த்ரில்லர் செல்ஃபி – உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்!

செல்ஃபி – இந்த வார்த்தைதான் மிகக் குறுகிய காலத்தில் உலகில் அதிக மக்களை சென்றடைந்த ஒரு வார்த்தை என்கிறது ஓர் ஆய்வு. `அன்பு சூழ் உலகு’ என்றிருந்ததை இப்போது ‘செல்ஃபி சூழ் உலகு’ என்றே சொல்ல வேண்டும். கல்யாணம் முதல் கருமாதி வரை சகல இடங்களிலும் செல்ஃபி வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் 200

கோடி புகைப்படங்கள் இந்தத் தளங்களில் பகிரப்படுகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி… இன்னபிற சினிமா பிரபலங்கள் என யாரையும் செல்ஃபி மோகம் விட்டுவைக்கவில்லை. அவர்கள் அப்படி என்றால், இளைஞர்களையும் டீன் ஏஜ் குழந்தைகளையும் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? இந்த செல்ஃபி மோகத்தால் சிறு பிரச்னைகளில் இருந்து உயிர்ப்பலி வரை நாம் ஏராளமான சிக்கல்களை தினமும் கடந்து செல்கிறோம்.

செல்ஃபி விபத்துகள்

செல்ஃபியின் பயன்பாடும் சுவாரஸ்யங்களும் அதிகரித்து வரும் அதேவேளையில் செல்ஃபிக்காக நிஜமாகவே உயிரை விடுகிறவர்களும் இருக்கிறார்கள் என்பது வேதனை செய்தி. உயரமான கட்டடங்கள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், வன விலங்குகள் என எதற்கு அருகிலும் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்கிறபோது, எதிர்பாராதவிதமாக பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பதாக ஓர் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 2015-ம் ஆண்டில், உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களின் எண்ணிக்கை 27. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியரே. ரயில் வரும்போது, 60 அடி உயரமான கட்டடத்தில் இருந்து என ஆபத்தான பகுதிகளில் விபரீதம் அறியாமல் நடந்துகொண்டதால் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் 16 இடங்களில், செல்ஃபிக்கு தடை உள்ளது என்பதோடு, ‘No selfie zone’ போர்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டிலோ இன்னும் சோகம்… திருப்பூரில் குடிபோதையில் நல்ல பாம்புடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக இறந்தார். நாமக்கல்லில் உயரமான பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் தலைகுப்புற விழுந்து உயிரிழந்து இருக்கிறார். நாகர்கோவிலில் கடலில் நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த ஒரு தம்பதி அலையில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர். கொடுமையிலும் கொடுமையாக… அண்மையில் சென்னை சிறுவன் ஒருவன் ரயில் செல்ஃபியில் உயிரிழந்தான். கோவையில் +2 மாணவன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, 120 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து மூழ்கிப்போனான். அவனது உடலை மீட்கவே 3 நாட்கள் போராட வேண்டியிருந்தது. தீயணைப்பு மீட்புப்படை, கடற்படை வீரர்களாலும் முடியாதுபோக, தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளிப்போர் வந்த பிறகே உடலை காண முடிந்தது.

செல்ஃபி பிரச்னைகள்

செல்ஃபியினால் சர்ச்சைகள், விபத்துகள் மட்டுமல்ல… பிரச்னைகளும் உருவாகின்றன. ரிப்பேர் ஆன செல்போனை சரிசெய்ய கொடுத்திருக்கிறார் ஒரு மாணவி. அதிலிருந்த செல்ஃபிக்களை அந்தக் கடைக்காரன் சமூக வலைதளங்களில் வெளியிட, அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார் அந்த மாணவி. இவ்வுளவு ஏன்… சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட வினுப்பிரியாவின் செல்ஃபி புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டதால்தான் அந்த பெண்ணும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மும்பையில் பிரபல வங்கியொன்றில் அதிகாரியாக இருந்த இளம்பெண், குளிக்கும்போதும் உடை மாற்றும்போதும் செல்ஃபி எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார். அதை, நெருங்கிய நண்பன் ஒருவன் திருடியிருக்கிறான். பிறகு, தன் கடனை அடைப்பதற்காக வங்கி அதிகாரியான நண்பனின் காதலிக்கு அந்தப் படங்களை அனுப்பிவைத்து பேரம் நடத்தியுள்ளான். அதிர்ந்துபோன காதலி, போலீஸில் சொல்ல… அகப்பட்டான் கயவன். இப்படிச் சில பெண்கள் அவசரத்தில் எல்லாவற்றையும் செல்ஃபி எடுத்து அனுப்பிவிட்டு அவஸ்தைப்படுகிறார்கள்.

செல்ஃபி – உடலியல் பாதிப்புகள்

செல்ஃபி, உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. ஸ்மார்ட் போன் மூலம் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், சருமம் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மொபைலில் இருந்து வெளிப்படும் ஒளி எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றம் ஏற்படுகிறது. சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டு.

செல்ஃபி – உளவியல் பாதிப்புகள்

‘அதிகமாக செல்ஃபி எடுக்கும் மனநிலை  ஒருவித உளவியல் பாதிப்பே’ என்பதை அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ. உறுதிபடுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு ‘செல்ஃபிட்டிஸ்’ (Selfitis) என்று பெயரிட்டுள்ளனர். சிலர், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபிக்களாவது எடுப்பார்கள். இவர்கள் அதை ரசிப்பதோடு சரி. சமூக வலைதளங் களில் வெளியிடமாட்டார்கள். இவர்கள் முதல் வகையைச் சேர்ந்த பார்டர்லைன் செல்ஃபிட்டிஸ் (Borderline selfitis). அடுத்து, இரண்டாவது வகையைச் சேர்ந்த அக்யூட் செல்ஃபிட்டிஸ் (Acute selfitis). இவர்கள், ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபி எடுத்து, மூன்றையுமே சமூக வலைதளங்களில் பதிவுசெய்து… அதன் லைக் மற்றும் கமென்ட்டுகளை கவனிப்பவர்கள். மூன்றாவது வகை க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் (Cronic selfitis). இவர்கள் நாள் முழுவதும் செல்ஃபி எடுத்து… அதை அப்படியே சமூக வலைதளங்கள், குழுக்களில் பதிவுசெய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. இக்கோளாறை ஓ.சி.டி. (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இப்போது வரை இதற்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்புச் சிகிச்சை’ மூலமாக தற்காலிகத் தீர்வுதான் காணமுடியும் என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்.

ஒரு தாயின் குரல்

‘‘என் மகன் 12-ம் வகுப்பு படிக்கும்போது அதிகமாக செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தான்.  எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை எண்ண ஆரம்பித்துவிட்டான். நாளாக நாளாக லைக்குகள் வரவில்லை என்பதற்காக வருத்தப்பட ஆரம்பித்தான். ஒருகட்டத்தில் படிப்பிலும் நாட்டம் இல்லாமல் போனபோதுதான், எங்களுக்குப் பிரச்னையின் வீரியம் புரிந்தது. அதற்குப் பின் மனநல மருத்துவர்களிடம் கவுன்சலிங் சென்று இப்போதுதான் கொஞ்சம் சரியாகி இருக்கிறான். இருந்தாலும், எங்களுக்கு கவலையாகவும் பயமாகவும்தான் இருக்கிறது. இவனைப் பார்த்து இவனுடைய தங்கையும் செல்ஃபி எடுக்க ஆரம்பித்து இருக்கிறாள். இப்போது ஸ்மார்ட் போன்களைப் பார்த்தால் எனக்கும் கணவருக்கும் அலர்ஜிதான்’’ என்று வருத்தப்படுகிறார் குடும்ப நிர்வாகி ஒருவர்.

 

மோகம் எப்படி நீங்கும்?

‘‘அடிக்கடி செல்ஃபி எடுப்பது மனநோயின் வெளிப்பாடே! தன்னைத் தானே அதிகம் விரும்புபவர்களும், தான் மட்டுமே அழகு என்று நினைப்பவர்களும் அடிக்கடி செல்ஃபி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுவதில் விருப்பம் கொண்டவர்களும், தன்னை மட்டுமே அடுத்தவர்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் செல்ஃபி மோகம் கொண்டு இருப்பார்கள். இவர்கள் தன்னம்பிக்கையைவிட, புற அழகை மட்டுமே முன்நிறுத்துவார்கள். இந்தக் கோளாறை பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். வர்ச்சுவல் உலகில் இருந்து அவர்களை வெளிக்கொணர்ந்து புதிய இடங்கள், புதிய மனிதர்களை அறிமுகப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே செல்ஃபி மோகத்துக்கு அடிமையாகும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிது. கொஞ்சம் எல்லை தாண்டிவிட்டாலும் ஆபத்துதான்.

செல்ஃபி என்பது திடீரென்று வந்த ஒரு விஷயம் அல்ல… தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது, பாராட்டிக்கொள்வது என்பதன் அடுத்த பரிமாணம்தான் செல்ஃபி. இப்போது கேட்ஜட்டுகளின் யுகம் என்பதால்தான் செல்ஃபி அதிக கவனம் பெறுகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் இதை பேச வைக்கிறது. தான் வித்தியாசமானவள், தன்னை மற்றவர்கள் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டும் என்கிற நினைப்பில் ரயில் பாலம், உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுக்கும்போது விபத்துகள் நடக்கின்றன. குழந்தைகள் எல்லாவற்றுக்குமே சீக்கிரம் பழகிவிடுவார்கள். அதனால், அவர்களின் கையில் ஸ்மார்ட் போன்களை கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். `லைக்’ வரவில்லை என்று நினைத்து வருத்தப்படும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். எப்போதும் எல்லோரும் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று நினைக்கும் குழந்தைகளும் இந்த விஷயத்தில் சீக்கிரம் அடிமையாகி விடுவார்கள்” என்று எச்சரிக்கிறார் உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.

இனி பெற்றோரின் கையில்தான் இருக்கிறது செல்ஃபி மோகத்தைக் கட்டுப்படுத்தும் அன்பு ஸ்டிக்!

%d bloggers like this: