒட்டுமொத்த நிறுவனத்தின் தகவல் பரிமாற்றத்தில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மையை இந்த மென்பொருளால் கொண்டுவர முடியும். குழு, ஒரு குறிப்பிட்ட புராஜெக்ட், தனிநபர் என அனைவருக்குமான தகவல்களை அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரே சேனலில் தெரிவிக்க முடியும்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறது. அதில் எத்தனை பேர் வேலை செய்ய வேண்டும் என்பதை மனிதவளப் பிரிவுக்கும், எத்தனை பொருட்களை தயாரிக்க வேண்டும் என்பதை உற்பத்திப் பிரிவுக்கும், அவர்களுக்கான ஊதியத்தை அக்கவுன்ட்ஸ் பிரிவுக்கும் எல்லாருக்கும் தெரியும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு நிர்ணயிக்க முடியும்.

பிரைவேட் சேனல் மூலம் ஒரு நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை மட்டும் இயக்க முடியும். இதன் மூலம் அந்த பிரிவுக்குள் வெளிப்படைத் தன்மையை அதிகமாக வைத்திருக்க முடியும். இதனை அதே நிறுவனத்தில் உள்ள மற்ற பிரிவு பணியாளர்களால் பார்க்க முடியாது. உதாரணமாக, ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து எடுக்கும் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பிரிவுக்கான விவரங்களை, பிரைவேட் சேனல் என்பவர் ஒற்றை க்ளிக் மூலம் அது டெலிவரி செய்யப்பட்டதா, இல்லையா என்பதை தனது நிறுவனத்துக்குத் தெரிவிக்க முடியும்.

இதில் அதிக அளவுள்ள ஃபைல்களை மட்டுமல்ல, அலுவலகம் தொடர்பான விவரங்கள், போட்டோ, வீடியோ என அனைத்துவிதமான ஃபைல்களையும் மற்றவர்களுடன் தனியாகவோ அல்லது மொத்த குழுவுக்கோ அனுப்ப முடியும் அல்லது பெற முடியும். மேலும், ஒருவருக்கு நிறுவனம் தரும் வேலை, அதனை செய்துமுடிக்க வேண்டிய நேரம், அது செய்து முடிக்கப்பட்டு இருக்கும் நிலவரம் ஆகியவற்றை இதன் மூலம் கண்காணிக்கலாம். இத்தனை வசதிகளையும் இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பான விஷயம். ஆனால், குறிப்பிட்ட சில மேம்பட்ட சேவைகளை இந்த நிறுவனம், தனிநபருக்கு மாதம் இத்தனை டாலர் என்கிற அடிப்படையில் கட்டணச் சேவைகளாகவும் தருகிறது.

இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 3.8 பில்லியன் டாலர். மேலும், இதில் நாள் ஒன்றுக்கு 2.7 மில்லியன் ஆக்டிவ் பயன் பாட்டாளர்கள் உள்ளனர். அதில் எட்டு லட்சம் பேர் பிரீமியம் பயன்பாட்டாளர்கள். 100 மில்லியன் ஆக்டிவ் பயன்பாட்டாளர்களை எட்டினால் 10 பில்லியன் டாலர் வருவாயை எட்ட முடியும் என இதன் நிறுவனர் ஸ்டீவர்ட் கூறியுள்ளார்.

மாற்றங்களுக்கு உட்படும் நிறுவனங்களில் இதுபோன்ற மென்பொருட்களின் பயன்பாடு பணியாளர்களின் வேலைகளை   அப்டேட்-ஆக வைத்திருக்கவும், அவர்களின் பணியை மதிப்பிடவும், தொடர்ந்து வேலைகளை ஆட்டோமேட் செய்யவும் உதவுகிறது.

எப்படிப் பயன்படுத்துவது?

*ஸ்லாக் அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இலவசமாகக் கிடைக்கும்.

*கணினியிலும் இதற்கான சாஃப்ட்வேரை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

*இதற்கு உங்கள் நிறுவனக் கணக்கி லிருந்து லாக் இன் செய்தால், உங்கள் மின்னஞ்சல் மூலம் உங்கள் கணக்கைத் துவங்கிக்கொள்ள முடியும்.

*உங்கள் நிறுவன அட்மின்,. உங்களுக்குத் தேவை உள்ள சேனலில் உங்களை இணைத்துவிடுவார்.

*அதன்மூலம் உங்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படும். இதனை சிறு நிறுவனங்கள்கூட பயன்படுத்த முடியும்.

%d bloggers like this: