பாத்திரங்கள்… பரணுக்கு அல்ல… பயன்படுத்த!

நம் சமையலறையில் அத்தியாவசியமாக இருக்கவேண்டிய பாத்திரங்கள் எவை? தேவைக்கு அதிகமாக பாத்திரங்கள் சேர்வதைத்

தவிர்ப்பது எப்படி? பாத்திரங்களைப் பராமரிக்கும் முறைகள் என்ன? ஆலோசனைகள் தருகிறார், கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி.

 

குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப பாத்திரங்கள்!

உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அதற்குத் தேவையான பாத்திரங்கள் மட்டுமே சமையல றையில் இருக்கட்டும். இருவர் உள்ள குடும்பத்துக்கு அதிகபட்சம் 4 தட்டுகள், 2 வாணலி, அரை டஜன் டம்ளர், பெரியது, சிறியது என 6 சர்விங் பவுல்கள், 2 செம்பு, 3 சூப் பவுல், 3 லிட்டர் குக்கர் ஒன்று, 6 லிட்டர் குக்கர் ஒன்று என அளவாகப் பயன்படுத்தும்போது பயன்பாடற்ற பாத்திரங்கள் இடத்தை அடைப்பதைத் தவிர்க்கலாம். வீடு மாறும் சூழல்களில் பேக் செய்யவும் எளிதாக இருக்கும். விருந்தினர் வருகையின்போது வாழை இலையைப் பயன்படுத்தலாம். அல்லது விருந்தினர்களுக்கு மட்டும் பயன்படுத்த என சில பாத்திரங்களை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

என்ன வகை பாத்திரங்கள்?

வயதானவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பீங்கான், கண்ணாடி போன்ற அழகுக்கான பாத்திரங்கள் வாங்க வேண்டாம். உறுதியான எவர்சில்வர் பாத்திரங் களே நல்லது. துருப்பிடித்தால் உடனே பயன்பாட்டில் இருந்து நீக்கிவிடவும். பக்கவிளைவுகளும் பல தீமைகளும் ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு கிச்சனில் ‘நோ என்ட்ரி’ சொல்வது நலம். அடிகனமான இரும்புப் பாத்திரங்கள் நீண்ட நாட்கள் உழைக்கும் என்பதால், அடிக்கடி பாத்திரம் மாற்றும் செலவிருக்காது.

ஒப்பீடு வேண்டாமே!

மற்றவர்களின் கிச்சனிலும் டைனிங் டேபிளிலும் பார்க்கும் பாத்திரங்கள் உங்கள் வீட்டிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் கடை கடையாக ஏறி இறங்காதீர்கள். எந்தப் பாத்திரம் என்றாலும்… அது அவசியமா, உங்கள் வீட்டுக்குப் பயன்படுமா என்பதை யோசித்தே வாங்குங்கள். பெரும்பாலான பாத்திரங்கள் பயன்படுத்தப்படாமல் பரணில்தான் தூங்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.

பாத்திரத்துக்கு ஏற்ற க்ளீனர்கள்!

வெள்ளிப் பாத்திரத்தை எலுமிச்சை தோலில் டிஷ் வாஷ் சோப்பு தொட்டு சுத்தம் செய்யலாம்… இரும்புநார் பயன்படுத்தக் கூடாது. பால் பாத்திரம் போன்ற அழுந்தத் தேய்க்க வேண்டிய பாத்திரங்களுக்கு தேங்காய் நார், ஸ்கிரப்பர் பயன்படுத்தலாம். இரும்புப் பாத்திரத்துக்கு ஸ்டீல் ஸ்கிரப்பர் சிறந்தது. பாத்திரங்களை சமையல் முடிந்த உடனேயே சுத்தம் செய்தால் சுலபமாக இருக்கும். கழுவிய பின் அவற்றை தண்ணீர் வடித்து காய்ந்த பின் எடுத்துவைத்தால் துருப்பிடிப்பதைத் தவிர்க்கலாம்.

ஆஃபர்களில் ஈர்ப்பு வேண்டாம்!

சமையல் பாத்திரங்களைப் பொறுத்தவரை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றோ, 6 பாத்திரங்கள் 2 ஆயிரம் ரூபாய் என்பதுபோன்ற ‘காம்போ’ ஆஃபர்களோ அடிக்கடி வழங்கப்படும். உதாரணமாக… 6 பொருட்கள் அடங்கிய அந்த காம்போவில், ஏதேனும் ஒரு பொருள் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக, மற்ற 5 பொருட்களையும் சேர்த்து வாங்கி வீணாக்க வேண்டாம். ஆஃபர் பொருட்களின் தரத்தையும் கவனிக்கவும்.

ஒன்றுக்குள் ஒன்று!

சமையலறைப் பாத்திரங்களை ஒன்றுக்குள் ஒன்று அடங்குவது போன்ற செட் ஆக வாங்கும்போது, அவை இடத்தை அடைக்காமல் அடுக்க வசதியாக இருக்கும்… கிச்சனும் நீட்டாக இருக்கும்.

%d bloggers like this: