Advertisements

உங்கள் குழந்தையின் ஸ்க்ரீன் டைம் எவ்வளவு?

டிஜிட்டல் திரைகளைப் பார்க்காமல் நம் தினம் விடிவதும் இல்லை… முடிவதும் இல்லை. மொபைல், டேப்லெட், லேப்டாப், கணினி, டி.வி, வீடியோ கேம்ஸ் என ஏதேனும் ஒரு விதத்தில், டிஜிட்டல் ஸ்க்ரீன்களைப் பயன்படுத்துகிறோம். இப்படி நாம் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்க்கும் நேரத்தையே ஸ்க்ரீன் டைம் என அழைக்கின்றனர்

நிபுணர்கள். குழந்தைகளுக்கும் இந்த ஸ்க்ரீன் டைம் அதிகரிப்பதால், படிப்பில் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைதல், உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என எச்சரிக்கிற உலக பொருளாதார மையம், இதிலிருந்து மீளும் வழிமுறைகளையும் வழங்கியுள்ளது.

அதிக அளவில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்ப்பதால் நான்கு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

1. அறிவாற்றல் பிரச்னைகள்

படிப்பில் நாட்டமின்மை, கவனச்சிதறல் போன்றவை 26% குழந்தைகளுக்கு அறியப் பட்டுள்ளது. மூளைகளில் ரசாயன மாற்றம், செயல்திறன் குறைதல் போன்றவையும் ஏற்படலாம்.


2. மனப் பிரச்னைகள்

மன அழுத்தம், அச்சம் போன்ற பிரச்னைகள் 12% குழந்தைகளில் வெளிப் பட்டுள்ளன. கேட்ஜெட் களுக்கு அடிமையாகும் தன்மையும் அதிகரிக்கிறது.

3. உடல் சிக்கல்கள்

இரவில் தூக்கம் வராதது, பகலில் அதிகமாகத் தூங்குவது… அதோடு, சீரற்ற உணவுப் பழக்கத்தால் நீரிழிவு, இதயப் பிரச்னைகள், உடல்பருமன் ஏற்படும் அபாயமும் உண்டு. பார்வைக் குறைபாடுகள், கண்
உலர்தல், மங்கலான பார்வை, தலைவலி போன்ற பிரச்னை கள் 7% குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

4. சமூகத் தடைகள்

வன்முறைகளை அதிகம் விரும்புவது, மிக விரைவில் எரிச்சல் அடைவது… இதுபோன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு வாழ்வியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

மீள்வதற்கு என்ன வழி?

குழந்தைகள் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக டிஜிட்டல் திரைகளைப் பார்க்கிறார்களா… உஷார்! குழந்தைகள் இதில் இருந்து மீள்வதற்கு இந்த 7 விஷயங்கள் உதவும்…

விழிப்பு உணர்வு

அதிக நேரம் டிஜிட்டல் ஸ்க்ரீன் பார்ப்பது கேடு என்பதை குழந்தைகளுக்கு முதலில் தெளிவாக புரியவைக்க வேண்டும்.


அளவு

ஒருநாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே ஸ்க்ரீன் டைம் என நிர்ணயிக்க வேண்டும்.

விட்டுக்கொடுப்பதும் முக்கியம்

குழந்தைகளை மொபைல், டி.வி பார்க்கக் கூடாது என சொல்லிவிட்டு, நாம் அடிக்கடி பயன்படுத்தினால், அது அவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும்.

சுய தண்டனை

ஸ்க்ரீன் டைம் ஒப்பந்தங்களை நீங்களோ, குழந்தையோ மீறினால்,  சிறுசிறு தண்டனைகள் வழங்கிக்கொள்ளலாம். விதியை சரியாகக் கடைப்பிடித்தால், பாராட்டி ஊக்கப்படுத்துவதும் அவசியம்.

வழக்கப்படுத்துதல்

இப்படி ஒரு புதுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது கடினம்தான். இருப்பினும் சிறிது சிறிதாக பழக்கப்படுத்தலாம். 2 மணி நேரம் என்ற இலக்கைக் கண்காணிக்க, அலாரம் வைப்பது, ரிமைண்டர் வைப்பது போன்றவற்றைச் செய்யலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், சில நாட்களில் அதுவே பழகிவிடும்.

கண்காணிப்பு முக்கியம்

தினந்தோறும் உங்கள் குழந்தைகளைக் கண்காணிப்பது கடினம்தான். அந்த நேரங்களில், குழந்தையின் சோஷியல் மீடியா நேரத்தை கண்காணிக்க உதவும் மென்பொருட்கள் / ஆப்ஸ் பயன்படுத்தலாம்.

மாற்றுச் சிந்தனைகள்

உங்கள் குழந்தைகளுக்கு டிஜிட்டல் மீடியாக் கள் மகிழ்ச்சியளிக்கலாம். அவற்றைவிடவும் மகிழ்ச்சியான விஷயங்கள் இந்த உலகில் உண்டுதானே! அவற்றை நினைவுபடுத்துங்கள்… பழக்கப்படுத்துங்கள். வீடியோ கேம்ஸ் விளையாடுவதைவிட, வெளியே சென்று விளையாட ஊக்குவியுங்கள். சைக்கிளிங், நீச்சல் என புதிய விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள்.

கேட்ஜெட்களை பயன்படுத்தாமல் இருப்பது கடினம்தான். ஆனால், அவற்றின் பயன்பாடுகளை முடிந்தவரை குறைத்துக் கொள்வதே சிறப்பு!

Advertisements
%d bloggers like this: