மனிதன் பேசுவதை உணர்ந்து கொள்ளும் சிஸ்டம் மைக்ரோசாப்ட் சாதனை

ஒரு மனிதன் பேசுவதை முழுமையாக, சிறிது கூடப் பிழையின்றி இன்னொரு மனிதன் புரிந்து கொள்வது 100% இயலாது என்ற எதார்த்தமான நிலையில், மனிதனைக் காட்டிலும் குறைவான தவறுகளுடன், ஒரு மனிதனின் உரையாடலைப் புரிந்து கொள்ளும் சிஸ்டம் ஒன்றை, மைக்ரோசாப்ட் நிறுவன செயற்கை நுண்ணறிவுத்

திறன் பிரிவு (Microsoft Artificial Intelligence and Research) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். Speech Recognition System என்று அழைக்கப்படும் இந்த சிஸ்டத்தினை உருவாக்க, கம்ப்யூட்டர் சிஸ்டம் பிரிவில், பல நாடுகளில், விஞ்ஞானிகள் தொடர்ந்து உழைத்து வந்தனர். இதில் மைக்ரோசாப்ட் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
உரையாடலைப் புரிந்து சொற்களில் எழுதித் தருவதில் வல்லுநர்களாகப் பணியாற்றுபவரைக் காட்டிலும் குறைவான அளவிலேயே இந்த சிஸ்டம் தவறுகிறது. “சொற் பிழை அளவு” (Word Error Rate) இந்த சிஸ்டம் செயல்பாட்டில் 5.9% ஆக உள்ளது. மனிதர்கள் இந்த செயல்பாட்டில் ஈடுபடுகையிலும் இதே அளவில் தான் ஏற்படுகிறது. “நாங்கள் மனிதனுக்கு இணையாக ஒரு சிஸ்டத்தை, இந்தப் பிரிவில் ஏற்படுத்திவிட்டோம். இது உலக சரித்திரத்தில் பெரிய சாதனை” என்று, இந்த துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும், மைக்ரோசாட்ப் நிறுவனத்தின் ‘பேச்சுத் திறன்” விஞ்ஞானி ஹுவாங் (Xuedong Huang) அறிவித்துள்ளார்.
இது ஒரு சாதனை மைல் கல். முதல் முறையாக, கம்ப்யூட்டர் சிஸ்டம் ஒன்று, ஒரு மனிதன் இன்னொரு மனிதன் பேசுவதைப் புரிந்து எழுத்தில் தருவதைப் போலத் தருகிறது. இதுவரை எட்டமுடியாத இலக்காக இது இருந்தது. இது குறித்த ஆய்வு, 1970 லேயே தொடங்கியது. DARPA, Defense Advanced Research Projects Agency என்னும் அமைப்பு முதலில் இந்த ஆய்வினைத் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளாகப் பல நாட்டு விஞ்ஞானிகள் இணைந்தும் இந்த இலக்கு நோக்கி செயல்பட்டனர். இப்போது, மனிதன் பேசுவதைப் புரிந்து கொள்ளும் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை, இந்த ஆய்வில் ஒரு இலக்கை நிர்ணயித்து செயல்படுவோம். இலக்குகளை வெற்றிகரமாக அடைகையில், “நிஜம்தானா?” என்று எங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்வோம். தற்போது முழுமையான வெற்றி பெற்றுள்ளோம்” என மைக்ரோசாப்ட் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஹேரி (Harry Shum) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். தொடர்ந்து நம் வாழ்வின் செயல்முறை வாழ்க்கை நிகழ்வுகளின் பேச்சுகளைப் புரிந்து கொள்ளும் வகையில், இந்த சிஸ்டம் மேம்படுத்தப்படும். இப்போது மனிதனின் பேச்சு ஒலியைப் புரிந்து கொள்ளும் இந்த சிஸ்டம், இனி சொற்களின் பொருளை உணர்ந்து கொள்ளும் சிஸ்டமாக வளரும் என ஆய்வுப் பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை உருவாக்கும். தற்போது விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள Cortana என்னும் செயலி இன்னும் சிறப்பாகச் செயல்படும். மனித உதவியாளரைக் காட்டிலும் துல்லியமாக நாம் பேசுவதை அறிந்து செயல்படும். கம்ப்யூட்டர்கள், எக்ஸ் பாக்ஸ் என்னும் பொழுது போக்கு சாதனம் மற்றும் பல டிஜிட்டல் சாதனங்களில் புதிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.

%d bloggers like this: