Advertisements

மிஸ்டர் கழுகு : நான்கு தலைவர்கள் நான்கு திசையில்…

லேசான மழைத் தூறலில் நனைந்தவாறே அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாருக்கு, சுடச்சுட தீபாவளி இனிப்புகளைத் தட்டில் வைத்து நீட்டியவாறே, ‘‘மக்கள் நலக் கூட்டணிக்குள் எழும் சர்ச்சைகளுக்குக் என்ன காரணமோ?’’ என்றக் கேள்வியையும் முன்வைத்தோம். நம் கேள்வியை உள்வாங்கிய கழுகார், இனிப்புகளை எடுத்து சுவைத்தவாறே பதிலளிக்க ஆரம்பித்தார்.

‘‘வைகோவின் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றனவாம். இதுதான் அந்தக் கூட்டணிக்குள் எழும் சர்ச்சைகளுக்கு ஆகப்பெரிய காரணமாக இருக்கிறதாம். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு ‘விஜயகாந்த்தும், ஜி.கே.வாசனும் ஒரு காரணம்’ என்ற கருத்தை வைகோ சொன்னதில் இருந்து இந்த சர்ச்சையும் தொடங்கியது!” 
‘‘எங்கே அப்படிச் சொன்னார்?’’
‘‘திருமாவளவன் பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்தது. அதில் பேசிய வைகோ, ‘மக்கள் நலக் கூட்டணிக்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு இருந்தது. ஆனால், ஜி.கே.வாசனும் தே.மு.தி.க-வும், இணைந்தபிறகுதான் அந்தக் கூட்டணி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது’ என்றார். மேலும், ‘தேர்தலின்போது விஜயகாந்த் அவருடைய தொகுதியில் பிரசாரம் செய்யக் கடைசி நாளில் திருமாவளவனை அழைத்தார். அதை ஏற்று திருமாவளவனும், கடைசி நாளில் தன்னுடையத் தொகுதியை விட்டுவிட்டு, விஜயகாந்த் தொகுதியில் பிரசாரம் செய்தார். அதனால்தான், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் தோற்றுப்போனார்’ என்றார்.’’
‘‘சரி இருக்கட்டும். இப்போது இடைத்தேர்தல் குறித்து கூட்டணியில் எழுந்த குழப்பங்கள் பற்றி சொல்லும்!’’
‘‘தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறப்போகிறது. அதில் போட்டியிடுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக, அதில் மாறுபட்ட கருத்தை முன்வைத்தது கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்.’’

‘‘என்ன காரணமோ?’’
‘‘தஞ்சை தொகுதி சி.பி.ஐ கட்சிக்கு செல்வாக்கு உள்ள பகுதி. அதுபோல், திருப்பரங்குன்றம் சி.பி.ஐ.எம்-க்கு செல்வாக்கு உள்ள பகுதி. அந்தப் பகுதிகளில் போட்டியிட்டால், வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், கௌரவமான வாக்குகளைப் பெறலாம். அது மக்கள் மத்தியிலும் கூட்டணித் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தையும் செல்வாக்கையும் உருவாக்கும். மேலும், தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயகக் கடமை. தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஆளும் கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் நிலைப்பாடு என்பதோடு கடமையைக் கை கழுவும் செயல் என்று சி.பி.ஐ.எம் நிலைப்பாடு எடுத்தது.’’
‘‘சி.பி.ஐ.எம் மாநிலத் தலைமையின் முடிவா இது?’’
‘‘சொல்கிறேன்…. சி.பி.ஐ.எம், சி.பி.ஐ ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைமை கூட தேர்தலில் போட்டியிடுவது வீண் வேலை என்ற நினைப்பில்தான் இருந்தன. ஆனால், சம்பந்தப்பட்ட தஞ்சை, திருப்பரங்குன்றம் மாவட்டக் கமிட்டியினர் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் ‘தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்பதில் உறுதியாகவே இருந்தனர். ஆர்.கே நகர் தொகுதி இடைத் தேர்தலை தி.மு.க புறக்கணித்தபோது, ‘தி.மு.க தன் ஜனநாயக் கடமையில் இருந்து தவறுகிறது. நாங்கள் அதை சரியாக நிறைவேற்றுகிறோம். அதனால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து சி.பி.ஐ, சி.பி.ஐ.எம் சார்பில் மகேந்திரனை களமிறக்குகிறோம்’ என்று சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி கொடுத்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தனியாகக் களமிறங்கிய கம்யூனிஸ்டுகள், இப்போது மூன்று தொகுதி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்று மாவட்டக் கமிட்டிகள் வற்புறுத்தின.’’
‘‘வைகோ-வுக்கு ஏன் உடன்பாடு இல்லை?’’
‘‘சொல்கிறேன்! உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ‘இந்தத்  தேர்தலைப் புறக்கணிக்கலாம். இதில் நாம் ஜெயிக்க முடியாது’ என்று சொல்லி உள்ளார். எப்போது இப்படி ஒரு கருத்து பிறக்கும் என்று காத்திருந்த வைகோவும் உடனே, அதை ஏற்றுக் கொண்டார். இதை சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்துச் சொல்லிவிட்டார். காவிரி பிரச்னைக்காக ஜனாதிபதியிடம் மனு கொடுக்க இவர்கள் டெல்லி சென்றிருந்தபோது இந்த பிரச்னை கிளம்பியது. இதுபற்றி கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பேசியபோது, அவர்களும் சரி என்றுதான் சொன்னார்கள். ஆனால், அப்போது மாவட்டக் கமிட்டி மற்றும் மாநிலக் குழுவோடு அவர்கள் கலந்து பேசியிருக்கவில்லை. மக்கள் நலக்கூட்டணியின் முடிவு என்ற வகையில் வைகோ சொன்னதை ஒப்புக் கொண்டனர்.’’
‘‘பிறகு பிரச்னை எங்கே வந்தது?’’
‘‘மக்கள் நலக் கூட்டணி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது என்ற அறிக்கை வெளியானதும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடும் அதிருப்தி கிளம்பியது. ‘நம்முடைய கமிட்டிகளிடம் பேசாமல், நம்முடைய மாநிலத் தலைமை இதற்கு எப்படி சம்மதித்தது? நமக்கு நம்முடைய மாவட்டக் கமிட்டி, மாநில செயற்குழு, மத்தியக் குழுவின் முடிவுதான் முக்கியம். வைகோவின் முடிவையும் திருமாவளவனின் முடிவையும் பொருத்து நாம் கட்சியை நடத்த முடியாது’ என்று கொந்தளித்துள்ளனர். குறிப்பாக, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், ‘வைகோ மக்கள் நலக்கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் பொதுச் செயலாளர் அல்ல… அவர் ம.தி.மு.க-வுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர். நமக்கு நம்முடைய கமிட்டிகளின் விருப்பமும் முடிவும்தான் முக்கியம்’ என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.’’
‘‘திருமாவளவன் என்ன சொல்கிறார்?’’
‘‘திருமாவளவனுக்கும் பல அதிருப்திகள் இருக்கின்றன. அதுதான் காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தையொட்டி அப்பட்டமாக வெளிப்பட்டதே! திருமாவளவனுக்கு மக்கள் நலக் கூட்டணியின் சில முடிவுகள் உவப்பாக இல்லை. அதை உணர்ந்து கொண்டு தி.மு.க அவரை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருமாவளவனும் தனக்கு எப்போதும் அணுக்கமான தி.மு.க-வோடு லேசாக இணக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, காவிரிப் பிரச்னையையொட்டி தி.மு.க. இரண்டுமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டியது. அதில் முதன்முறையாக அக்டோபர் 6-ம் தேதி தி.மு.க. கூட்டிய கூட்டத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால், அந்தத் தகவல் திருமாவளவன் மற்றும் வைகோவுக்கு முறையாக சொல்லப்படவில்லை. அப்போது மக்கள் நலக் கூட்டணிக்குள் இதுபற்றி பிரச்னை எழுந்தபோது, ‘எங்கள் கட்சியில் விவசாய சங்கங்களுக்கு சில தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி அவர்கள் கலந்து கொண்டனர்’ என்று சமாதானம் சொன்னார்கள் கம்யூனிஸ்ட்டுகள்.
அதன்பிறகு, இரண்டாவது கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள திருமாவளவன் ஆர்வம் காட்டினார். ஆனால், இந்த முறை வைகோவும், கம்யூனிஸ்ட்டுகளும் அதற்கு சம்மதிக்கவில்லை. திருமாவளவன் அதுபற்றிக் கேள்வி எழுப்பியபோது, ‘இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் அறிவாலயத்தில் தி.மு.க கூட்டிய கூட்டத்துக்கு நாம் போனால், அது தேவையற்ற குழப்பத்தைத் தொண்டர்கள் மத்தியில் எழுப்பும்’ என்றனர். அதைக் கேட்ட திருமாவளவன், ‘கட்சிகள் கலந்து கொள்ள வேண்டாம், அக்டோபர் 6-ம் தேதி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டதைப்போல, இந்தக் கூட்டத்துக்கும் நம்முடைய விவசாய சங்கங்களை அனுப்பலாம்’ என்று வாதாடினார். ஆனால், அதைக் கேட்டு டென்ஷனான வைகோ, ‘விவசாய சங்கங்கள் கலந்துகொண்டாலும், கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டாலும் ஒன்றுதான்’ என்று சொல்லியிருக்கிறார்.’’
‘‘இப்போது என்னதான் முடிவு?’’
‘‘மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் இப்படி ஆளாளுக்கு தன்னிச்சையாக முடிவெடுப்பதைக் கண்டு நொந்துபோன வைகோ ஒரு கட்டத்தில், ‘நான் ஒருங்கிணைப் பாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் வைகோவின் இந்த முடிவு, கட்சித் தொண்டர்கள் மத்தியில், மிகப் பெரிய விரிசலை உருவாக்கும் என்று சொல்லி தற்காலிகமாக அவரை சமாதானப்படுத்தி உள்ளனர் கூட்டணியினர். அதோடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவில், ‘இப்போது இடைத் தேர்தலில் போட்டியிட நாம் பிடிவாதமாக இருந்தால், உள்ளாட்சித் தேர்தலை மக்கள் நலக்கூட்டணியாக இணைந்து சந்திக்க முடியாது. அதனால், இதில் வைகோவின் முடிவை ஏற்றுக் கொள்வோம். இடைத் தேர்தலைப் புறக்கணிப்போம்’ என்று முடிவெடுத்து மாவட்டக் கமிட்டிகளை சமாதானப்படுத்தி உள்ளனர். இப்படி எதிரும்புதிருமான மனநிலையோடு இருக்கும் மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகள் எந்த நேரத்திலும் சிதறும் என்பதுதான் அரசியலாளர்களின் தற்போதையக் கணிப்பு.’’ என்று கண் சிமிட்டியவாறே ‘ஜிவ்’வானார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: