பண்டிகைக்கால பட்ஜெட்… சமாளிப்பது எப்படி?

இது பண்டிகைக்காலம். கொண்டாட்டமும், செலவும் ஒருசேர நிகழும் காலகட்டம் என்பதால் மாத பட்ஜெட் போடுபவர்கள் கொஞ்சம் `ஜெர்க்’ அடித்து நிற்பார்கள். திட்டமிட்டால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கொண்டாடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்.

1. லிஸ்ட் போடுங்கள்

விநாயகர் சதுர்த்தி, பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என நீங்கள் கொண்டாடப் போகும் பண்டிகைகளின் லிஸ்ட் போடுங்கள். அவற்றுக்கு என்னவெல்லாம் தேவை, எது அவசியம், எது ஆடம்பரம் என எல்லாவற்றையும் குறித்துக்கொள்ளுங்கள்.

2. அவசியத் தேவைக்கு முன்னுரிமை

ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பதைப் பார்த்து உங்கள் பட்ஜெட்டை எகிற வைக்காதீர்கள். எது அத்தியாவசியமோ அதை மட்டுமே வாங்க பிளான் போடுங்கள். விளம்பரங்களில் மனதை அலைபாய விடாதீர்கள்.

3. துணிகள் – கவனம் தேவை

வேலைக்குச் செல்பவர்கள் அதிக துணிகள் வைத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். வீட்டில் உள்ளவர்களும் நீண்ட நாட்கள் உழைக்கும் ஆடைகளாகப் பார்த்து வாங்குங்கள். ஆஃபரை நம்பி குறைவான விலை ஆடைகளை அள்ள வேண்டாம். துணிகளுக்கு போடும் பட்ஜெட் என்பது முன்பின் இருக்கலாம் என்பதால், இறுக்கிப்பிடிக்காமல் கொஞ்சம் கூடுதலாக பணம் ஒதுக்குங்கள்.

4. ஸ்வீட்டை ஸ்வீட்டாக்க…

கடைகளில் விண்ணைத் தொடும் விலையில் விற்கும் ஸ்வீட்களை வாங்குவதை விட, வீட்டிலேயே தெரிந்த ஸ்வீட்களை செய்யுங்கள். அது முடியவில்லை என்றால், ஸ்வீட் செய்து தரும் இல்லத்தரசிகளிடம் ஆர்டர் செய்து வாங்குங்கள். விலை குறை வாகவும், தரமானதாகவும் இருக்கும். இல்லையென்றால், ஸ்வீட் மாஸ்டரை அழைத்து ஸ்வீட் செய்ய வைத்து வாங்கலாம்.

5. சல்யூட் செய்வோம்… சாலையோர கடைக்கு!

பண்டிகைக்குத் தேவையான தோரணப் பொருட்கள், கோல மாவு, மெழுகுவத்திகள் என ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய அலங்காரப் பொருட்களை  சாலையோரக் கடைகள் மற்றும் குடிசைத்தொழில் செய்வோரிடம் வாங்கினால் பணம் மிச்சப்படுத்தும் சாக்கில் அவர்களுக்கு உதவவும் முடியுமே! 

6. இடைவெளி கொடுங்கள்

ஒரு பண்டிகைக்கும் அடுத்த  பண்டிகைக்கும் இடையே பத்து நாட்கள் முதல் நாற்பத்தைந்து நாட்கள் வரை இடைவெளி இருக்கிறது. எனவே, ஒரே பண்டிகையில் அனைத்துப்பொருட்களையும் வாங்கிவிட நினைக்க வேண்டாம். கையிருப்பு, போனஸ், ஆஃபர் என அனைத்தையும் பொறுத்து தேவைப்படும் பொருட்களை வாங்கினால், அன்றாட செலவுகளுக்கு அல்லல்பட வேண்டியிருக்காது.

7. செலவுக்கு முதலீடு செய்யுங்கள்

எதற்கெடுத்தாலும் இ.எம்.ஐ-யில் வாங்குவதை விட அதற்குக் கொடுக்க நினைக்கும் பணத்தை கணக்கிட்டு, முன் ஏற்பாடாக குறிப்பிட்ட தொகையை  மியூச்சுவல் ஃபண்டு போன்ற குறைந்த ரிஸ்க் உள்ள முதலீட்டில் சேமிக்கலாம். 

உதாரணமாக, 2019 அக்டோபரில் ஐந்து லட்சம் மதிப்பு கொண்ட ஒரு காரை, 12% வட்டிக்கு மூன்று வருட இ.எம்.ஐ-யில் வாங்க இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 16,443 ரூபாய் வங்கியில் செலுத்த வேண்டியதிருக்கும். மூன்று வருட முடிவில் 16,443×36 = 5,91,948 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள். இதற்குப் பதிலாக, இன்றிலிருந்தே நீங்கள் இ.எம்.ஐ கட்ட நினைக்கும் தொகையை எஸ்.ஐ.பி (SIP), எஸ்.டபுள்யூ.பி(SWP) முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 12% சராசரியாக லாபம் கிடைக்கும் பட்சத்தில் மாதம் 11,492 ரூபாய் வீதம் மூன்று வருடம் முதலீடு செய்யும்போது மூன்று ஆண்டுகள் முடிவில் ஐந்து லட்ச ரூபாய் கிடைத்து விடும்.

இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் செலவிட்ட தொகை 11,492×36 = 4,13,712 ரூபாய் மட்டுமே. இது காருக்கு மட்டுமல்ல… இ.எம்.ஐ மூலம் வாங்கும் அத்தனை பொருட்களுக்கும் பொருந்தும். 

8. பயணத்தைத் திட்டமிடுங்கள்

பண்டிகை என்றதுமே முதல் நினைவு பயணம்தான். ஊருக்குச் செல்வது என்பது திட்டமிடப்பட்டால், நான்கு மாதங்களுக்கு முன்பே ரயில் மூலமாக முன்பதிவு செய்துவிடுங்கள். இல்லையென்றால், பழைய பஸ்ஸில் சாதாரண நாட்களில் விற்கும் டிக்கெட்டின் விலையைவிட மூன்று மடங்கு அதிகமாக கொடுத்து, பயணமும் கெட்டு, மனதும் அவதிப்பட வேண்டியது வரும். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் பார்த்துப் பார்த்து திட்டமிட்டு செய்வதுதான் நல்ல பட்ஜெட்.

வரவிருக்கிற பண்டிகை காலங்களை, உங்கள் திட்டமிடலால், இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துகள்!”.

%d bloggers like this: