ஏடிஎம்-ல் கள்ள நோட்டு… என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுத்து, அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, 500 ரூபாய் பணத்தை நீட்டுகிறீர்கள். ‘சார், இது கள்ள நோட்டு, செல்லாது. வேறு நோட்டைக் கொடுங்க!’ என்று கடைக்காரர் கேட்டதும் உங்களுக்குப் பகீரென்கிறது. சில சமயங்களில் வங்கியிலிருந்து நாம் வாங்கிவரும்

பணம்கூட கள்ள நோட்டு என்று சில இடங்களில் வாங்க மறுத்துவிடுகிறார்கள். இது மாதிரி கள்ள நோட்டு உங்களிடம் வந்து சேர்ந்தால், என்ன செய்யவேண்டும், யாரிடம் புகார் தர வேண்டும் என தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் விசாரித்தோம்.

ஏடிஎம்-ல் கள்ள நோட்டு!

“ஏடிஎம் அல்லது வங்கியில் கள்ள நோட்டுகள் வருவதற்கு இப்போது வாய்ப்புக் குறைவு. பொதுவாக, அனைத்து வங்கிகளும் ஏடிஎம்-ன் மூலம் விநியோகிக்கவேண்டிய பணத்தை, குறிப்பிட்ட வங்கியின் கருவூலம் மூலமே அனுப்பி வைப்பார்கள். இந்தக் கருவூலத்தில் அழுக்கடைந்த, கிழிந்த மற்றும் கள்ள நோட்டுகள் அனைத்தும் ஆராயப்படுகின்றன. இந்தக் கருவூலத்திலேயே கள்ள நோட்டுகளை ஆராய்வதற்காக சாதனங்களும் உள்ளன. ஏடிஎம்-க்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் முழுவதுமாக சோதனை செய்த பின்பே அனுப்பப்படும். ஆகையால், ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு” என்றவர், வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கிச் சொன்னார்.

கள்ள நோட்டுக்குச் சீல்!

ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், கீழ்க்கண்ட வழிமுறைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டியது அவசியம்.

* வாடிக்கையாளர்கள் முதலில் எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

* ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், எந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்கப்பட்டதோ, அதன் அருகிலுள்ள அந்த வங்கிக்குச் செல்லவேண்டும். வாடிக்கையாளர் மூலம் கள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால், அந்தப் பணத்தை முதலில் பரிசோதித்து அது கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், ‘கள்ள நோட்டு’ என்று பணத்தின் மீது சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து வாங்கப்படும்.

* ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டுக்கு என்றே தனி பதிவேடு, ஒன்று வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டுவந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஏடிஎம்-ல் எடுத்த கள்ள நோட்டுக்குப் பதிலாக வேறு ரூபாய் நோட்டு வழங்கப்படும்.

* இறுதியாக, வங்கியாளர்கள், வாடிக்கையாளர் வழங்கியதில் 3, 4 கள்ள நோட்டுகள் இருந்தால், அது குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி, எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள். அதே சமயம், வாடிக்கையாளர் ஏடிஎம்-லிருந்து கள்ள நோட்டை எடுத்திருந்தால் அதை வங்கிகளில் நிரூபிக்கவேண்டும். கள்ள நோட்டு தொடர்பாக ஒருவேளை வங்கி அதிகாரிகள் உங்களுக்கு முறையான பதிலை அளிக்கவில்லை; கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணத்தை வழங்கவில்லை எனில், காவல் நிலையத்தில் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம்.

ஏடிஎம் ரிஜிஸ்டரில் புகார்!

இதுவே, வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்று அதில் கள்ள நோட்டுகள் இருந்தால், அங்குள்ள ஏடிஎம் காவலரிடம் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டு, சிசிடிவி கேமரா முன் ஏடிஎம் ரிஜிஸ்டரில் உங்களுக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளதாக அந்தப் புத்தகத்தில் புகார் செய்யவேண்டும். அதன்பின் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏடிஎம்-ல் கள்ள நோட்டு கிடைத்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில் வங்கித் தரப்பில் தவறு இருந்தால், உங்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும்.

வங்கியில் கள்ள நோட்டுகள் வந்தால்..!

வங்கி கவுன்டர்களில் கள்ள நோட்டுகள் வருவதற்கும், வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு, வாடிக்கையாளர் ஒருவர் 10,000 ரூபாயை கவுன்டரில் செலுத்திவிட்டு, அதில் ஒரு சில நோட்டுகள், கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், வங்கியாளர் அந்தப் பணத்தை பரிசோதிக்காமல், அந்தப் பணத்தை மற்ற ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கும்போது கள்ள நோட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி இருந்தால், அதற்கு ஆதாரம் வழங்கினால், அதற்கு உண்டான பணம் திரும்ப வழங்கப்படும்.

ஆர்பிஐ விதிமுறை!

வங்கிகள் தரப்பில் தவறு இருந்தால், அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு உடனடியாக கிடைக்கும். இல்லையெனில் வாடிக்கையாளருக்குக் கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணம் கிடைக்காது. ஆனால், ஏடிஎம் அல்லது வங்கிகளைத் தவிர, வேறு ஒரு ஏதாவது இடத்தில் கள்ள நோட்டுகள் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் அந்தப் பணத்தை இழந்ததற்குச் சமம்.
 
ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒன்றிரண்டு கள்ள நோட்டுகளை விவரம் தெரியாமல் வைத்து இருப்பது என்பது பெரும் குற்றமில்லை; ஆனால், கள்ள நோட்டை வைத்துக்கொண்டு மற்றவரை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அதை விநியோகிக்கக்கூடாது. அப்படி விநியோகித்தால், அது சட்டப்படி தவறு. அந்த வாடிக்கையாளரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு’’ என்கிற எச்சரிக்கையுடன் முடித்தார்.

இனியாவது உங்களிடம் வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுகள்தானா என்பதைப் பரிசோதித்து வாங்குங்கள்!


One response

  1. To bane 1000, 500 notes its easily affected in indian econamy and black money problam to great a demand of money

%d bloggers like this: