Advertisements

மிஸ்டர் கழுகு : ராஜாத்தி சொன்ன யோசனை!-விகடன்

ப்போலோ விசிட் முடித்து அலுவலகம் வந்த கழுகாரிடம் மணமணக்கும் ஏலக்காய் டீயை நீட்டினோம். சூடான டீயை உறிஞ்சியவாறே, கொண்டுவந்த தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
‘‘அப்போலோ மருத்துவமனை அரசியல்வாதிகள் ‘அட்டென்டன்ஸ்’ போடும் இடமாக மாறிவிட்டது. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் அப்போலோ வந்ததுதான் அரசியல் அரங்கில் பரபரப்பு பேச்சாக அடிபடுகிறது.’’

‘‘அவர் வந்ததன் பின்னணி என்னவாம்?’’
‘‘கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போர்தான் காரணம் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே தி.மு.க உள்கட்சிப் பிரச்னை, தேர்தல் முடிவு, சட்டசபை நடவடிக்கை என எல்லாவற்றிலும், கருணாநிதிக்கு எதிர் நிலையை எடுக்கிறார் ஸ்டாலின். அதனால்தான், தனது வழக்கமான பாணியில் அவ்வப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்து​கிறார் கருணாநிதி.’’
‘‘எப்படி சொல்கிறீர்?’’
‘‘ஜி.கே. வாசனை தி.மு.க கூட்டணியில் சேர்க்கும் முயற்சியாக, ஸ்டாலின் – ஜி.கே. வாசன் சந்திப்பு நடைபெற்றது. உடனே, கருணாநிதி, திருநாவுக்கரசரை வீட்டுக்கு வரவழைத்துச் சந்தித்தார். அதோடு, ஜி.கே.வாசன் – மு.க.ஸ்டாலின் முயற்சி ஆரம்பத்திலேயே முடிவுக்கு வந்தது. ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை வைத்து, அரசியல் செய்ய விரும்பவில்லை என ஸ்டாலின் கூறினார். ஆனால், ‘அ.தி.மு.க தொண்டர்களின் கவலையைப் போக்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும்; பொறுப்பு முதல்வரை அறிவிக்க வேண்டும்’ என கருணாநிதி அறிக்கை கொடுத்தார். முதலமைச்சர் ஜெயலலிதா கவனித்துவந்த துறைகளை, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கவனிப்பார் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டதும், அதைப் பாராட்டினார் மு.க.ஸ்டாலின். ஆனால், கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநர் சொல்வதுபோல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலின் பேரில்தான் பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இப்படி ஒவ்வொன்றிலும் தந்தைக்கும் மகனுக்கும் முட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனைக்குப் போய், ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரித்தார் மு.க.ஸ்டாலின். இந்த செய்திக்குப் பரவலான விளம்பரம் கிடைத்ததும் ராஜாத்தி அம்மாள்  அப்போலோவுக்கு சென்று தன்னையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.’’
‘‘ராஜாத்தி அம்மாள் சசிகலாவைச் சந்தித்தாரா?’’

‘‘சந்தித்தது மட்டுமல்ல, ஆலோசனைகளையும் அள்ளி வீசியிருக் கிறார். அப்போலோ மருத்து​வமனை விசிட்டின்போது, சசிகலாவிடம் பேசிய ராஜாத்தி அம்மாள், ‘முதல்வருக்கு உடல்நிலை சரியாக மைசூருக்கு அருகே உள்ள நஞ்சன்கூடு ஆலயத்துக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யுங்கள். விசேஷ சக்தியுண்டு; சீக்கிரம் குணமடையலாம். அதேபோல் மஞ்சுநாத சுவாமி ஆலயத்துக்கும் சென்று அங்கப்பிரதட்சணம் செய்யுங்கள்’ என்று ஆலோசனை சொல்லியுள்ளார். அக்கறையோடு ராஜாத்தி சொன்னதைக் கேட்டுள்ள சசிகலா, ‘அந்த இரண்டு இடங்களுக்கும் தனக்கு வேண்டிய நபர்களை அனுப்பி அபிஷேகத்துக்கு ஏற்பாடுசெய்யச் சொல்லிவிட்டார்’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.’’
‘‘ அ.தி.மு.க – தி.மு.க தொண்டர்கள் இந்தச் சந்திப்பை எப்படிப் பார்க்கின்றனர்?’’
‘‘அ.தி.மு.க-வினரைவிட தி.மு.க-வினர் மத்தியில்​தான் இந்தச் சந்திப்பு மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பில் என்ன பேசினார்கள் என்று தெரிந்துகொள்ள ஸ்டாலின் தரப்பு பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. ஆனால், முழுமையாக விஷயங்கள் இன்னும் கசியவில்லை. விரைவில், கனிமொழியும் போய்ப் பார்ப்பார் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இப்படி தனித்தனியாக தி.மு.க-வில் ஆவர்த்தனம் காட்ட ஆரம்பித்தால் என்ன ஆவது என்ற கவலையில் ஸ்டாலின் இருக்கிறார். அழகிரியும் அப்போலோவுக்கு சென்று பார்த்தால் அதனை தி.மு.க. எப்படிப் பார்க்கும் என்று தெரியவில்லை’’
‘‘அரசியல் இருக்கட்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?’’
‘‘கடந்த 14-ம் தேதி மதியம் அப்போலோவின் கீழ்தளத்தில் இருந்தவர்களை வெளியேற்றியுள்ளது மருத்துவ நிர்வாகம். பின்னர், இரண்டாவது தளத்தில் இருந்து லிஃப்ட் வழியாக ஜெயலலிதாவை கீழ் தளத்துக்கு கொண்டுவந்து ஸ்கேன் எடுத்துள்ளார்கள். தலையைக் கவர் செய்த நிலையில் ஜெயலலிதாவை அழைத்து வந்துள்ளார்கள். இது ஜெயலலிதாவுக்கு எடுக்கப்பட்ட மூன்றாவது ஸ்கேன் என்று சொல்கிறார்கள்”
‘‘ கடந்த 10-ம் தேதிதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கடைசியாக வந்தது. ஒரு வார காலம் எந்தவித அறிக்கையையும் அப்போலோ நிர்வாகம் அளிக்கவில்லையே?”
‘‘ ‘முன்னேற்றம் இருந்தால் அவர்களே தருவார்கள்’ என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். லேசாகக் கண்ணைத் திறந்து பார்க்கிறார், ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்றபோது கையை அசைத்தார் என்று சொல்லப்படுகிறது. இதனை மருத்துவமனை வட்டாரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால், ‘அம்மா அடுத்த வாரம் வீட்டுக்கு வந்துவிடுவார்’ என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவு போயுள்ளது”
‘‘அது என்ன?”

‘‘ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவாம். ‘நல்லபடியாவும் பேச வேண்டாம், கெட்டபடியாகவும் பேச வேண்டாம்’ என்று உத்தரவு போட்டுள்ளார்கள். பலர் மீது அவதூறு வழக்கு பாய்ந்து வருவதால், நமக்கு ஏதடா வம்பு என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் யாரும் போனில் பேசவே பயப்படுகிறார்களாம்!”
“ ம்!”
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி தினத்தன்று தமிழகம் முழுவதும், முக்கியக் கோயில்கள் அனைத்திலும் காலை 6.30 மணிமுதல் 7.30 வரை விளக்கு ஏற்றி வழிபடச் சொல்லி மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓலை போனது. இதையடுத்து கோயில்களில், அ.தி.மு.க-வினர் குழுமிவிட்டார்கள். ஜெயலலிதாவின் ஜாதகத்தில் இப்போது சூரியன் பார்வை கடுமையாக இருப்பதால், அதைத் தணிக்கத்தான் சூரிய ஓரை நேரத்தில் இந்த விளக்கேற்று வைபவம் நடந்துள்ளது என்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு அடுத்த மேட்டர்களுக்கு வந்தார் கழுகார்!
‘‘வருமான வரித்துறையினர் போடியின் பக்கம் அதிரடி ரெய்டு நடத்தியதாக ஒரு தகவல் வருகிறது.ஏலக்காய் வியாபாரி குமார் என்பவரின் வீட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ஏலக்காய் வியாபாரி குமார், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களைக் கவனித்துக்கொள்ளும், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறது!”
‘‘அட!’’
‘‘இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் பற்றி அமலாக்கத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கண்காணிப்பில் போடி​நாயக்கனூரைச் சேர்ந்த குமார் என்பவர் பெயர் அடிபட்டது. குமாரைப் பிடிக்க வந்தபோது, அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால், சோதனையின்போது கணக்கில் வராத 150 தங்க காசுகள், 600 பவுன் நகைகள், 50 லட்ச ரூபாய் பணம், கோடிக்கணக்கான சொத்து பத்திரங்கள், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.’’
‘‘அவ்வளவு முக்கியமான ஆளா இந்த குமார்?”
‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ஏலக்காய் வியாபாரி ஒருவருக்கு, டூவீலர் டிரைவராக இருந்தவர்தான் இந்த குமார். இந்தியாவில் இருந்து துபாய், சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா என்று உலகம் முழுவதுக்கும் போடியில் இருந்துதான், ஏலக்காய் போகிறது. தமிழக எல்லையில் வரி கட்டாமல் கொண்டு வரப்படும் ஏலக்காயானது போடியில் தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்​படுகிறது. இப்படித்தான் ஏலக்காய்களுக்கு கட்ட வேண்டிய 5 சதவிகித வரியைக் கட்டாமல் தமிழக அரசை ஏமாற்றிவிடுகிறார்கள். அந்தத் தொகை நூற்றுக்கணக்கான கோடிகளில் இருக்கிறது. இரண்டாவது முறை முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றதும், ஏலக்காய் வரியை 5 சதவிகித்தில் இருந்து 2 சதவிகிதமாகக் குறைத்தார்கள். அதன் பிறகும் இவர்கள் வரியை ஒழுங்காக செலுத்துவது இல்லை. இந்த வியாபாரிகளுடன் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்துக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள சில அமைச்சர்கள் துபாய், இந்தோனேசியா, சிங்கப்பூர் என்று பல்வேறு இடங்களில் முதலீடு செய்துள்ளதாக சந்தேகப்படுகிறது அமலாக்கத் துறை. இதன் பின்னணியில் குமார் தவிர்த்து இன்னும் பெரிய திமிங்கலங்கள் வெளியே இருக்கிறார்கள்.’’
‘‘இதுபற்றி குமார் என்ன சொன்னாராம்?’’
‘‘ இவர் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார். ‘ரெய்டு நடந்தது உண்மைதான். முறைப்படி எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறேன். அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஒரு கட்சிக்காரராக மட்டுமே எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார் குமார்’ என்றபடியே விருட்டென்று விண்ணில் பறந்தார் கழுகார்.

http://www.vikatan.com/juniorvikatan/2016-oct-23/kazhugar/124704-mrkazhugu-politics-current-affairs.art

Advertisements
%d bloggers like this: