புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை!-விகடன்

நத்தம் செய்த குத்தம்

புளி வியாபாரத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் வரை உயர்ந்தவர் நத்தம் விசுவநாதன். கடந்த அ.தி.மு.க. அமைச்சரவையில் மூன்றாவது இடம் என புகழின் உச்சிக்கு போனார். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விசுவநாதன் முதல்முறை அமைச்சராகி 22 நாட்களில் பதவியை பறிகொடுத்தார். அன்றைய தினம் சென்னையில் ஒரு ஹோட்டலில் அமர்ந்துக்கொண்டு, ‘‘அடுத்து என்னச் செய்ய, 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறதே’’ என, தனது மனைவி மற்றும் தம்பியிடம் புலம்பித் தீர்த்த விசுவநாதனின் சொத்து மதிப்பு அடுத்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் உயர்ந்தது. தனது பூர்வீக சொத்தாக 13 ஏக்கர் நிலம் மட்டுமே பாகப்பிரிவினையில் கிடைத்தது. ஆனால், இன்றைக்கு எங்கோ உயர்ந்திருக்கிறார். இந்த வளர்ச்சி எப்படி சாத்தியமானது? புலி வாலைப் பிடித்த புளி வியாபாரியின் கதை இது!

ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கும்போதே தன் வீட்டில் ரெய்டு நடக்கும் என விசுவநாதன் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார். வருமானவரி துறையினர் சோதனைக்குப் பிறகு அமைப்பு செயலாளர், ஊடகத் தொடர்பாளர் பதவிகளும் பறிபோக விசுவநாதனுக்கு சோதனை மேல் சோதனை. விசுவநாதன் பற்றி நன்கறிந்தவர்களிடம் பேசினோம். ‘‘விசுவநாதனின் சொத்து வளர்ச்சியில் முக்கியமான பங்கு அவரது மகன் அமர்நாத்துக்கு உண்டு. அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லாதவராகக் காட்டிக்கொள்ளும் அமர்நாத் வியாபாரத்தில் புலி. பல்வேறு துறைகளில் உள்ள பிசினஸ் பிரபலங்களை நண்பராக்கிக்கொண்டார். அவர்கள் மூலமாக பல முதலீடுகளை செய்திருக்கிறார். பியர்லெஸ் பங்குதாரர்களில் ஒருவரான லோதா என்ற மும்பையைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஒருவர்தான், இவருக்கு முக்கிய ஆலோசனைகள் சொல்லக்கூடியவர். லண்டனில் ஓக்லி பிராப்பர்டி சர்வீஸ், நியூயார்க்கில் ஒரு ஹோட்டல், மலேசியாவில் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுரங்கங்கள் என விசாரிக்க விசாரிக்க நீண்டுகொண்டே செல்கிறது பட்டியல். சென்னையைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சுமார் பல கோடிகளுக்கும் மேல் அமர்நாத் முதலீடு செய்திருக்கிறார். அந்த நிறுவனம் கிழக்குக் கடற்கரை சாலையில் கட்டும் ஒரு குடியிருப்புக்கு ‘அமரேந்திரா‘ என பெயர் வைத்திருக்கிறார்கள். அதானி குழுமத்துடனான அமர்நாத்தின் தொடர்புதான் விசுவநாதனுக்கு எதிராக தலைமையை யோசிக்க வைத்த முதல் நிகழ்வு. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,000 ஏக்கரில் 1,400 கோடி முதலீட்டில் அதானி குழுமம் தொடங்கவுள்ள சோலார் மின் உற்பத்தி திட்டதுக்காக, குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, அதானி குழுமத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அமர்நாத் ஆட்களுக்கு கைமாறியதாக உளவுத் துறை நோட் போட்டது.

சட்டசபை தேர்தல் நேரத்தில் கரூரில் அன்புநாதன் வீட்டில் ஐந்து கோடி ரூபாயோடு ஆம்புலன்ஸ் வேன், பணம் எண்ணும் இயந்திரங்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. அன்புநாதனை, விசுவநாதனுக்கு அறிமுகப்படுத்தியதே அமர்நாத்தான். இவர் மூலமாகவும் பல முதலீடுகளை அமர்நாத் செய்துள்ளார். வாக்காளர்களுக்கு தருவதற்காக அன்புநாதன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தை வருமானவரி துறைதான் சோதனை போட்டு கைப்பற்றியது. அந்தப் பணம் பற்றிய விவகாரங்களை தோண்டி துருவியது வருமானவரி துறை. அதன் வெளிப்பாடுதான் இப்போது விசுவநாதன் வீட்டில் நடந்த ரெய்டு. அன்புநாதனின் பல தொழில்களில் அமரின் பணம் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் ரகசிய விசாரணை நடத்திய பிறகுதான் சோதனை நடத்தப்பட்டது.
பிசினஸ் போலவே, கிரிக்கெட்டிலும் அமர்நாத்துக்கு ஆர்வம் அதிகம். நத்தம் என்.பி.ஆர். கல்லூரியின் நிழல் இயக்குநராக செயல்பட்டு வரும் அமர், அந்தக் கல்லூரியில் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் பணியை சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கினார். அதற்காக கிரிக்கெட் சங்கங்களின் நிர்வாகிகளிடம் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டவர், படிப்படியாக முன்னேறி, இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களின் நட்பையும் பிடித்தார். தோனி உள்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் இந்த மைதானத்துக்கு வந்திருக்கிறார்கள். ரஞ்சிக்கோப்பை போட்டிகளும் இங்கு நடந்திருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். போட்டிகள் இந்த மைதானத்தில் நடந்தன. பலநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த மைதானத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய சம்பவங்கள் மீடியாக்களில் இடம் பெற்றன. நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ், ‘உலக அளவில் உள்ள அழகான மைதானங்களில் இதுவும் ஒன்று. தென் ஆப்பிரிக்கா கேப்டவுன் மைதானத்தைப் போல, மிக அழகாக, அற்புதமான இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ளது’ என சொல்லியிருக்கிறார். அந்த அளவுக்கு மைதானத்துக்காக பெரும் பணம் கொட்டப் பட்டிருக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த மைதானம் என பி.சி.சி. சான்றிதழ் அளித்திருக்கிறது. நத்தம் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியைக் காண அழகிரி இரண்டு முறை வந்துப் போனார். இதை அ.தி.மு.க தலைமை சீரியஸாகப் பார்த்தது.

விசுவநாதன் மின் துறை அமைச்சராக இருந்தபோது நிலக்கரி இறக்குமதி செய்தது, அதிக விலைக்கு வெளிமார்க்கெட்டில் மின்சாரம் கொள்முதல் செய்தது அப்போதே சர்சையை எழுப்பியது. இதை தோண்டி துருவிய போதுதான் கிரிக்கெட் போட்டிக்காக அவர் களது கல்லூரியில் விழுந்த மீடியா வெளிச்சம், மத்திய, மாநில அரசுகளின் கண்களை உறுத்தியது. இதெல்லாம் சேர்ந்துதான் இப்போது வீழ்ச்சி அடைந்திருக்கிறார்’’ என்றார்கள். ரெய்டின்போது நத்தம் விசுவநாதனின் டைரி ஒன்றில், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஒருவரின் வீட்டில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ள விவரம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தேர்தலில் தோற்றப் பிறகும் அமைப்பு செயலாளர், ஊடகத் தொடர்பாளர் பதவியை விசுவநாதனுக்கு தலைமை வழங்கியது. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மந்திரி ஆகிவிடலாம் என்ற  விசுவநாதனின் ஆசை நிராசையாகிவிட்டது. 
அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பு வரை சென்று மறுபடியும் தொடங்கிய இடத்திலேயே நிற்கும் விஸ்வநாதனின் கதை அதிகார போதையில் ஆட்டம் போடும் அரசியல்வாதி களுக்கு ஒரு பாடம்.

%d bloggers like this: