வாட்ஸ் அப்: இஷ்டம் இல்லேன்னா விலகிப் போகலாம்

“நாங்கள் யாரையும் எங்கள் சேவையைப் பயன்படுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை. எங்கள் கோட்பாடுகளும் செயல்முறையும் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் எங்கள் சேவையைப் பயன்படுத்தாமல் விலகிச் செல்லட்டும்” என்று வாட்ஸ் அப் நிறுவனம் டில்லி உயர்நீதி மன்றத்தில் அண்மையில் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் “தனிநபர் தகவல்சார் கொள்கை” (privacy policy) குறித்து அந்த நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள வழக்கு விசாரிக்கப்படுகையில், மேலே தரப்பட்டுள்ள அறிவிப்பை வாட்ஸ் அப் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

எங்களுடைய தனி நபர் தகவல்கள் குறித்த கொள்கை மற்றும் விதி முறைகளைப் பிடிக்காதவர்கள், எங்களுடைய சேவையைப் பயன்படுத்தாமல் விலகிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
இதன் மூலம், வாட்ஸ் அப் அண்மையில் அறிவித்த தன்னுடைய புதிய தனிநபர் சார்ந்த கொள்கை வழிமுறையினை, செப்டம்பர் 25 முதல் அமல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், உங்களைப் பற்றிய தனி நபர் விருப்பங்களை, தகவல்களை, வாட்ஸ் அப் தன் விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும்.
வாட்ஸ் அப் பயன்படுத்தும் இரு இளைஞர்கள், வாட்ஸ் அப் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த வழக்கினைத் தொடுத்திருந்தனர். பயானளர்களுடைய தனிப்பட்ட தகவல்களை, வாட்ஸ் அப் விளம்பரதாரர்களுக்கு வழங்குவது வர்த்தக தர்மத்திற்கு எதிரானது என்றும், அதே போல, இதற்குப் பயனாளர்களின் ஒப்புதலைப் பெறும் வழியும் நீதிக்கு முரணானது என வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு தொடரப்பட்டவுடன், டில்லி உயர்நீதி மன்றம், வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு தவறானது என்று கருத்து தெரிவித்து, TRAI மற்றும் DoT அமைப்புகள் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டது. அதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, வாட்ஸ் அப் போன்ற கூடுதல் வசதிகளுடன் கூடிய சேவை நிறுவனங்களின் செயல்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாது என நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
வாட்ஸ் அப் வழி தரப்படும் தகவல் செய்திகள், பேஸ்புக் அமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால், அவை ‘மறை குறியாக்கம்’ (Encryption) செய்யப்படுவதால், அவற்றைப் பகிர்ந்து கொள்ள இயலாது. மேலும் அவை வாட்ஸ் அப் அமைப்பால், பதிவு செய்யப்படுவதோ, தேக்கி வைக்கப்படுவதோ இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடுத்த இளைஞர்கள், இது குறித்து நீதிமன்றம் பயனாளர்களின் செய்திகளையும், தனி நபர் தகவல்களையும் வாட்ஸ் அப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்ட விதிமுறைகளை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கேற்ற வகையில், ‘தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000ல்’ தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தவும் கேட்டுள்ளனர்.
இன்னும் இதில் இறுதித் தீர்ப்பு வரவில்லை.

%d bloggers like this: