Advertisements

மிஸ்டர் கழுகு : 45 நிமிஷம் உள்ளேயே இருக்கணும்!-விகடன்

ஜெயலலிதா நலம் பெற்றுவிட்டார்… 27-ம் தேதி வீடு திரும்புகிறார்… என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?” – கழுகாரைப் பார்த்ததும் கேள்வியைப் போட்டோம்.

‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோவில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் முற்றிலும் நின்றுவிட்டன. ‘முதலமைச்சரின் உடல்நிலை முன்னேறி வருகிறது’ என கடைசியாக கடந்த 10-ம் தேதி அறிக்கை வந்தது. அதன்பிறகு, 10 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அரசுத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ‘முதல்வர் நலம்பெற்றுவிட்டார்… இரண்டு நாளில் வீடு திரும்புவார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலையில் இறக்கமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அவர் சிகிச்சைக்கு சேர்ந்தபோது, என்னவிதமான உபாதைகளோடு அவதிப்பட்டாரோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. செயற்கைச் சுவாசம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருப்பதே மிகவும் அபாயகரமான நிலையைத்தான் சொல்லாமல் சொல்கின்றன. அப்போலோ மருத்துவமனையின் மௌனமும், ஆட்சி நிர்வாக மூவ்மென்டுகளும் அதைத்தான் உறுதிசெய்கின்றன.”
‘‘லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோவில் இருந்து சென்றுவிட்டார்களே?”
‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் 23-ம் தேதி மீண்டும் வருகிறார். ஆனால், எய்ம்ஸ் டாக்டர்களின் பணி முடிவடைந்துவிட்டது. அவர்கள் இனிமேல் வரமாட்டார்களாம். டெல்லி ஊடகங்கள் இப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் த்ரிகா, நிதிஷ் நாயக்கைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், ‘இதற்குமேல் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கானக் கருவிகள் வேண்டும். இங்கிருப்பவை போதுமானவை அல்ல. அதனால், வாய்ப்பிருந்தால், லண்டனுக்கு ஜெயலலிதாவை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி யோசியுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளாராம், லண்டன் செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தேவைப்பட்டால், தீபாவளிக்குப் பிறகு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனவும் அல்லது வீட்டில் வைத்துப் பார்க்கலாம் என்றும் சொல்லப்​படுகிறது!”
‘‘பிரதமர் மோடி ஏன் வரவில்லை?”

‘‘பிரதமர் மோடி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வருகிறார் என்று, சசிகலா குடும்பத்தினர்தான் கிளப்பிவிட்டனர். அந்தச் செய்தி பரவியதும், கவர்னரும், தமிழகத்தில் உள்ள மத்திய உளவுப்பிரிவுமே பதறிவிட்டன. தங்களுக்கு இதுவரை தகவல் வரவில்லையே என்று அவர்களும் தொடர்ந்து டெல்லியைத் தொடர்பு கொண்டனர். அங்கிருந்து கடைசிவரை அப்படி ஒரு தகவல் உறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகுதான், அது வேண்டுமென்றே, உயர் பதவியில் இருப்பவர்களும் சசிகலா குடும்பத்தினரும் சேர்ந்து பரப்பிய வதந்தி என்பது தெரியவந்தது.”
‘‘ஏன் இப்படி பரப்ப வேண்டும்?”
‘‘மத்திய அரசு எங்களோடு உடன்பாடாகத்தான் இருக்கிறது, நாங்களும் பி.ஜே.பி-க்கு எதிரி அல்ல என்பதைக் காட்டும் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ‘பிரதமர் வருகிறார் என்றால் அவர் முதலமைச்சரைப் பார்க்க அனுமதி கிடைக்குமா? மற்றவர்கள் மாதிரி பிரதமர், ஜெயலலிதாவை சந்திக்காமல் போக முடியாது’ என்றும் கறார் காட்டப்படுகிறதாம். ஜெயலலிதாவை மோடி பார்ப்பது மாதிரியான படத்தை வெளியிடுவதா, வேண்டாமா? என்று சசிகலா தரப்புக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. பிரதமர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் அந்த இடத்தைப் பாதுகாப்பு படை வீரர்கள் முன்கூட்டியே பார்த்தாக வேண்டும். அந்த நடைமுறைகள் ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்ற முடியாது. எனவே, பிரதமரின் வருகை என்பது சர்ச்சையையும் சந்தேகத்தையும் அதிகமாக விதைத்துள்ளது!”
‘‘அமைச்சரவைக் கூட்டம் நடத்திவிட்டாரே பன்னீர்?’’
‘‘செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலைகள் முறையாக நடக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பு ஜூன் 6-ம் தேதி, ஜெயலலிதா தலைமையில் ஒரு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு, அக்டோபர் 20-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டங்களிலாவது கொஞ்சம் வெளிப்படைத்தன்மை இருந்தது. ஆனால், இப்போது நடைபெற்ற கூட்டத்தில் அதுவும் இல்லை. முதல்வர் இல்லாமல்  நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், பெரிதாக எந்த விவாதங்களும் இருக்காது என்றே அனைவரும் நினைத்தனர். முதல்வரின் செயலாளர்கள் வெங்கடரமணன், தலைமைசெயலாளர் ராம மோகன்ராவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். உள்ளாட்சி தேர்தல், தள்ளிபோனதால் அது குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில்தான் கூட்டம் நடத்த முடிவாகியது. அமைச்சரவைக் கூட்டத்தின் மையத்தில் முதல்வர் அமர்ந்து இருப்பார். அவருக்கு எதிரே இருபுறமும் அமைச்சர்கள் வரிசையாக இருப்பார்கள். இந்தக் கூட்டத்தில் முதல்வரின் இடம் காலியாக இருந்தது. நிதியமைச்சர் பன்னீர்செல்வம், தான் வழக்கமாக அமரும் வலது புறத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது!”
‘‘என்ன பேசினார்களாம்?”
‘‘எல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்த விஷயங்கள்தான். காவிரிப் பிரச்னை பற்றி பேசப்பட்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியோடு முடிவடைவதால், அதற்குத் தனி அதிகாரிகளை நியமிப்பது போன்றவைக் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வம் உட்பட எந்த அமைச்சர்களும் அதிகமாகப் பேசவில்லை. விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. முதல்வரின் செயலாளர்கள், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ஆகியோர் சில யோசனைகளைச் சொன்னார்கள். அமைச்சர்கள் அதற்குத் தலையசைத்தனர். அவ்வளவுதான்.”
‘‘ஓஹோ!”
‘‘முதல்வரின் மருத்துவச் செலவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்கள். ஆனால், அதுபற்றி எந்தப் பேச்சும் இல்லை. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றால், அதன் வீடியோ க்ளிப்பிங்ஸை செய்தித்துறை வழங்கும். ஜெயலலிதா இல்லாததால் அதுவும் மிஸ்ஸிங். அதைவிட சுவாரசியம், அமைச்சரவைக் கூட்டம் கண்டிப்பாக 45 நிமிடங்கள் நடைபெறவேண்டும் என்று மேலிடத்தில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு முதல்நாளே உத்தரவு வந்துவிட்டதாம்.”
‘‘அப்படியா?”
‘‘ஆமாம்! அமைச்சர்கள் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, 45 நிமிடங்கள் அந்த அறையில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று சொல்லியுள்ளார்கள். விரைவாக முடித்தால், அது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்று பக்கா ப்ளானாகத்தான் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் மற்ற மாநிலங்களில், முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். தமிழகத்தில் அந்த வழக்கம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றி, அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. ஆனால், கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் வெளியிடப்படுகின்றன. அரசின் செய்திக் குறிப்பு கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. காரணம் எந்த அமைச்சரும் அதிகாரியும் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்பும்வரை, இனிமேல் அமைச்சரவைக் கூட்டமே கூட்டப்படாது என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று சொல்லி நிறுத்திய கழுகாரை, காங்கிரஸ் பக்கமாகத் திருப்பினோம்.
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென டெல்லிக்குப் போனதில் ஏதேனும் தகவல் உள்ளதா?”
‘‘திருநாவுக்கரசர் டெல்லிக்கு போகும்போது இருந்த உற்சாகம் வரும்போது இல்லையாம். ராகுல் காந்தியைப் பார்க்கத்தான் டெல்லிக்கு போனார் திருநாவுக்கரசர். அப்போது ராகுலுடன் காவிரிப் பிரச்னை போராட்டம் குறித்தும், இடைத்தேர்தல் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார். அதன்பிறகு சோனியாவை சந்திக்க போனவர் அங்கிருந்து டென்ஷனுடன்தான் திரும்பினாராம். காரணம் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி அரசியல்தான். திருநாவுக்கரசர் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக செயல்படுகிறார். மன்னார்குடி நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என சில தகவல்களை சோனியாவிடம் போட்டுக்​கொடுத்துள்ளார்கள். அதை சோனியா, திருநாவுக்கரசரிடம் கேட்டுள்ளார். ‘தமிழகத்தில் நாம் தி.மு.க-வுடன்தான் கூட்டணியில் உள்ளோம். நீங்கள் தனியாக அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவேண்டாம்’ என்ற ரீதியில் சோனியாவின் பேச்சு இருந்துள்ளதாம். இளங்கோவனும் டெல்லி சென்று இருந்தார். அவரை அழைத்தது ராகுல் காந்திதானாம். திருநாவுக்கரசரைத் தலைவராக நியமித்த பிறகு பல மாவட்ட தலைவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என ராகுலுக்குப் புகார் சென்றுள்ளது. அவர்களில் பலர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பதால், இளங்கோவனை டெல்லிக்கு அழைத்துள்ளார் ராகுல். திருச்சியில் காவிரி பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் இளங்கோவன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அவருடைய ஆதரவாளர்களும் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. இதை எல்லாம் ராகுல் காந்தி கேட்டுள்ளார். ‘வெல்கம் மை ஃபரெண்ட்’ என இளங்கோவனை அழைத்துள்ளார் ராகுல். அதற்கு இளங்கோவன், ‘யு ஆர் மை லீடர் சார்’ என்று சொல்லியுள்ளார். ‘திருநாவுக்கரசருக்கு உங்களது முழு ஒத்துழைப்பு தேவை’ என்று சொன்ன ராகுல், ‘உங்களுக்கு தேசிய அளவில் பதவி தருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்து அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.”
‘‘ஓஹோ!”
‘‘இதன் விளைவுதான் டெல்லியில் இருந்து திரும்பிய திருநாவுக்கரசர் வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க-வே நிற்கும். நாம் தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம் என்பதால், தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும்” என்று தி.மு.க-வின் புகழை கொஞ்சம் ஓங்கி ஒலித்துள்ளார் திருநாவுக்கரசர்.”
‘‘இடைத்தேர்தல் குறித்து தி.மு.க-வின் திட்டம் என்னவாம்?’’

‘‘இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் தனது வீட்டில் சில முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை செய்துள்ளார் ஸ்டாலின். அப்போது மூன்று தொகுதிகளில் நாம் களம் இறங்குவோம். இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று சொல்லியுள்ளார். கரூர் தொகுதிக்கு கே.சி.பழனிச்சாமியை மீண்டும் களத்தில் இறக்க உள்ளார்கள். தஞ்சாவூரில் மீண்டும் அஞ்சுகம் பூபதியை நிறுத்த முடிவாகியுள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு மட்டும் வேட்பாளர் மாறலாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க தோற்றதே இந்த முடிவுக்கு காரணமாம். ஆனால், வேட்பாளரை மாற்ற வேண்டாம் என்று சேடப்பட்டி முத்தையா போராடி வருகிறாராம்.
‘‘ம்!’’
‘‘மூன்று தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறவேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். கரன்சிகளை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கட்சியினரை  உற்சாகப்படுத்துகிறாராம். இந்த மூன்று தொகுதிகளை தி.மு.க கைப்பற்றினால், எதிர்க் கட்சிகளின் வரிசை சதத்தை தாண்டி விடும் என்ற ஆசையில் உள்ளார் ஸ்டாலின்.’’
‘‘அ.தி.மு.க-வேட்பாளர்களை அறிவித்து​விட்டார்களே?’’
‘‘ஆமாம்! ‘அ.தி.மு.க இந்த இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவேண்டும்’ என்று உத்தரவு வந்துள்ளதாம். முதல்வர் பிரசாரத்துக்கு வர மாட்டார் என்பதால், அ.தி.மு.க-வினர் சோர்ந்து போய் உள்ளார்கள். இந்த இடைத்தேர்தல் பொறுப்பை திவாகரன், தினகரன், மகாதேவன் இந்த மும்மூர்த்திகள்தான் கவனிக்க உள்ளார்களாம். அ.தி.மு.க பக்கமும் கரன்சிகளை களத்தில் இறக்க அஞ்சப்போவது இல்லை என்கிறார்கள்” என்று முடித்துக் கிளம்பத் தயாரான கழுகார், “தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தினமும் மருத்துவர்கள் வந்து பார்த்துச் செல்கிறார்கள். அதனால்தான் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் உள்ளார். ஆனாலும் தேர்தல் பிரசாரத்துக்குப் போவேன் என்று ஸ்டாலினிடம் சொல்லிவருகிறார். உடல்நிலையை நினைத்து ஸ்டாலின் பதில் சொல்லாமல் உள்ளாராம்” என்ற செய்தியோடு கிளம்பினார்.

http://www.vikatan.com/juniorvikatan/2016-oct-26/kazhugar/124809-mrkazhugu-politics-current-affairs.art

Advertisements
%d bloggers like this: