எந்த நகை… எப்படி வாங்குவது?

விழிப்பு உணர்வு

`தங்கமே ஒன்னத்தான் தேடி வந்தேன் நானே…’ என சுலபமாக பாடுவது போன்ற விஷயம் அல்ல நகை வாங்குவது…

தங்கமோ, வெள்ளியோ… வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?

அதற்கு முன் தங்கம் பற்றிய சில உண்மைகளை அறிந்துகொள்வோம். 24 காரட் என்பது சுத்தமான தங்கம். ஜுவல்லரி பாஷையில் 999. அதென்ன 999? தங்கத்தை ஆயிரம் என்கிற விகிதமாக பிரித்தால், அதில் 999 என்கிற விகிதத்தில் தங்கம் இருக்கும்.  கிட்டத்தட்ட ஆயிரம் கிராமும் தங்கம் என்று பொருள். 100 கிராம் என்றால் 99.9 என்று வரும். 

 

அப்ப 916 என்கிறார்களே அது?

24 காரட்டில் ஆபரணத்தங்கம் செய்ய முடியாது. நெகிழும் தன்மை அதிகம் என்பதால், அதில் 8.4 சதவிகிதம் செம்பும் வெள்ளியும் கலப்பார்கள். ஆக ஆயிரத்தில் 8.4 போனால், 91.6. அதுதான் 916. அதே போலவே 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) என்று காரட்டுக்கு தகுந்தபடி ஹால்மார்க் முத்திரை இடப்படும்.

தங்கத்தை ஒட்டவைக்க சால்டரிங் செய்வதற்காகவே செம்பு கலக்கப்பட்டது. அதைவிடவும் கேட்மியம் (cadmium) குறைவான அளவில் கலந்தாலே போதும் என்பதால், அதை மாற்றாகப் பயன்படுத்தினார்கள். தங்கத்தின் தரமும் உயர்ந்தது. இதுதான் KDM நகைகள்.

ஹால்மார்க் என்று வந்ததே.. அது என்ன?

இந்திய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் BIS (Bureau of Indian Standards) எனும் தரக்கட்டுப்பாடு அமைப்பு சோதனை செய்து முத்திரை இடப்பட்ட நகைகளையே வாங்க வேண்டும். அந்த முத்திரையில் ஐந்து அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் (பார்க்க பெட்டிச்செய்தி).

தி மெட்ராஸ் ஜுவல்லர்ஸ் & டைமண்ட் மெர்சன்ட்ஸ் அசோஸியேஷனின் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் தரும் டிப்ஸ்…

“பத்தோடு பதினொன்றாக பீரோவில் வைப்பவர்களுக்கான டிப்ஸ் அல்ல இது. நகையை முதலீடாக வாங்குகிறர்கள் இல்லையா.. அவர்களுக்கானது” என்று சிரித்துக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

“டிசைன்கள் அதிகம் கொண்ட நகைகள் வாங்குவது பயன்தராது. செய்கூலி, சேதாரம் என்று புரியாத கணக்கெல்லாம் சொல்வார்கள். டிசைன் குறைந்த, பிளெய்ன் நகைகள் வாங்குவதே புத்திசாலித்தனம். செய்கூலி, சேதாரம் குறைவு என்கிற விளம்பரத்தை நம்பி போகிறார்கள் இல்லையா… அவை எல்லாமே கல் வைத்த அல்லது அரக்கு வைத்த நகைகளாகத்தான் இருக்கும். கல் எடைக்கு 2% குறைத்திருக்கிறோம் என்று சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் ‘கல்லை எடுத்து எடை போட்டுக் காமிங்க’ என்று சொல்லத் தயங்குவார்கள். சில வருடங்கள் கழித்து மறுவிற்பனை அல்லது அவசரத் தேவைக்காக அடகு வைக்கும்போதுதான், கல்லின் ஒரிஜினல் எடை தெரிந்து அதிர்ச்சி அடைவார்கள். ஆகவே, கல்நகையை வாங்கும்போதே எடையை சரியாக செக் செய்துகொள்ளுங்கள்.

அதுதவிர, நகையில் ஹால்மார்க் முத்திரை உட்பட மற்ற ஐந்து அம்சங்களும் சரியாக இருக்கிறதா என்று செக் செய்துகொள்ளவும். சரியாகத் தெரியவில்லை என்றால் லென்ஸ் மூலம் பார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.

எப்போது உங்கள் நகையின் தரம்மீது சந்தேகம் என்றாலும் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என்று எல்லா முக்கிய நகரங்களிலும் 59 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. 125 ரூபாய் செலவில் நீங்களாகவேகூட சோதனை செய்யலாம். ஆனால், ஹால்மார்க் முத்திரை இருந்தால் அதை 100% நம்பலாம். லேசர் முறையில் செய்யப்படும் ஹால்மார்க் முத்திரைக்கு டூப்ளிகேட் வாய்ப்பே இல்லை.

விற்பனைச்சீட்டு (பில்)  வாங்கும்போது அதில் நகைக்கான மதிப்பு எவ்வளவு, லேபர் சார்ஜ் எவ்வளவு என்பதைப் பார்த்து, தெளிவாகக் கேட்டு வாங்குங்கள்.  ஹால்மார்க் சீல் உட்பட, மேலே சொன்ன எல்லாமே வெள்ளிக்கும் பொருந்தும். வெள்ளி கறுத்துப் போகிறதென்றால் நல்ல வெள்ளி என்று பொருள். அதேபோல, வெள்ளி நகைகளில் ‘சீக்கிரம் அறுந்து போகிறது’ என்ற புகார் உண்டு. காரணம், மிகவும் மெல்லிசான டிசைன்கள் வாங்குவதுதான்.

முன்பெல்லாம் மாதமொருமுறை.. குறைந்தபட்சம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நகைகளை எல்லாம் எடுத்துவைத்து வெள்ளைத் துணியால் துடைத்து பராமரிப்பார்கள். இப்போது அந்தப் பழக்கமே இல்லையோ என்று தோன்றுகிறது. அப்படிப் பராமரிப்பதன்மூலம் கண்ணிகள் விட்டிருந்தாலோ, டாலர் நெகிழ்ந் திருந்தாலோ கவனித்து சரிசெய்து கொள்ளலாம்” என்றார் சாந்தகுமார்.


`ஹால்மார்க்’ அம்சங்கள்!

* BIS தர நிர்ணயத்தின் சின்னம் (லோகோ)

* தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் 3 டிஜிட் எண் (916 = 22 காரட்)

* மதிப்பீட்டு மையத்தின் சின்னம்

* ஹால்மார்க் செய்யப்பட்ட வருடம் (2000 என்றால் A, 2001 B…)

* நகை வணிகம் செய்யும் நிறுவனத்தின் சின்னம்

ஒரு மறுமொழி

  1. useful message

%d bloggers like this: