ஐ.ஏ.எஸ் யுத்தம்… ஆபரேஷன் நத்தம்!

மிழகத்தில் ஒரே நேரத்தில் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு நடத்தியது. இதில் ஒட்டுமொத்த டார்க்கெட், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளைக் கவனித்தவர் நத்தம் விசுவநாதன். சட்டமன்றத் தேர்தலில் தோற்று தற்போது, சென்னை எம்.ஆர்.சி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விசுவநாதனின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவருடைய அமைப்புச் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பொறுப்புகள் பறிக்கப்பட்டது பெரிய அதிர்ச்சி. ரெய்டு விவகாரத்தில் நத்தம் விசுவநாதன் மீது தலைமை கோபத்தில் இருப்பதையே இது காட்டியது.

யார் அந்த பிசினஸ் பார்ட்டனர்?

மின்துறைக்கான நிலக்கரியை இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாங்கியது, வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற்றது ஆகியவற்றில் ஊழல் தலைவிரித்து ஆடியது. இதை கண்கொத்திப் பாம்பாக மத்திய அரசின் அமலாக்கப்பிரிவும், ரெவின்யூ இன்டலிஜென்ஸ் பிரிவும் கவனித்து வந்தன. இந்த நிலையில் இந்தோனேஷியா, போர்ச்சுக்கல் நாடுகளில் உள்ள பிசினஸ் புரோக்கர்கள் சிலரின் கோஷ்டி மோதலில், ஒருவரை ஒருவர் மாட்டிவிடும் நடவடிக்கையில் இறங்கினார்களாம். லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலை விலைக்கு வாங்கியதன் பின்னணியில் புரோக்கராக செயல்பட்டவரின் ஜாதகமே தற்போது அமலாக்கப்பிரிவிடம் உள்ளது. சர்வதேச நாடுகளில் கறுப்புப் பணத்தை தடங்கல்கள் இல்லாமல் முதலீடு செய்வதற்கு ஏதுவாக, போர்ச்சுக்கல் நாட்டில் குடியுரிமையை வாங்கியிருக்கிறார் தமிழக பிசினஸ் புள்ளி ஒருவர். மதுபானத் தயாரிப்புகளுடன் தொடர்பில் உள்ள அவர், நத்தம் விசுவநாதனின் மகன் அமர்நாத்தின் நட்பு வட்டாரத்தில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியின் நிர்வாகத்தில்தான் வருமானவரித் துறை வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருப்பவர் அருண்ஜெட்லி. இருந்தும் அதிரடியாக ரெய்டு நடந்ததை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

ஞானதேசிகனுக்கும் விரைவில் சம்மன்?

நிலக்கரி வாங்கியது தொடர்பான முறைகேட்டில், மின் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஞானதேசிகனும் சிக்குகிறார். அந்தப் பதவியில் இருந்த பிறகு தலைமைச் செயலாளர் ஆனார். பின் டிட்கோ சேர்மன் ஆனார். சில நாட்களுக்கு முன்புதான், திடீரென அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான நடவடிக்கைகளுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மின்துறை ஊழல்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். இதை எப்படியோ முன்கூட்டியே தெரிந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, ஞானதேசிகனை சஸ்பெண்ட் செய்தார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ் யுத்தம்

தற்போது மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் வரும் பொருளாதார விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு செயலாளர் பதவியில் சக்தி கந்ததாஸ் ஐ.ஏ.எஸ். உள்ளார். இவர், 1980-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், 1982-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக அரசு நிர்வாகத்தில் நடக்கும் விவகாரங்களை நன்றாக அறிந்தவர் சக்தி கந்ததாஸ். தற்போது நடந்துவரும் ரெய்டுகளின் பின்னணியில், தமிழகத்தைச் சேர்ந்த சில துடிப்பான அதிகாரிகள் டெல்லியில் செய்த லாபியாக இருக்கலாம் என்றும் தமிழக அரசுக்கு எதிராக ஒரு யுத்தத்தையே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சிலர் ஆரம்பித்து உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

ஜெட்லியின் க்ரீன் சிக்னல்!

அ.தி.மு.க ஆதரவு உயர் அதிகாரி ஒருவர், “வருமான வரி துறையினர் குறிவைத்தது, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனைத்தான். அவருடன் பலவகையில் தொடர்பில் இருந்தவர்கள் என்கிற பட்டியலை வருமான வரி துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தயாரித்தனர். அவற்றில் நான்கு பேரை முதலில் தேர்வுசெய்து ரெய்டு நடத்த முடிவெடுத்தனர். ஆட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்த கீர்த்திலால் ஜூவல்லரி உரிமையாளர்​களுக்கு செக் வைத்து, சிறு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க வி.ஐ.பி-களில் மேயர் சைதை துரைசாமியும் ஒருவர். அவருடைய அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி பற்றியும், நத்தம் விசுவநாதனுடன் இருந்த தொடர்புகள் பற்றியும் சைதை துரைசாமியின் அரசியல் எதிரிகள் ஆதாரங்களுடன் வருமானவரித் துறைக்கு அனுப்பினார்களாம். கடைசியாக, மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி நிர்வாகத்தைப் பற்றியும் சில தகவல்கள் வரவே, அதை எல்லாவற்றையும் கடைசியாக இந்த ரெய்டில் சேர்த்துக்கொண்டார்கள். ‘ரெய்டு நடத்துவதில் எந்தத் தயக்கமும் வேண்டாம்’ என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கிரீன் சிக்னல் கொடுத்தார்்.

சொத்துக் குவிப்பு தீர்ப்புக்கு சம்பந்தம் உண்டா?

‘தமிழக ஆளும் கட்சி மீது அளவுகடந்த கோபத்தில் இருக்கிறது மத்திய அரசு. ‘சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு முற்றிலும் மாறிவிட்டது. “சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, அ.தி.மு.க அரசின் ஒத்துழைப்பு தேவை என்பதற்காக, கடந்த ஆண்டே தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை ஓராண்டு தள்ளிவைத்தார் அருண் ஜெட்லி. நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி நிறைவேற்றப்படும்​போது, தி.மு.க ஆதரவு கொடுத்தது, அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது. தமிழகத்துக்கு புதிய கவர்னரை நியமிக்கும் விஷயத்தில்கூட மத்திய அரசு, அ.தி.மு.க. அரசுக்கு  சாதகமாக இருக்கவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து கவர்னரை நியமிப்பதுதான் பிரதமரின் திட்டம். இதெல்லாம் சேர்ந்துதான் இப்போது ரெய்டில் வந்து முடிந்திருக்கிறது.

%d bloggers like this: