தோல்வி நல்லது

குழந்தைகளை மையப்படுத்தி, “டிவி’யில் இன்று, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தோல்வியடையும் போது, அழுவதை காண்பித்துக் கொண்டே இருக்கின்றனர். இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலர், எதிர்ப்பையும் காண்பித்துள்ளனர். தோல்வி மற்றும் வெற்றியின் சாராம்சங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய பொறுப்பு பெற்றோரிடம் அதிகம் உள்ளது.

ஒரு குழந்தை, எல்லா முயற்சிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றால், பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். குழந்தையின் மனதில் தோல்வியே எனது வாழ்க்கை என்ற மனப்பான்மை உருவாக வாய்ப்புள்ளது. அந்த மனப்பான்மை உருவாகிவிட்டால், அதற்கு பின், குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் போய் விடும்.
பெற்றோர், குழந்தைகளை புதிய முயற்சிக்கு ஊக்கப்படுத்த வேண்டும். பழைய சூழலில் ஏற்பட்ட தோல்விகள், புதிய சூழ்நிலையில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும், புதிய சூழ்நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதையும் உணர்த்த தவறக் கூடாது. வெற்றியடைந்தால் சந்தோஷத்தில் குதிப்பதும், தோல்வியடைந்தால் அழுவதும் குழந்தைகளின் இயல்பு. இந்த இரண்டையுமே பெற்றோர் ஊக்குவிக்கக் கூடாது. வெற்றி, தோல்வியை வைத்து, குழந்தைகளை மதிப்பிடவும் கூடாது.
குழந்தை வெற்றியடையும் போது, காண்பிக்கும் உற்சாகத்தை விட, தோல்வியடையும் போது, கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா சமயங்களிலும், ஒரே மாதிரியான பாசத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்த குழந்தைகளுடன், ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்; பேசினால், நம்மால் முடியாது என்ற எண்ணம், குழந்தைகளின் மனதில் ஏற்பட்டு விடும்.

%d bloggers like this: