கல்லா கட்டிய மேயர்கள்… கல்தா பின்னணி!

அ.தி.மு.க-வின் சிட்டிங் மேயர்கள் எட்டுப் பேருக்கு இந்த முறை சீட் தரப்படவில்லை. கமிஷன், முறைகேடு, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, உள்கட்சி வெட்டுக்குத்து என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது பற்றி பின்னணித் தகவல்கள்….

குப்பைகளை ஒளித்துவைத்தவர்!

ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்துவதால் நல்ல இமேஜுடன் வலம்வந்த சூழலில், சென்னை மேயராக வெற்றிபெற்ற சைதை துரைசாமி மீது ஏகத்துக்கும் மக்களிடம் எதிர்பார்ப்பு. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் வீதிகள்தோறும் குப்பைகளை ஒளித்துவைக்க நீலநிற தடுப்புகள் அமைத்து, சென்னையை நாறடித்தது மட்டுமே இவரது சாதனை (!). 2016 சட்டமன்றத் தேர்தலில், சென்னையில் உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்திலும் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி. இதற்கு சைதையின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என மேலிடத்துக்கு ரிப்போர்ட் போனது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என பல விவகாரங்களால் சைதை துரைசாமி கைகழுவப்பட்டார்.

வாய் பிளக்கவைத்த மேயர்!

வேலூர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர் கார்த்தியாயினி. “படித்தவர், புதுமுகம் என்பதால் கார்த்தியாயினிக்கு சீட் வழங்கப்பட்டது. மேயர் ஆனபிறகு, ஒரு ‘கார்ப்பரேட் நிறுவன சி.இஓ.’ என்ற நினைப்பில் செயல்பட்டார். நன்றி தெரிவிப்பதற்கு வந்ததைத் தவிர, வார்டுகள் பக்கம் அவர் தலைகாட்டவில்லை. இவரது கணவரின் வளர்ச்சியைக் கண்டு மக்கள் வாய் பிளக்கிறார்கள். இங்கு, கடந்த மாநகராட்சித் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க-வுக்கு, 2016 சட்டமன்றத் தேர்தலில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் படுதோல்வி . மாநகராட்சிப் பகுதிகளில் 27 ஆயிரம் வாக்குகளை தி.மு.க அதிகமாகப் பெற்றது. மேயர் மீது மக்களுக்கு உள்ள அதிருப்திதான் காரணம் என்று புகார்கள் பறந்தன. மேயர் பதவியை வைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டாரே தவிர, கட்சியை வளர்க்கவில்லை” என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

காலத்தே பயிர் செய்தவர்!

2011-ல் தூத்துக்குடி மேயர் ஆன சசிகலா புஷ்பா, 2014-ல் எம்.பி ஆனபிறகு, இடைத்தேர்தல் மூலம் மேயர் ஆனவர் அந்தோணி கிரேஸ்.

‘‘காலத்தே பயிர் செய் என்கிற பழமொழியை நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டார். கான்ட்​ராக்ட், மோசடி பில்கள் என மகன் கவியரசு மூலம் வருமானத்தைக் குவித்தார். வெள்ளக்காலங்களில் அவசரப் பணிகளுக்காகத் தரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்க்கு திறமையாக கணக்கு எழுதப்பட்டது. ஒன்பது நாட்களுக்கு ஒருமுறைதான் மாநகராட்சிக் குடிநீர் வீடுகளுக்கு வருகிறது. சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், குடிநீர் வழங்காமல் மக்களைத் தவிக்கவிட்டதுதான், தூத்துக்குடியில் அ.தி.மு.க வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனின் தோல்விக்குக் காரணம் என பேச்சு எழுந்தது. மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.பி.சண்முக​நாதனுக்கு ஆதரவாக இருந்து, சி.த.செல்லப்பாண்டியனைத் தோற்கடிக்க உதவினார் என்ற புகார், மேலிடத்துக்குப் போனது. அப்போது இருந்தே, அந்தோணி கிரேஸ் ஓரங்கட்டப்பட்டார்’’ என்றது அ.தி.மு.க. வட்டாரம்.    

காலி செய்த அமைச்சர்!

கோவை மாநகராட்சி மேயர், மாவட்டச் செயலாளர் என அடுத்தடுத்து உச்சத்துக்குப்​போனவர், ராஜ்குமார். கோவையில் மாநகர் மாவட்டச் செயலாளர், மாநகராட்சி மேயர் என பவர்ஃபுல்லாக இருந்த செ.ம.வேலுசாமியைக் காலிசெய்துவிட்டு, தனது அதிகாரத்தைப் பரவலாக்க விரும்பினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. மேயர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி விடுவிக்கப்பட்டபோது, பெரும் முயற்சி எடுத்து ராஜ்குமாரை மேயர் ஆக்கினார், அதிகாரம் முழுவதும் எஸ்.பி.வேலுமணியிடம்தான் இருந்தது. திடீரென, மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான அதிகாரங்களை ராஜ்குமார் பயன்படுத்த ஆரம்பித்தார். தன்னை மீறி இயங்குகிறார் என்றதும், ராஜ்குமாரின் மாவட்டச் செயலாளர் பதவியை வேலுமணி காலி செய்தார். தற்போது, ராஜ்குமாரின் மேயர் சீட் கனவும் காலி.

காவு வாங்கிய மேலிடம்!

2006, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விசாலாட்சிக்கு, கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கைநழுவியது. ஆனாலும், திருப்பூர் மாநகராட்சி மேயர் நாற்காலியில் அமரும் வாய்ப்பு 2011-ல் அவருக்குக் கிடைத்தது. “எங்கும் கமிஷன், எதிலும் கமிஷன் என விசாலாட்சி சிறப்பாகக் கல்லா கட்டினார். கமிஷன், கான்ட்ராக்ட் விவகாரங்களில் முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கும், விசாலாட்சிக்கும் கடும் மோதல்.  ‘மேலிடம்’ சம்பந்தப்பட்ட கான்ட்ராக்ட் ஒன்றுக்கு, கமிஷன் கொடுத்தால்தான் ஃபைல் நகரும் என்று கறார் காட்டியதால், சிக்கலில் மாட்டினார் விசாலாட்சி” என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். 

காலி செய்த ஸ்மார்ட் சிட்டி!

கட்சியில் சேர்ந்த உடனேயே மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், ஈரோடு மாநகராட்சி  மேயர்   என  உச்சத்துக்குப் போனவர்  மல்லிகா பரமசிவம். “செயல்படாத மாநகராட்சிப் பட்டியலில் முதலிடம் ஈரோட்டுக்குத்தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்குத் தேர்வான ஈரோட்டில் இருந்து சரியான நேரத்துக்குத் திட்ட வரைவு அனுப்பப் படவில்லை. அதனால், அதற்கான பணி தொடங்கப்படவில்லை.  பாதாளச்சாக்கடைத் திட்டம் நிறைவடையவில்லை. இப்படி எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் கமிஷனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு மாநகராட்சியை இயக்கியதால் மல்லிகாவுக்கு இந்த முறை வாய்ப்பு தரப்படவில்லை” என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.                     

‘பேடிகள்’ என சாடியவர்!

அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டராக இருந்து நெல்லை மாநகராட்சியின் மேயர் ஆனவர் புவனேஸ்வரி. “மாநகராட்சியில் உருப்படியான திட்டப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. பல திட்டங்களை வைத்து லஞ்சமும் ஊழலும்தான் தலைவிரித்து ஆடின. மாநகராட்சி மற்றும் அரசு நிதியில் இருந்து 80 லட்சம் ரூபாயை எடுத்து கட்சி விழாவை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு புவனேஸ்வரியால் பதில் சொல்ல முடியவில்லை. தன்னை எதிர்த்த சொந்தக் கட்சிக்காரர்களை மாநகராட்சிக் கூட்டத்திலேயே ‘பேடிகள்’ என சாடிய சம்பவம், புவனேஸ்வரிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. துணை மேயர் கணேசனுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே நடந்த மோதலால், மக்கள் நலப்பணிகளில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை” என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

உண்மையை மறைத்தவர்!

திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக மருதராஜ் இருந்தாலும், பவர்ஃபுல் நிழல் மேயராக வலம்வந்தவர் அவருடைய மகன் பிரேம் என்ற வீரமார்பன். அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாமல், சீர்கேடுகள் நிறைந்த திண்டுக்கல் மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சி விருதை தமிழக அரசு வழங்கியதைக் கண்டு பொதுமக்கள் கொதித்துப்​போனார்கள். ‘உண்மைத் தகவல்களை மறைத்து விருது வாங்கியதாகப் புகார் போனதால் கட்சித் தலைமை கடுகடுப்பானது. இந்த நிலையில், பெண்கள் (பொது) பிரிவுக்கு திண்டுக்கல் மேயர் பதவி ஒதுக்கப்பட்டு உள்ளது. மருதராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களின் பட்டியல் லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகாராகப் போயிருக்கிறது. இது தொடர்பாக,  உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஒரு மறுமொழி

  1. Real Ali Baba and the 40 Thives of the ADMK Govt. Thye Innocent Voters should read and understand their grave mistake of electing this Corrupted Govt.

%d bloggers like this: