Advertisements

மோடி அதிரடி… கறுப்புப் பணத்துக்கு முற்றுப்புள்ளி…?

ரு சில மணித்துளிகளில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது பிரதமர் மோடியின் அறிவிப்பு. ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட திடீர் அறிவிப்பு, இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியமான பல விளைவுகளை உருவாக்கப் போகின்றன.

நம் நாட்டின் பொருளாதாரத்தையே கேன்சர் கிருமி போல, செல் அரித்துவரும் கறுப்புப் பணம், கள்ளப் பணம், ஹவாலா ஆகிய மூன்று முக்கியமான விஷயங்களை ஒழிப்பதற்காக இப்படியொரு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் கள்ளப் பணமும், ஹவாலா பணமும் உடனடியாக ஒழிந்து போவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது. ஆனால், கறுப்புப் பணம் முற்றாக ஒழிந்துவிடுமா என்கிற கேள்வியை பலரும் எழுப்பவே செய்கின்றனர். முதலில் கள்ளப் பணத்தையும் ஹவாலா பணத்தையும் மோடியின் இந்த நடவடிக்கை எப்படி ஒழித்துக்கட்டப் போகிறது என்பதைப் பார்த்துவிட்டு, இறுதியாக கறுப்புப் பணம் பற்றிய கேள்விக்கு வருவோம்.

கள்ளப் பணம்!

10,000 நோட்டுகளில் 250 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக உள்ளன என்கிறது ஒரு புள்ளிவிவரம். மொத்த இந்திய ரூபாய் நோட்டுகளில் சுமார் 85%  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்தான். இவற்றின் எண்ணிக்கை மட்டுமே 2,300 கோடி. மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் கோடி.

கடந்த ஆறு ஆண்டுகளில் வங்கிகளில் உண்மையாக புழக்கத்தில் இருக்கவேண்டிய தொகையைக் காட்டிலும் 40% அதிகமாகப் புழங்கி இருப்பதாகச் சொல்கிறது ரிசர்வ் வங்கி.

கள்ளப் பணமானது உச்சபட்ச மதிப்பில் இருக்கும் நோட்டுகளாகவே அச்சிடப்படுகிறது. அப்போதுதான் அதிக மதிப்பிலான பணத்தை எளிதாக புழக்கத்துக்கு விட முடியும்.  இவை உண்மையான பணத்தைப் போலவே அச்சு அசலாக இருக்கும் அளவுக்குத் திறமையாக அச்சடிக்கப் படுகின்றன. பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவரில்தான் கள்ளப்பணம் அதிக அளவில் அச்சடிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. நம் நாட்டில் பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியை நிலைகுலையச் செய்யவேண்டும் என்கிற நோக்கத்துடன் பெரிய அளவில் கள்ளப் பணத்தை அச்சிட்டு, அதை இந்தியாவில் புழக்கத்தில் விடும் வேலையை பக்காவாகச் செய்து வருகிறது பாகிஸ்தான். நம் நாட்டுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை நேரடியாக ஆதரவு தந்து போஷித்து வரும் பாகிஸ்தான், நம் நாட்டில் கள்ளப் பணத்தை மறைமுகமாக உட்புகுத்தி, பொருளாதாரச் சீர்குலைவை நிகழ்த்தி வருகிறது. 

மக்களிடம் புழங்கிவரும் கள்ளப் பணம் வங்கிக்கு வரும்போது, அவற்றுள் பெரும்பாலானவை சரியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மீண்டும் வங்கியை விட்டுச் செல்லாதபடிக்கு தடுத்து நிறுத்தப்படுகிறது. இப்படித் தொடர்ந்து பல ஆண்டுகள் செய்தபின்னும் கள்ளப் பணத்தின் புழக்கம் அதிகமாகவே இருந்து வருவது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. 

இப்போது மத்திய அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் இந்தத் திட்டத்தினால், அதிக மதிப்பில் இருக்கும் கள்ளப் பணமானது பெருமளவில் ஒழிந்துபோக வாய்ப்புண்டு. 100 ரூபாய், 50 ரூபாய் போன்ற ஓரளவுக்குக் குறைந்த மதிப்பில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் மட்டுமே இனி கள்ளப் பணம் இருக்க வாய்ப்பு இருக்கும்.

ஹவாலா பணம்!

முதலில் ஹவாலா என்றால் என்ன என்று சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு  பணத்தை அனுப்பி, அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்வது ஒரு வழி. அப்படிச் செய்யாமல், வெளிநாட்டில் இருக்கும் ஹவாலா பார்ட்னர் ஒருவருக்கு, ‘இத்தனை கோடிகள் இங்கே டெபாசிட் ஆகியிருக்கிறது. இதற்கு சமமான தொகையை உங்கள் நாட்டில் இருக்கும் வேறு ஒருவருக்குத் தாருங்கள்’ என இங்கிருக்கும் ஒருவர் சொல்வார்.

அதேபோல அவரும், ‘இத்தனை கோடிகள் இங்கே டெபாசிட் ஆகியிருக்கிறது. அந்த மதிப்புக்கு பணத்தை உங்கள் நாட்டில் உள்ள இன்னாருக்குக் கொடுத்துவிடுங்கள்’ என்பார். இப்படி ஒரே சமயத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு அரசாங்கங்களை ஏமாற்றிவிட்டு, பல ஆயிரம் கோடிகளைக் காதும் காதும் வைத்த மாதிரி கைமாற்றுவதுதான் ஹவாலா. 

ஈட்டும் வருமானத்துக்கு அரசாங்கத்திடம் எந்தக் கணக்கையும் காட்டாமல் இருப்பதன் மூலம் எந்த வரியையும் செலுத்தாமல் பதுக்குவதுதான்  கறுப்புப் பணம். இப்படிப் பதுக்கப்படும் பணம், ஹவாலா பணமாக மறு அவதாரம் எடுத்து நம் நாட்டுக்குள் மீண்டும் சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த ஹவாலா பணத்தின் அளவு எவ்வளவு என்பதை துல்லியமாக எடுத்துச் சொல்கிற அளவுக்கு சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. இந்த ஹவாலா பணத்தை  முற்றிலும் ஒழித்தாக வேண்டும் எனில், முதலில் கறுப்புப் பணத்தை ஒழித்தாகவேண்டும். அந்த வேலையைத்தான்  மத்திய அரசு இப்போது செய்திருக்கிறது. 

ஹவாலா பிசினஸில் இருப்பவர்களிடம் பல நூறு கோடி ரூபாய் கறுப்புப் பணம் இருக்கும். அதிக மதிப்பில் இருக்கும் இந்தக் கறுப்புப் பணத்தை இப்போது தரப்பட்டிருக்கும் 50 நாள் அவகாசத்தில்  வங்கியில் டெபாசிட் செய்து கணக்கில் கொண்டு வர முடியாது. எனவே, ஹவாலா பிசினஸ் செய்பவர்கள் தங்களிடம் இருக்கும் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எரித்துச் சாம்பலாக்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.

கறுப்புப் பணம்!

கறுப்புப் பணம், கள்ளப் பணம் ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு நிகரான நிழல் பொருளாதாரம் (Black Economy) ஒன்று உருவாகி நாட்டின் வளர்ச்சியைத் தடம் புரட்டி வருகிறது. 
கறுப்புப் பணம் எப்படி உருவாகிறது? ஒரு  தனிநபரோ அல்லது நிறுவனமோ தனக்கு வரும் வருமானத்துக்கு அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளிலிருந்து தப்பிப்பதற்காக வருமானத்தை மறைப்பது, செலவைக் குறைத்து அல்லது கூட்டிக் காட்டுவது, ஊழியர்களுக்குத் தரவேண்டிய சலுகைகளைத் தந்ததாகச் சொல்லிவிட்டு தராமல் போவது, வர்த்தகச் செயல்பாடுகளில் முறைகேடான மதிப்பைப் பதிவு செய்வது… இப்படிப் பல வழிகளிலும் பதுக்கப்படும் பணம் தான் கறுப்புப் பணம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படி கறுப்புப் பணத்தை உருவாக்குபவர்கள்,  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவற்றைப் பல வகைகளிலும் பதுக்கி வைத்துள்ளனர். நம் நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கறுப்புப் பணமானது பெரும்பாலும் அதிக மதிப்பிலான ரூபாயில்தான் இருக்கும். 20, 50, 100 ரூபாய் நோட்டுக்களை பலரும் கறுப்புப் பணமாக வைத்திருக்க விரும்புவதில்லை. குறைந்த இடத்தில் அதிக மதிப்பிலான பணத்தை பதுக்கி வைக்கவே, இப்படி அதிக மதிப்பிலான ரூபாயில் கறுப்புப் பணத்தை சேர்த்து வைக்கிறார்கள்.

ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசாங்கம் இப்போது அதிரடியாக அறிவித்திருப்பதால்,   இதுவரை பதுக்கி வைத்திருந்த கறுப்புப் பணமானது இனியும் கணக்கில் கொண்டு வரமுடியாதபடிக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால் கறுப்புப் பணமானது குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்குக் குறையும் என்றே எதிர்பார்க்கலாம்.

இது மட்டுமே போதுமா?

மத்திய அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை புரட்சிகரமானது என்றாலும் இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையினால் இதுவரை உள்ள கறுப்புப் பணம் கணிசமாக ஒழிந்துபோகும் என்றாலும், இனிவரும் காலத்தில் கறுப்புப் பணம் உருவாகாமல் போகாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. கடந்த காலத்தில் கறுப்புப் பணமானது தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில்தான் அதிக அளவில் பதுக்கப்பட்டு வந்தது. இனிவரும் காலத்தில் உருவாகும் கறுப்புப் பணமும் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் பதுக்கப்படாமல் இருப்பதற்கான வழிவகைகளை நமது அரசாங்கம் உருவாக்கினால் மட்டுமே புதிதாக கறுப்புப் பணம் உருவாகமல் தடுக்க முடியும்.

 

ரியல் எஸ்டேட் விலை குறையும்!

இப்படிச் செய்யும்போது இனி ரியல் எஸ்டேட்டும், தங்கமும் விற்பனையில் பாதிப்பு ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது. முதலில் ரியல் எஸ்டேட் துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என, கடந்த 25 வருடங்களாக சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் சாய் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பி.மணிசங்கரிடம் கேட்டோம்.

“அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இனி கறுப்புப் பணத்தைக் கொண்டு யாரும் இந்தத் தொழிலை செய்ய முடியாது. அது மட்டுமின்றி, ‘ரெரா’ (RERA) சட்டமும் கடந்த காலங்களில் வலுவடைந்து இருப்பதால், இனி கறுப்புப் பணப் புழக்கம் பெரிய அளவில் தடுக்கப்படும். முதலில் நிலத்தை வாங்கும்போது கொஞ்சம் கறுப்புப் பணத்தை உள்ளேவிடுவார்கள். ஒரு சதுர அடி 5,000 ரூபாயில் இருக்கும் நிலத்தை வேகமாக வெள்ளையாக மாற்றவேண்டும் என்று 8,000 ரூபாய்க்கு வாங்குவார்கள்.

சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு நிலத்தை வாங்க வரும்போது, யார்தான் விற்க மாட்டார்கள்? ஆக அந்த இடத்தில் சந்தை மதிப்பு என்பது 5,000 ரூபாயில் இருந்து 8,000 ரூபாயாக அதிகரிக்கும். அதோடு நிலத்தை பதியும்போது, அதன் கைடுலைன் மதிப்பான 4,000 ரூபாய்க்குதான் பதிவார்கள் என்னும்போது 4,000 ரூபாய் கறுப்புப் பணம் ஒரு சதுர அடிக்கு புழங்கத் தொடங்கும். இதனால் அடுத்தடுத்த ஏரியாக்களில் வீடுகளை வாங்கும்போது சந்தை விலையான 8,000 ரூபாய்க்குதான் ஒரு சதுர அடி நிலத்தை வாங்க முடியும் என்பதால், மொத்த ரியல் எஸ்டேட் துறையும் விலை அதிகரிக்கும். இனி இந்த விலை அதிகரிப்பு குறையும் என்று எதிர்பார்க்கலாம்’’ என்று முடித்தார் மணி சங்கர்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இப்போது அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து பினாமி சட்டத்தையும் மத்திய அரசாங்கம் முழு மூச்சில் கொண்டுவந்தால், பலரும் சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருக்கும் சொத்துகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது மனைகளின் விலை இன்னும் வேகமாக குறையும்.  இதுவரை மனை வாங்காதவர்கள் கையில் காசு வைத்திருந்தால், விலை குறைந்தபிறகு வாங்குவதற்கு வாய்ப்புண்டு.

தங்கத்துக்கும் பாதிப்பு!

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாகி விட்ட நிலையில், அந்தப் பணத்தை இரவோடு இரவாக தங்கமாக மாற்றிவிட மக்கள் துடித்ததன் விளைவாக, கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு முழுக்க முழுக்க கடையைத் திறந்து வைத்து விற்பனை செய்தார்கள் நகைக்கடை வியாபாரிகள்.

எளிய மக்கள் விரும்பிச் செய்யும்  முதலீடாக மட்டுமல்ல, பெரும் பணக்காரர்கள் விரும்பும் முதலீடும்  தங்கம்தான். காரணம், தங்கத்தை வாங்கும்போதும், விற்கும்போதும்  எந்த பெரிய டாக்குமெண்டையும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. தவிர, ஒரு தங்க பிஸ்கெட்டை வாங்கி, பீரோவில் ஒழித்து வைப்பதன் மூலம் பல லட்சம் ரூபாயை எளிதாக பதுக்கி வைத்துவிட முடியும். அதேபோல, அதைப் பணமாக மாற்ற சில மணி நேரம்கூட செலவழிக்க வேண்டிய தேவை இருக்காது. இதனால்தான் மக்களோடு மக்களாக சேர்ந்து, தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தில் முடிந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் குவித்தனர் சிலர். நகை வியாபாரிகள் தங்களுடைய பில்களைக் கணக்குக் காட்ட ஒரு வார அவகாசம் இருப்பதால்,  துணிந்து தங்கத்தை விற்றனர். 

அரசின் இந்த நடவடிக்கையினால் தங்கத்தின் விலைப்போக்கில் என்ன மாற்றம் வரும் என கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம்.

“தற்போது 500, 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றிருப்பதால், புதிய நோட்டுகள் குறைவாகவே கிடைக்கிறது. எனவே, அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் விற்பனை இந்தியாவில் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த அறிவிப்பு வந்தவுடனே இரவு முழுக்க கடை வைத்தவர்களுக்கு, மறுநாள் தொடங்கி வியாபாரம் என்பது சுத்தமாக இல்லை. தற்போது தங்கத்தின் விலை இறக்கத்தில் தான் இருக்கிறது. இந்த இறக்கம் முதலீடு செய்வதற்கான நேரம்தான் என்றாலும், அதற்கான சூழல் நம் நாட்டில் இல்லை” என்றார்.

தங்கத்திலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்வதற்கு இப்போது பெரிய நிபந்தனை எதுவும்  இல்லை என்றாலும் கூடிய விரைவில் அதற்கும் சில நிபந்தனைகளை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்போது கறுப்புப் பணமானது இவற்றில் முதலீடாவது பெரிய அளவில் தடுக்கப்படும்.

ஆக மொத்தத்தில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை மெள்ள மெள்ள ஒழித்துக் கட்டும். நம் நாடு வல்லரசாக மாறுவதற்கான முதல் அடியை இப்போதுதான்  எடுத்து வைத்திருக்கிறது. இனி வேகமாக மாற்றங்கள் வரத் தொடங்கும் என்பதில் சந்தேகமே இல்லை!


ரூபாய் மதிப்பு உயரும் வாய்ப்பு உண்டு!

அனந்த நாகேஸ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர்

‘‘சரியான நேரத்தில், சரியாகத் திட்டமிட்டு இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதனால் அரசின் செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து உள்ளதோடு, மிகுந்த கவனத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இது இருக்கிறது.

தானாக முன்வந்து வருமானத்தை அறிவிக்கும்  திட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்திருப்பது முற்றிலும் சரியானதாகவே படுகிறது.

மத்திய அரசின் இந்த முடிவால் பணம் வெளிநாடுகளுக்குப் போய்விடும் என்றும், ரூபாயின் மதிப்பு சரியும் என்றும் குறிப்பிடுவது மிகைப்படுத்தப் பட்ட கூற்றாகவே தெரிகிறது. மாறாக, இந்த முடிவினால் புழக்கத்தில் இருக்கும் பணம் குறையும் என்பதால், வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கும், ரூபாய் மதிப்பு உயர்வதற்கும்தான் வாய்ப்பு உண்டு. வெளிநாடுகளுக்குப் பணத்தை எடுத்துச் செல்வது என்பது இனி அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் வரித் துறை அதிகாரிகள் தற்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதுடன், பெரும்பாலான நாடுகளின் செலாவணிகள் நிலையற்று  இருக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைப் பேராசிரியர் கென்னத் ரோகொஃப், அமெரிக்காவுக்கு பூஜ்ய மற்றும் நெகட்டிவ் வட்டி விகிதங்களைப் பரிந்துரைத்தது, பெரும் நிதி நெருக்கடியை அங்கே ஏற்படுத்தியது. அந்தப் பரிந்துரை மிகவும் தவறானதும், ஆபத்தானதும்கூட.  அப்படிப்பட்ட நிலைமை இங்கு இல்லை. இது நிதி சார்ந்த பாசிச நடவடிக்கை என்றும் சொல்ல முடியாது. அப்படி யாரேனும் சொன்னால், அது தவறாக எடுத்துச் சொல்வதாகவே இருக்கும். முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள்  வேண்டுமானால் அப்படிச் சொல்லலாம். உண்மையான குடிமக்கள் இதை வரவேற்கவே செய்கிறார்கள்.

குறுகிய காலத்தில் பணப்புழக்கம் குறைந்து, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, இரண்டு, மூன்று காலாண்டுகளுக்கு இந்த நிலை தொடரலாம். அதற்கு முன்பாகவே நிலைமை சரியாகி விட்டால் நல்ல விஷயம்தான். சிஎல்எஸ்ஏ மற்றும் கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட அமைப்புகளும் இதையே தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை, திட்டமிட்டதைவிட சிக்கல்கள் நிறைந்ததாக இருப்பதால், மிகக் குறுகிய காலத்தில் அதனை நடைமுறைப்படுத்துவது கொஞ்சம்  சிரமமான காரியம்தான். இந்த ரிஸ்க்கானது தவிர்க்க முடியாதது. ஜிஎஸ்டி விதிமுறையானது இன்னும் எளிமையானதாக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும், வருவாய் பங்கீடுகளிலும் சுமுகமான நிலை இருந்திருக்கும். எனவே, இதுபோன்ற அறிவிப்புகளில் எப்போதுமே ஆக்கபூர்வமான சிந்தனை அவசியமாகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஜிஎஸ்டி  வரி விதிப்பு முறையையும், ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதையும் ஏற்றுக்கொள்வதற்கு தனியார் துறையினருக்கு அதிகப் படிப்பினைகள் மிகவும் அவசியம். இந்த இரண்டையும் அவர்கள் புரிந்துகொண்டு அதன்படி செயல்படுவதற்கு சில காலம் ஆகும்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க தொழில் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியைக் குறைப்பது, கடந்த காலத்தில் பின்னோக்கி வரி விதிக்கப்படுவது (GAAR) போன்று ஏதாவது ஒரு வகையில் சலுகைகளை அறிவிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளை வலுவிழக்கச் செய்யலாம்.

அரசின் இந்த நடவடிக்கையினால் பொருளாதாரம் வளருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், சமூக அளவிலும் பொருளாதார அளவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போதே சொல்வது யூகத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கும்.

இதனால் வங்கிகளின் வளர்ச்சிக்காகத் தேவைப்படும் மூலதனத்தை ரிசர்வ் வங்கி  தந்துவிடப் போவதில்லை. இது ரிசர்வ் வங்கியிடமிருந்து இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டு, அரசிடமிருந்துதான் வங்கிக்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதன் விளைவாக, பணப்புழக்கம் கணிசமாகக் குறைந்தால் நல்லதுதான். அப்படி எதுவும் நடக்காவிட்டால், இந்த நடவடிக்கையில் பெரிய பிரயோஜனமில்லை.

அரசின் இந்த நடவடிக்கையினால் தேசத்துக்கான கடன் ரேட்டிங்குக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. குறுகிய காலத்தில்  அரசின் வருமானம் குறைந்து, பற்றாக்குறை அதிகரித்தால் மட்டுமே நமது ரேட்டிங் குறைக்கப்பட வாய்ப்புண்டு உண்டு. இதனால் பொருளாதார நன்மைகள் உருவாகவேண்டும் என நாம் விரும்பினாலும் அது நடப்பதற்கு நீண்ட காலமாகும்.


அரசியல்வாதிகள் முதல் அறக்கட்டளை வரை!

எம்.ஆர்.வெங்கடேஷ், ஆடிட்டர்.

‘‘அரசியல்வாதிகள், மது விற்பனை செய்பவர்கள், கல்வி நிலையங்களை நடத்துபவர்கள், அரசு உயர் அதிகாரிகள், பெரிய வியாபாரிகள்  இவர்கள்தான் கறுப்புப் பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் மிக அதிக தொகைகளில் பணத்தைக் கையாள்கிறார்கள். இவர்களுக்குத்தான் பணத்தை எப்படியெல்லாம் பதுக்கலாம், எப்படியெல்லாம் வெள்ளையாக மாற்றலாம் என்ற சூட்சமங்களும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர்களுக்காகவே உழைப்பதற்கு ஒரு கூட்டம் ‘பினாமி’ என்ற பெயரில் தயாராக இருக்கிறார்கள்.

கறுப்புப் பணம் ரொக்கமாகவே பதுக்கி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதால் இவர்கள், உள்நாட்டில் ரியல் எஸ்டேட் போன்ற அசையா சொத்துக்களாகவும், தங்கம், வைரம் போன்ற அசையும் சொத்துகளாகவும் மாற்றிவிடுகிறார்கள். பிநோட்ஸ் என்ற பங்கேற்பு ஆவணங்கள் மூலமாகப் பங்குச் சந்தையில் கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுகின்றன. இவற்றில் முதலீடு செய்பவர்களின் விவரங்களை முழுமையாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தற்போது இதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்க செபி திட்டமிட்டு வருகிறது.

கறுப்புப் பணத்தைப் பிறருக்குப் பொருட்களாகவும், சேவையாகவும்கூட தருகிறார்கள். சிலர், ஷெல் கம்பெனிகளை (சிறிய அளவில் நஷ்டம் ஏற்படுத்தி,  பெரிய அளவில் நஷ்டக் கணக்கினைக் காட்ட உதவும் கம்பெனிகள்) உருவாக்கி, தங்கள் கறுப்புப் பணத்தை நல்ல பணமாக மாற்றுகிறார்கள்.

கறுப்புப் பணத்தை ஹவாலா மூலம் அந்நிய செலாவணியாக மாற்றி, வெளிநாடுகள் வழியே பணத்தைக் கொண்டு வருவதற்கு அறக்கட்டளைகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அறக்கட்டளைகள் பொது சேவை சார்ந்த பல விஷயங்களில் ஈடுபடுகின்றன. அதற்காகப் பல நாடுகளிலிருந்தும் பல நபர்களிடமிருந்தும் பல ஆயிரம் கோடிகளில் நன்கொடைகள் குவிகின்றன. இப்படிக் குவியும் பணம் முழுவதுமே கறுப்பு பணம் என்று சொல்ல முடியாது. ஆனால், அறக்கட்டளைகள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மை. கறுப்புப் பணப் பதுக்கல் கும்பலுடன் அறக்கட்டளைகள் கூட்டு சேர்ந்து, அந்தப் பணத்தை வரிச்சலுகையுடன் வெள்ளையாக்கிவிடுவதுடன், உடனடியாகச் சொத்துக்களாகவும் மாற்றப்படுகின்றன.

இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக விலை உயர்ந்த பாரம்பரியப் பொருட்களையும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர ஆபரணங்களாகவும், ஏன், விலை உயர்ந்த ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களாகவும் வாங்கி அவற்றை வெள்ளையாக்கிவிடுகிறார்கள்.

கறுப்புப் பணமும் கள்ளப் பணமும் மிகுந்து இருப்பதுதான் நம் நாட்டின் பொருளாதாரம் சமநிலையற்று இருக்கக் காரணம். இதனால் பணப்புழக்கம் சீராக இல்லாமல், சிலரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கிறது. வரி ஏய்ப்பு நடப்பதாலும், நலத் திட்டங்களுக்கான பணம் கொள்ளை அடிக்கப்படுவதாலும் விலைவாசி ஏற்றம் போன்றவை சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி விடுகின்றன.’’

Advertisements
%d bloggers like this: