Advertisements

மிஸ்டர் கழுகு : கவர்னரை பார்க்க விடாத மர்மம்!

லுவலக மேஜையில், இருந்த விகடன் 90 இதழை புரட்டிய கழுகார், ‘‘புத்தகத்துக்கு செம ரெஸ்பான்ஸ்’’ என்றபடி, கருணாநிதி பேட்டிவந்த பக்கத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு ‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட

வேண்டுமே தவிர, கழகத்தில் இப்போது இல்லாத யாரையும் நினைத்து ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்’ என சொன்ன கருணாநிதி, ‘ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேட்டி கழகத்துக்குள் கலகத்தை ஏற்படுத்திவிட்டது. பேட்டியைப் படித்துவிட்டு அழகிரி கொதித்துப் போனார். 20-ம் தனது ஆதரவாளர்களுடன் வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘தலைவர் பேட்டியைப் படிச்சீங்களா’ என ஆதரவாளர்களிடம் கேட்க, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ‘நான் எவ்வளவோ கட்சிக்கு செய்திருக்கிறேன். இவ்வளவு புறக்கணிப்புக்குப் பின்னாலும் அமைதியாக இருக்கிறேன். இருந்தாலும் என்னைக் கண்டுகொள்ள வேண்டாம் என சொல்லியிருக்கிறார் அதைத்தான் தாங்க முடியவில்லை’ என விரக்தியாக சொல்லியிருக்கிறார் அழகிரி. அழகிரியின் மனசாட்சி என சொல்லப்படும் முன்னாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து ‘கட்சிக்காக அழகிரி எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறார். அதைத் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. அண்ணனைக் கட்சியைவிட்டு நீக்கி மூன்று வருடங்களாகிவிட்டன. அப்படியிருந்தாலும், தலைவரை சாதியை சொல்லி இழிவாகப் பேசிய வைகோ கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்த தொண்டர்களை அனுப்பியவர் அழகிரி. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை, கட்சி உடைய காரணமானவர்களை, தலைவர் குடும்பத்தையே இழிவாகப் பேசியவர்களை அரவணைத்துக் கொண்ட தலைவர், அழகிரியை மட்டும் அரவணைத்து செல்வதில் என்ன தயக்கம்? அவரை தடுப்பது யார்?’ என சீரியஸாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் இசக்கிமுத்து.’’

 

‘‘இதற்கு எதிர் ரியாக்‌ஷன் என்னவாம்?’’
‘‘கருணாநிதி தற்போது உடல்நிலைக் குன்றி சிரமப்படுகிறார். அவரது இரண்டு கைகளில் உள்ள முட்டியிலும், முதுகிலும் கொப்பளங்கள் வந்துள்ளன. இதனால் உட்கார முடியாமல் படுத்தே உள்ளார். வயது காரணமாகவும், அவருக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களை அடிக்கடி மாற்றுவதாலும், சிகிச்சை முறைகளை மாற்றுவதாலும் அலர்ஜி வந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் மட்டுமே கருணாநிதி இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வருகின்றனர். கட்சிக்காரர்கள் யாராலும் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. ராசாத்தி அம்மாளும், கனிமொழியும் தினமும் இரண்டுமுறை கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்த்துக்கொள்கின்றனர். அறிவாலயம், சி.ஐ.டி காலனி என எங்கும் செல்லமுடியாமல் கருணாநிதி வீட்டிலே உள்ளாராம். அதனால் இப்போதைக்கு எந்த ரியாக்‌ஷனும் இல்லை.’’
‘‘ஓஹோ.’’
‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ‘அவர் பேசுகிறார்; அவருடைய உணவை அவரே சாப்பிடுகிறார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் சொல்வது போல முன்னேற்றம் அல்ல. ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட மயக்க மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை சுவாசமும் தொண்டையில் டியூப் போடப்பட்ட டிரைக்கியோடாமி சிகிச்சையும் இன்னும் தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி சில நிமிடங்கள் மட்டும் ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்டுள்ள வென்டிலேட்டரை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரால் இயற்கையாக சுவாசிக்க முடியவில்லை. உடனே, மீண்டும் வென்டிலேட்டரை இணைத்துவிட்டார்கள். பொதுவாக நுரையீரல் நோய் வந்தால் அது குணமாக மாதக்கணக்கில் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து செப்டம்பர் இரண்டாவது வாரம் வரையில் குடும்ப டாக்டர்கள் சிலர் மூலம் உலக அளவில் பெஸ்ட்டான ஸ்டீராய்டு மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தாராம்.’’
‘‘தீபாவளிக்கு முன்பாக ஜெயலலிதா வீட்டுக்குத் திரும்பிவிடுவார் என சில செய்திகள் வருகின்றனவே?’’
‘‘அப்போலோ சொல்லும் சில தகவல்களை வைத்துப் பார்த்தாலே, அவர் எவ்வளவு கிரிட்டிகல் பொசிஷனில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். டஜன் கணக்கான சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வசதிகளை போயஸ் கார்டனில் வைத்து அளிக்க முடியாது. அதனால் தீபாவளிக்குள் கார்டன் திரும்புவது சாத்தியமில்லை என்றுதான் சொல்கிறார்கள்.’’

‘‘இரண்டாவது முறையாக அப்போலோ வந்த கவர்னர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தாரா?’’
‘‘கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலேயே ஜெயலலிதாவை பார்த்ததாக சொல்லவில்லையே. ‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்கு கவர்னர் சென்றார்’ என்றுதானே இருக்கிறது. இதுவரை யாரும், அவரைப் பார்க்கவில்லை. அதனால்தான், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் தடா எஸ்.துரைசாமி, இதுபற்றி கவர்னரிடம் ஒரு கடிதமே கொடுத்துள்ளார். அதில், ‘முதலமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமரைக்கூட நேரில் சந்திக்க அவசியமில்லை. ஆனால், கவர்னர் கண்டிப்பாக நேரில் போய்ப் பார்க்க வேண்டும். அப்படி அவரைப் பார்க்கவிடாமல், தடுப்பது சட்டவிரோதம். எனவே, ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க மெடிக்கல் போர்டுக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத்தான், இரண்டாவது முறையாக அப்போலோவுக்கு விசிட் அடித்தாராம் கவர்னர் வித்தியாசாகர் ராவ். ஜெயலலிதாவைப் பார்த்தேன் என்றும் தெளிவாகச் சொல்லாமல், பார்க்கவில்லை என்றும் சொல்லாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எப்படியாவது ஜெயலலிதாவை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கவர்னர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக அப்போலோ வந்தார். முதல்முறை வந்தபோது என்ன காரணம் சொன்னார்களோ அதே காரணத்தைதான் இப்போதும் சொல்லி அவரை ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் செய்துவிட்டார்கள். ‘தொற்று பிரச்னையால்தான் அனுமதிக்கப்பட்டிருகிறார். கிருமித் தொற்று பரவும் என்பதால் நீங்கள் பார்க்க வேண்டாம்’ என வித்யாசாகர் ராவிடம் அழுத்தி சொல்லியிருக்கிறார்கள். அப்போலோ சேர்மன் பிரதாப் சி. ரெட்டி கவர்னரிடம் மெடிக்கல் ரிப்போர்ட் பற்றி விளக்கி இருக்கிறார். கவர்னர் மாளிகை திரும்பிய வித்யாசாகர் ராவ் அப்போலோ நிலையைப் பற்றி விரிவாக மத்திய அரசுக்கு அனுப்பினாராம்.’’
‘‘ம்.’’
‘‘நன்றாக ஆகிவிட்டார்… எழுந்து உட்காருகிறார்… பேசுகிறார்… இரண்டு நாளில் வீடு திரும்புகிறார் என்று வந்த செய்திகளை உறுதிப்படுத்தவே கவர்னர் வந்தார். அந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அவரை ஏன் பார்க்கவிடாமல் செய்யவேண்டும்?’’ என்ற ரீதியில் மத்திய உளவுத்துறை நோட் போட்டுள்ளது.
‘‘அப்போலோ நிர்வாகத்தின் நிலைதான் பரிதாபம். மருத்துவத் துறையில் உள்ள அவர்களுடைய போட்டியாளர்கள் விமான நிலையத்தில் தனியாக ஆட்களை நியமித்து, வெளிநாட்டில் இருந்து மருத்துவச் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளிடம், அப்போலோவின் தற்போதைய நிலை, போலீஸ் கெடுபிடி என அனைத்தையும் விளக்கிச் சொல்லி அவர்களை தங்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். அதனால், அப்போலோ மருத்துவமனையில் உள்ள ‘ஃபாரின் டெஸ்க்’ மிகவும் கவலையில் இருக்கிறதாம். இதை பிரதாப் ரெட்டியே, தமிழகத்தின் முக்கியமான அரசியல் வாரிசு ஒருவரிடம் சொல்லிப் புலம்பினாராம்.’’
‘‘காவிரிக்காக தி.மு.க நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணித்துள்ளதே?’’
‘‘வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் என அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் ஸ்டாலினோடு இணக்கமான உறவு எப்போதும் கிடையாது. ஆனால், அது மட்டும் காரணமல்ல. இதற்கு முன்பும் தி.மு.க இதுபோல் ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறது. அப்போது விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன், ‘மற்ற கட்சிகளில் உள்ள விவசாயிகள் அணித் தலைவர்களையும் அழையுங்கள். அவர்களோடு சேர்ந்து ஒருமனதாக முடிவெடுக்கலாம்’ என்று கூறியுள்ளார். அதைக் கேட்ட ஸ்டாலின், ‘முதல் கூட்டத்தை நாம் நடத்தலாம். அதன்பிறகு அவர்களை அழைக்கலாம்’ என்று கூறினாராம். இதுதான் புறக்கணிப்புக்குக் காரணம் என்கிறார்கள். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டி ருக்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தி.மு.க. கூட்டியிருப்பதும் தேர்தலுக்கானது என மக்கள் நலக் கூட்டணியினர் கணக்குப் போடுகிறார்கள். இதையெல்லாம் வைத்துதான் புறக்கணிப்பு முடிவை எடுத்தார்களாம்.’’
‘‘மூன்று தொகுதிகள் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு அதிருப்திகளை கிளப்பியிருக்கிறதே?’’
‘‘மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து 23 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். கருணாநிதி தலைமையில்தான் நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், ஸ்டாலின், துரைமுருகன், அன்பழகன் ஆகியோர்தான் நேர்காணலை நடத்தினார்கள். நேர்காணலுக்கு முந்தின தினமே, மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டார்கள் என்ற புலம்பல் எழுந்துவிட்டது. ‘தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களை ஏற்றுகொள்கிறோம். ஆனால், கட்சியில் சேர்ந்து ஒன்பது மாதங்களே ஆன சரவணனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு எப்படிப் போடலாம்?’ என்று கேட்கிறார்கள் உடன்பிறப்புகள். ஏற்கெனவே திருப்பரங்குன்றத்தில் நின்று தோல்வி அடைந்த மணிமாறனும் நேர்காணலுக்கு வந்திருந்தார். ‘தேர்தலுக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ள முடியுமா?’ என்ற கேள்விக்கு, ‘நான் ஒரு ஆளாக எப்படி செய்ய முடியும்?’ என்று கேட்டிருக்கிறார் மணிமாறன். ஆனால், ‘முழு செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சரவணன் சொல்லியதால், அவரது பெயரை டிக் செய்துவிட்டார்கள். ‘வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டு எதற்கு நேர்காணல் நடத்த வேண்டும்?’ என்று புலம்பியிருக்கிறார்கள் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள்.’’
‘‘கருணாநிதி என்ன சொன்னராம்?’’

‘‘கருணாநிதி இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லையாம். வேட்பாளர்கள் மூவரும் ஆசிர்வாதம் வாங்க கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் போனபோதும், அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில், ‘ஸ்டாலின்தான் என் அரசியல் வாரிசு’ என்று கருணாநிதி அறிவித்ததும், தன்னைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று கனிமொழி நினைக்கிறாராம். ஏற்கெனவே கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்துவது குறைந்துவருகிறது என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இந்த அறிவிப்புக்குபின் தன்னை முழுவதும் ஓரம்கட்டுகிறார்களோ என்று யோசிக்கிறார் கனிமொழி. கருணாநிதியும் இப்போது சி.ஐ.டி காலனிக்குப் போக முடியாத நிலையில் உள்ளார். இதனால் கோபாலபுரத்துக்கும், சி.ஐ.டி காலனிக்கும் இடைவெளி அதிகரித்துவிட்டதாம். கனிமொழியை விடவும் ராஜாத்தி அம்மாள்தான் தன் மகளின் எதிர்காலம் பற்றி அதிகம் யோசிக்கிறாராம்.’’
என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: