ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்… பெண்களுக்கு அவசியம்!

பொதுவாக, கர்ப்பம் தரித்த பெண் களுக்கு மருத்துவர் வழங்கும் மாத்திரை ஃபோலிக் ஆசிட். இதை திருமணம் முடிந்த நாளில் இருந்தே அந்தப் பெண் எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் நிச்சயதார்த்தம் முடிந்ததில் இருந்தே பெண்கள் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம், கரு

வளர்ச்சிக்கான ஊட்டச்சத்தை தரக்கூடியது மட்டுமல்ல ஃபோலிக் ஆசிட். கருத்தரித்தல், கரு தங்கலுக்கான ஆரோக்கியத்தை பெண் உடலில் மேம்படுத்த இது துணைபுரிகிறது” என்று வலியுறுத்துகிறார், சென்னையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் மைதிலி. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் பற்றி அவர் தந்த விரிவான தகவல்கள் இங்கே…

 

கருவுற்ற பெண்களுக்கு…

இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு விட்டமின் – பி குறைவாக உள்ளது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதோடு, மகப்பேறு பிரச்னைகளும் உருவாகின்றன. கரு உண்டாவதில் பிரச்னை, கரு தங்கலில் பிரச்னை, குழந்தை வளர்ச்சியின்மை, குறைபாடுடைய குழந்தை பிறப்பு போன்ற சிக்கல்களை பெண்கள் பலர் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே, மருத்துவர்கள் விட்டமின் – பி9 நிறைந்த ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை கருவுற்ற பெண் களுக்குப் பரிந்துரைக்கிறார்கள்.

கர்‌ப்பகால‌த்‌தி‌ல் பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், கருவின் வள‌ர்‌ச்‌சி‌க்காகவு‌ம், தா‌யி‌ன் ஹீமோகுளோபின் அளவு அ‌திக‌ரி‌க்கவு‌ம், குழந்தையின் `டிஎன்ஏ’ வளர்ச்சிக்கும் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமானது.

‘‘உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருக்கும் பெண் எனில், திருமண நாளில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிடத் தொடங்கலாம். மருத்துவ ஆலோசனையுடன் திருமணத்துக்கு 3 மாதங்கள் முன்பிருந்தேகூட எடுத்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கானது மட்டுமல்ல!

ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் கர்ப்பிணி களுக்கானது மட்டுமல்ல. ஹீமோகுளோபின் அளவு குறைந்து ரத்தசோகை உள்ள பெண்கள், சிறுவயதாக இருந்தாலும், அது கண்டறியப்பட்ட நாளில் இருந்து மருத்துவ ரின் ஆலோசனையோடு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம். ஏனெனில், ஹீமோகுளோபினை இரும்புச்சத்து மாத்திரை களால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது.

பலன்கள் பலவிதம்!

ஃபோலிக் ஆசிட் மாத்திரையைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து தற்காப்பு பெறலாம். குடல் பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகப் பாதிப்பு உடைய ஆண்களுக்கும் மருத்துவர்கள் ஃபோலிக் ஆசிட் மாத்திரையைப் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகள்

சிறுவயதில் இருந்தே காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், புரோக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், லெட்யூஸ், முளைகட்டிய பயறு, சிக்கன் வகைகள் சாப்பிடும்போது, ரத்தசோகை பிரச்னை அண்டாமல் தவிர்க்கலாம். உடலுக்குத் தேவையான விட்டமின் பி சத்து உணவில் போதுமான அளவில் கிடைக்காதபோது, அதை மாத்திரைகளாக எடுத்துக்கொள்வது அவசியம். கர்ப்பிணிகள் விட்டமின் – பி9 நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் உடலுக்குப் போதாது என்பதால், அதனுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதும் அவசியம்.

சில பெண்களுக்கு ஃபோலிக் ஆசிட்டை ரத்தத்தில் கடத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால், அதற்கு மாற்றாக இப்போது எல்.மீத்தேல் போலேட் மாத்திரை பரிந்துரை செய்யப்படுகிறது” என்று விரிவாகச் சொல்லி முடித்தார் மருத்துவர் மைதிலி.

மொத்தத்தில், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் பெண் நலத்துக்கு உற்ற தோழி!


1000 மைக்ரோ கிராம் அளவுக்கு அதிகமாக உடலுக்கு விட்டமின் பி கிடைக்கும் வகையில் ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கொண்டால், முடிகொட்டுதல், ரத்த சர்க்கரை அளவு குறைதல், ரத்த அழுத்தம் குறைதல், வாந்தி, பேதி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மருத்துவர் ஆலோசனையுடனும், அவர் பரிந்துரைக்கும் அளவிலுமே இதை எடுத்துக்கொள்வது முக்கியம்.

%d bloggers like this: