Advertisements

விண்டோஸ் 10: இரகசிய உதவிகள்

விண்டோஸ் 10 இயக்கத்தினை விரைவாகச் செயல்பட வைத்திட மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து பார்த்தோம். இது குறித்து பல வாசகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலர், அக்கட்டுரையில் தரப்படாத சில வசதிகள் குறித்து கேட்டுள்ளனர். இதில் பல வசதிகள், பலர் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டவையாக உள்ளன. ஆனால், எப்படி அந்த வசதிகளைப் பெறுவது என்பதை அறியாமல் உள்ளனர். அப்படிப்பட்ட வசதிகள் வெளிப்படியாகத் தெரிய வராது. சில இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை மிக எளிதாகப் பெற முடியும். அத்தகைய சில இரகசிய வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கார்டனாவின் இரகசிய கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கத்தில் முழுமையான கால்குலேட்டர் ஒன்று உண்டு. இந்த அப்ளிகேஷனை ஸ்டார்ட் மெனுவில் உள்ள தேடல் கட்டத்தில் தேடி, பின்னர் பெற்று பயன்படுத்த வேண்டும்.
அதற்குப் பதிலாக, உடனடியாகப் பயன்படுத்த, விண்டோஸ் 10 கொண்டிருக்கும் டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆன ‘கார்டனா’ உதவுகிறது. இதற்கு விண்டோஸ் கீயை அழுத்திவிட்டு, நாம் மேற்கொள்ள விரும்பும் கணக்கினை இட்டு விடை பெறலாம். கணக்கினை அமைக்கும்போது வழக்கமான குறியீடுகளை (+, -, *, மற்றும் /) கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தலுக்கான குறியீடுகளை அமைக்கலாம். சதவீதம் அறிய (%), அடுக்கேற்றம் (Exponentiation) அறிய (^). கார்டனா தானாகவே, பார்முலா ஒன்றில் தேவைப்படும் உள்ளார்ந்த கணக்கினை அமைத்துக் கொண்டு விடையைக் காட்டும். விடை தேடல் முடிவின் மேலாகக் காட்டப்படும். இன்னும் நிறைய கணக்குகளைப் போட வேண்டும் என்றால், என்டர் அழுத்துங்கள். முழு கால்குலேட்டரும் கிடைக்கும்.

சிறப்பு குறியீடுகள், அடையாளங்களை அமைக்க: வெளிநாட்டு பணக் குறியீடு, பின்னங்கள், எமோஜி எனப்படும் உணர்ச்சிப் படங்கள் ஆகியவற்றை கம்ப்யூட்டரில் டாகுமெண்ட்டில் உள்ளீடு செய்வது, வழக்கமான கீ போர்டில் சற்று சிக்கல் ஏற்படுத்தும் வேலையாகும். ஆனால், இவை அனைத்தையும் தந்து நம் வேலையை எளிதாக்குகிறது விண்டோஸ் 10 இயக்க முறைமை திரையில் காட்டும் கீ போர்ட். இதற்கு முன்னர், கீ பேட் மற்றும் ஆல்ட் கீ அழுத்தி இவற்றை அமைத்து வந்தோம். அல்லது கேரக்டர் மேப் பெற்று, அதிலிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்து வந்தோம். ஆனால், இப்போது அனைத்தும் எளிதாக அமைந்துள்ளது. இதனை மேற்கொள்ள, டாஸ்க் பாரில் காலியாகவுள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Show touch keyboard button என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கீ போர்ட் ஐகான் ஒன்று டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் நேரம் காட்டும் இடத்திற்கு முன்னதாக இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீ போர்டை தொடு உணர்வு திரையாகவும், மவுஸால் கிளிக் செய்யக் கூடியதாகவும் பயன்படுத்தலாம். அடுத்து கிடைக்கும் கீ போர்டில், சிறப்பு எழுத்துகள் குறியீடுகளோடு வேண்டும் எனில், அந்த எழுத்தில் கிளிக் செய்திட வேண்டும். இதே போல பின்னங்கள் கீ போர்டில் காட்டப்படும். 1/2 அடையாளம் உள்ள கீயை அழுத்தினால், கூடுதலாக எட்டு பின்னங்கள் கிடைக்கும். 123 கீயை அழுத்தினால், கீ போர்ட் முழுவதும் சிறப்பு குறியீடுகள் கிடைக்கும். ஸ்மைலி ஐகான் கீயை அழுத்தினால், வெவ்வேறு எமோஜிக்கள் அடங்கிய கீ போர்ட் கிடைக்கும். கீ போர்டுக்கு வெளியே கிளிக் செய்தால், இது மீண்டும் டாஸ்க் பாரில் அமரும். அங்கு வேண்டாம் என்றால், மீண்டும் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து, மெனு பெற்று, Show touch keyboard button என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

டிஸ்க் பயன்பாட்டின் இடம் அறிய: விண்டோஸ் 10 இயங்கும் லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில், அதில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் எவ்வளவு இடம் காலியாக உள்ளது என எளிதாக அறியலாம். எக்ஸ்புளோரர் சென்று, ஒவ்வொரு ட்ரைவாகக் கிளிக் செய்து, Properties கிளிக் செய்து தேடவேண்டிய அவசியமில்லை. இது நமக்கு பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால், திடீரென ஒரு நாளில் “ஹார்ட் டிஸ்க்கில் இடம் இல்லை. பழைய பைல்களை நீக்கி இடம் தருகிறாயா?” என நம் கம்ப்யூட்டர் நம்மிடம் கேட்கும். அப்போது அவசரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், முன்னதாகவே, அடிக்கடி, நம் டிஸ்க் இடத்தை எத்தகைய பைல்கள் இடம் பிடித்துள்ளன என்று அறிவது நல்லதல்லவா? அப்போதுதான், முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை சேமித்து வைக்க நமக்கு எளிதாக இடம் கிடைக்கும். உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் தற்போதைய சரியான நிலையை அறியக் கீழ்க் குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும். தேடல் கட்டத்தில் storage என உள்ளீடு செய்து, கிடைக்கும் விடைகளில், முதலாவது உள்ளதனைக் கிளிக் செய்திடவும். இங்கு அனைத்து ட்ரைவ்களுக்குமாய் வரைபடம் இருக்கும். நீங்கள் காண விரும்பும் ட்ரைவின் ஐகானைக் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் பார் சார்ட்டினைப் பார்க்கவும். பயன்படுத்தப்பட்டுள்ள இடம், காலியாக இருக்கும் இடம், பைல் வகைகள் வாரியாக பார் சார்ட் கிடைக்கும். தேவையற்றவற்றை அங்கேயே நீக்கி இடம் ஏற்படுத்தலாம். இவற்றில் முக்கியமான மூன்று பிரிவுகள் : System & reserved (விண்டோஸ் இயக்க முறைமை இயங்க தனக்கென எடுத்துக் கொண்ட இடம்), Apps & games (அப்ளிகேஷன் புரோகிராம்கள், கேம்ஸ் ஆகியன) Temporary files (தற்காலிக பைல்கள்.) இதுதான் நமக்கு வியப்பினைத் தரும். இவ்வளவா? என்று நாமே கேட்டுக் கொள்வோம். எந்தவிதத் தயக்கமுமின்றி, இவை அனைத்தையும் நீக்கிவிடலாம்.

மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் இல்லாத இன்னொன்று: விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்யப்படுகையில், சிஸ்டம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்துமாறு கூறும். ஆனால், நீங்கள் வேறு ஒரு (ஜிமெயில் அக்கவுண்ட் போல ஒன்று) அக்கவுண்ட் பயன்படுத்த விரும்பினாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும். இதனை, விண்டோஸ் 10 பதியப்பட்டு, செயல்பட ஆரம்பித்த பின்னரும் மேற்கொள்ளலாம்.
பொதுவாக, மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்துவது நல்லது என்று அறியப்படுகிறது. குறிப்பாக, நீங்கள் ஒன் ட்ரைவ் போன்ற க்ளவ்ட் சேவை அல்லது ஆபீஸ் 365 போன்ற ஒரு செயலி பயன்படுத்துவதாக இருந்தால், நிச்சயம் அது உங்களுக்குக் கை கொடுக்கும். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 10 சிஸ்டம் இயக்கி வந்தால், அவற்றை ஒருங்கிணைத்து பைல்களைக் கையாள்வது எளிதாகிவிடும். ஆனால், இது போன்ற சேவைகளைப் பயன்படுத்தாமல் இருந்து, இன்னொரு அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கும் இடம் தரப்படுகிறது. கீழே குறிக்கப்பட்டுள்ளபடி செயல்படவும்.
1. Settings > Accounts எனச் செல்லவும். பின்னர், Your email and accounts என்பதில் கிளிக் செய்திடவும்.
2. தொடர்ந்து Sign in with a local account instead என்பதில் கிளிக் செய்திடவும்.
3. ஏற்கனவே தரப்பட்ட மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டைக் கொடுத்து, நீங்கள் இவ்வாறு மாற்றுவதற்கு அதிகாரம் கொண்டவர் என்பதை அறியத் தரவும். அடுத்து Next கிளிக் செய்திடவும்.
4. பின்னர் கிடைக்கும் Switch To A Local Account என்னும் பக்கத்தில், புதிய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் தரவும். இங்கு பாஸ்வேர்டுக்கான ஹிண்ட் கேள்வி பதில் கேட்கப்படும்.
5. அடுத்து Next கிளிக் செய்து, மைக்ரோசாப்ட் அக்கவுண்ட்டில் இருந்து வெளியேறி, புதிய லோக்கல் அக்கவுன்ட் பயன்படுத்தி உள் நுழையவும்.
இந்த மாற்றம், ஏற்கனவே உள்ள பைல்களையோ, விண்டோஸ் டெஸ்க்டாப் புரோகிராம்களையோ பாதிக்காது. நீங்கள் ஏற்கனவே விண்டோஸ் ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்கள் பெற்றுப் பதிந்திருந்தால், க்ளவ்ட் சேவையினைப் பயன்படுத்தியிருந்தால், மீண்டும் புதிய யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும்.

ஒன் ட்ரைவ் இயக்க முடக்கம்: விண்டோஸ் 10 இயக்க முறைமையில், ஒன் ட்ரைவ் செயலி இணைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது. இரண்டிற்கும் இடையேயான இணைப்பு மிக வலுவானதாகும். பைல் எக்ஸ்புளோரரிலேயே இதனைக் காணலாம். இதனை நீக்கும் வழிகள் எளிதாகக் காட்டப்பட்டிருக்காது. ஆனால், நீங்கள் விரும்பவில்லை என்றால், அதனை நீக்கலாம்.
ஒன் ட்ரைவ் க்ளவ்ட் சேவையினை நீங்கள் விரும்பாவிட்டால், வேறு ஒரு க்ளவ்ட் சேவையினைப் பயன்படுத்த முடிவெடுத்தால், ஒன் ட்ரைவ் சேவையினை அறவே நீக்கிவிடலாம். ஒரு சிலர், ஏன் நம் பைல்களை நம் நேரடியான கட்டுப்பாட்டில் இல்லாத சர்வரில் வைத்திட வேண்டும் என எண்ணலாம். காரணம் எதுவாக இருந்தாலும், ஒன் ட்ரைவ் சேவையினை நீங்கள் தாராளமாக நீக்கலாம்.
உங்கள் கம்ப்யூட்டரை ஒன் ட்ரைவுடன் இணைக்கும் செயலி, உங்களை sign in செய்திடக் கேட்கும்போது, Cancel என்பதன் மீது கிளிக் செய்திடவும். இதன் பின்னர், ஒன் ட்ரைவ் அமைப்பினை மாற்றலாம். அதன் மூலம், அது தானாக, நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குகையில், ஒன் ட்ரைவில் இணையும்படி கேட்காது. இருப்பினும் ஒன் ட்ரைவ் ஐகான், பைல் எக்ஸ்புளோரரில் காட்டப்படும். பிற்பாடு உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டால், இதில் கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

மின்சக்தி சிக்கனம்: லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரியை நிர்வகிப்பதற்கு, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் வழிகள் தரப்பட்டுள்ளன. Battery Saver என புதிய ஒரு டூல் உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரியின் திறன் 20%க்கும் குறைவாக, அல்லது நாம் அமைத்துவைத்த நிலைக்குக் குறைவாக இருக்கும்போது Battery Saver டூல் தானாகச் செயல்படும். இதன் மூலம், நாம் மின்சக்தி இணைப்பு இல்லாத இடத்தில் இருக்கையில், மிச்சம் இருக்கும் சக்தியினைச் சரியாக நிர்வகித்து, மிக அதிக பட்ச நிமிடங்கள் பயன்படுத்த இயலும். பின்னணியில் இயங்கும் தேவையற்ற செயலிகள் இயங்குவது நிறுத்தப்படும். இயங்கிக் கொண்டிருக்கும் டைல் செயலிகளுக்கான அப்டேட் செயல்பாடுகள், மின் அஞ்சல் அறிவிப்புகள் போன்ற அனைத்து அறிவிப்புகளும் நிறுத்தப்படும்.
Battery Saver டூல் செயல்படும் மின்சக்தி அளவினை, நாமாக அமைக்க நோட்டிபிகேஷன் ஏரியாவில் கிடைக்கும் பேட்டரி ஐகான் மீது கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Battery Saver என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஐகான் மீது பச்சை இலை போன்ற படம் இருந்தால், Battery Saver இயங்குகிறது என பொருள். இதில் மீண்டும் கிளிக் செய்தால், Battery Saver இயங்காது. சில கம்ப்யூட்டர்களில், அமைப்பு முறைகளில் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த ஐகான் காட்டப்படாமல் இருக்கலாம். அந்த கம்ப்யூட்டர்களில், Settings > System > Battery எனச் சென்றால், பேட்டரி சேவர் நிலை குறித்து அனைத்தும் அறியலாம். எவ்வளவு குறைவான திறன் வருகையில், பேட்டரி சேவர் இயங்க வேண்டும் என்பதனை நாமாக அமைக்கலாம். மாறா நிலையில், அது 20% ஆக இருக்கும். விமானப் பயணம் போன்ற நெடுந்தொலைவு பயணம் மேற்கொள்கையில், இதனை 50% ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.
இந்த பேட்டரி சேவர் இயங்கத் தொடங்கியவுடன், திரை ஒளித் திறன் உடனடியாகக் குறைத்துக் காட்டப்படும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒரு செயல்பாடு, அதிக மின் சக்தியைக் காப்பாற்றி வைக்கும்.

திரைப் பின்னணி படம் அமைக்க: நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் திரைப் பின்னணியில் உள்ள படத்தை அல்லது லாக் ஸ்கிரீன் படத்தை நம் விருப்பப்படி அமைக்க நாம் விருப்பப்படுவோம். அதற்கான படத்தைத் தேர்ந்தெடுத்தால், அது மானிட்டர் திரைக்குச் சரியான அளவில் வருமா? இன்னும் சற்று இழுத்துப் பெரிதாக அமைக்க வேண்டுமா? அப்படி அமைத்தால் படம் பார்க்க சகிக்காத வகையில் அமைந்துவிடுமா? என்ற சந்தேக வினாக்கள் நமக்குத் தோன்றும். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மறைவாகத் தரப்பட்டுள்ள ஒரு டூல் இதற்கான தீர்வைத் தருகிறது. நாம் விரும்பும் போட்டோவினை திரைப் பின்னணி மற்றும் லாக் ஸ்கிரீன் அல்லது உள் நுழையும் (sign-in) திரையில் அமைக்கலாம். இதற்கு நாம் விரும்பும் படத்தினை, Photos அப்ளிகேஷனில் திறக்க வேண்டும். அதன் பின் Edit மீது கிளிக் செய்திடவும். இது பலவகையான எடிட்டிங் டூல்களை ஒரு குழுவாக நமக்குத் தரும். இடது பக்கத்தில் சில டூல்களும், படத்தின் அளவை அமைக்க வலது புறம் Crop டூலும் கிடைக்கும். இதில் அழுத்தினால், படத்தின் அளவை நாம் விரும்பியபடி அமைக்க முடியும். படத்தில் வேண்டாத இடத்தினை வெட்ட முடியும். திரை அளவிற்கு ஏற்றபடி அமைக்க, இந்த டூல் உதவும். பின்னர், Aspect Ratio என்பதில் கிளிக் செய்து, படத்தினை அமைக்கக் கூடிய பல அளவுகள் தரப்படும். அதில் Lock Screen தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் படத்தில் வேண்டாத இடத்தை வெட்டி போட்டோவைச் சிறப்பாக அமைக்கலாம். பின்னர், Apply, மற்றும் Save A Copy கிளிக் செய்திடவும். இப்போது போட்டோஸ் செயலியின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளி ஐகான் மீது கிளிக் செய்திடவும். அதன் பின்னர், Set As என்பதில் கிளிக் செய்து, தொடர்ந்து Set As Lock Screen அல்லது Set As Background என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நீங்கள் தேர்ந்தெடுத்து சரி செய்து, வெட்டி அமைத்த படம் நீங்கள் விரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Advertisements
%d bloggers like this: