புதுசா… இளசா… அழகா… – ரிலாக்ஸ் ப்ளீஸ்

“அதிகாலை குட்டி தூக்கம், முகப்பருவை விரட்ட ஹெல்த்தி டயட், தோழிகளுடன் அவுட்டிங் என தனக்கான நேரங்களை திருமணத்துக்குப் பிறகு தொலைத்துவிட்டு, கணவர், குழந்தை என தங்களது முழு நேரத்தையும் குடும்பத்துக்காகவே செலவழிக்கும் பெண்கள், தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை ரசித்துச் செலவழித்தால்,

தங்களை என்றும் புத்துணர்வாக வைத்துக் கொள்ள முடியும்” என அறிவுறுத்துவதுடன், அதற்கான ஆலோசனைகளையும் தருகிறார், அவதார் கேரியர் க்ரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் செளந்தர்யா ராஜேஷ்.

புத்தம்புது காலை
தினமும் காலை அரக்கப்பரக்க எழுந்து குழந்தை மற்றும் கணவரை பள்ளி/அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டு, உடனே அடுத்த வேலையை  கையில் எடுக்காதீர்கள். உங்களுக்கான ஒரே ஒரு மணி நேரத்தை உருவாக்குங்கள். நியூஸ்பேப்பர் படித்துக் கொண்டே விரும்பிய பாடல் கேட்பது, நேற்று படித்த புத்தகத்தைத் தொடர்வது என விரும்பும் வண்ணம் செலவழியுங்கள்.
நமக்கு நாமே
உங்களது அனைத்துத் தேவைகளுக்கும்  மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். கார் அல்லது டூவீலர் ஓட்டத் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகு வெளியில் சென்று குடும்பம்/தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள். மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், சமையல் எரிவாயு போன்ற தேவைகளை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் கட்டுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், போஸ்ட் ஆபீஸ் என சேவிங்ஸ் பற்றியும் அறிந்துகொண்டு களம் இறங்குங்கள். அப்புறமென்ன… `எங்கம்மாவுக்கு எல்லாமே தெரியும்’, `என் வொஃய்ப் செம பிரில்லியன்ட்’ போன்ற புகழாரத்தைக் காது குளிர கேளுங்கள்!
மேம்படுத்திக்கொள்ளுங்கள்
குடும்பத்தைக் கவனித்தது போக உங்களுக்கான நேரத்தைக் கண்டுபிடியுங்கள். உங்களுக்கு விருப்பமான கோர்ஸ் என்ன படிக்கலாம் என்று பாருங்கள். சமையல்கலை, அழகுக்கலையில் ஆரம்பித்து டேலி, ஐ.சி.டபிள்யூ.ஏ என பலவகை படிப்புகள் உள்ளன. வீட்டிலிருந்தபடியே படிக்கக்கூடிய படிப்புகளும் இதில் அடங்கும். ஆர்வம் மற்றும் திறமையைப் பொறுத்து உங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.
ஆரோக்கிய வாழ்வு
குடும்பத்தாரின் உடல்நலம் முதல் உடை, நடை வரை அனைத்திலும் அக்கறை காட்டும் நீங்கள், உங்களுக்கான நலனிலும் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். குடும்பத்துக்கான மாத பட்ஜெட்டில் உங்களுக்காகவும் ஒரு சிறிய தொகையை ஒதுக்கிக்கொள்ளுங்கள். முதுகுவலியில் ஆரம்பித்து மூட்டுவலி வரை, உங்களின் உடல் நலக் குறைவுகளுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். அதோடு, ஐப்ரோ த்ரெடிங், ஹேர் கட், ஃபேஷியல் என உங்களது தோற்றத்துக்கான சிறு மெனக்கெடலையும் செய்தால் தன்னம்பிக்கை மிகுந்த அழகு தேவதையாக ஜொலிக்கலாம்!
திறமைக்கு அங்கீகாரம்
ஆங்கிலத்தில் ‘Rise to the fullest of your Potential’ என்று சொல்வார்கள். அதாவது, செய்கிற செயலில் நம்முடைய முழுத்திறமையை செலுத்துவது. நன்றாக சமைக்கத் தெரிந்தால், ப்ளாக் தொடங்கலாம். ஹிந்தி நன்றாக படிக்க, பேச தெரியும் என்றால், அருகில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கலாம். தையல்கலை தெரிந்தால் அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்கு தையல் வகுப்பு எடுக்கலாம். இப்படி வீட்டிலிருந்தபடியே உங்கள் திறமைக்கான அங்கீகாரத்தை தேடிக் கொள்ளுங்கள்.
குடும்பம் மற்றும் வேலை

வாழ்க்கையை வளமாக்கிக்கொள்வதற்குதானே வேலை செய்கிறீர்கள். அதனால் வேலை, குடும்பம் இரண்டையும் விரும்பி பாருங்கள். `ஆபீஸ்ல எவ்ளோ பிரஷர் இருக்கு தெரியுமா? வீட்டுக்கு வந்தா சும்மா நொய் நொய்ங்குற’ என வேலையில் உள்ள மன அழுத்தத்தை வீட்டில் காட்டாதீர்கள். உங்களைப் போலவே உங்கள் கணவர், மாமியார் ஆரம்பித்து பிள்ளைகள் வரை அவரவருக்கு ஏற்ப பிரஷர் இருந்து கொண்டுதானே இருக்கும்? அதனால் வேலை, குடும்பம் என இரண்டையும் அழகாக பேலன்ஸ் செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

நட்பு வட்டம்

உங்களுடைய நட்பு வட்டத்தை புதுப்பியுங்கள். எடுத்ததுமே `இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது?’ என சலிப்படை யாதீர்கள். இருக்கவே இருக்கிறது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பல டெக்னாலஜிகள். தினசரி சில நிமிடங்கள் நட்பு வட்டத்துடன் செலவழிக்கும்போது மனம் இலகுவாகும்; புது தெம்பு பிறக்கும்; புது விஷயங்கள் கண்ணுக்கு புலப்படும்; புதிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். அதனால் நட்பு வட்டத்தை எதற்காக வும் இழந்துவிடாதீர்கள்.
எனக்கான நாள்
வழக்கமான உங்களது வேலைகளை, வாரம் அல்லது மாதம் ஒருமுறை உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு… அன்று மட்டும் நீங்கள் கண்காணிப்பாளராக மாறிவிடுங்கள். அவர்கள் மல்லுகட்டி திணறும் காட்சிகளை ரசித்துக் கொண்டே… அவற்றை எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுங்கள். முடிந்த அளவு வீட்டு வேலைகள் அனைத்தையும் குடும்பத்தினருக்கு கற்றுக்கொடுங்கள். ஏதோ ஒரு அவசரகாலத்தில் அது கைகொடுக்கும் என்பதை உணர்த்துங்கள்.

ஒரு மறுமொழி

 1. Excellent anna. Keep it
  Regards
  Raja

  Raja

  2016-09-23 7:37 GMT+01:00 உங்களுக்காக :

  > vayal posted: ““அதிகாலை குட்டி தூக்கம், முகப்பருவை விரட்ட ஹெல்த்தி டயட்,
  > தோழிகளுடன் அவுட்டிங் என தனக்கான நேரங்களை திருமணத்துக்குப் பிறகு
  > தொலைத்துவிட்டு, கணவர், குழந்தை என தங்களது முழு நேரத்தையும்
  > குடும்பத்துக்காகவே செலவழிக்கும் பெண்கள், தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை ர”
  >

%d bloggers like this: