Advertisements

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு

பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘வாட்ஸ் அப்’ தொடர்ந்து பல புதிய வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. இருப்பினும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது வீடியோ அழைப்புகளையே. அந்த வசதியைச் சென்ற வாரம் தன் நூறு கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்தது. இணைய இணைப்பு உள்ள எவரும் தங்கள் மொபைல் போன் வழியாக, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்.

ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக் கொள்ளலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆகிய இயக்க முறைமைகள் உள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘ஸ்கைப்’. ஸ்நாப் நிறுவனத்தின் ‘ஸ்நாப் சேட்’, பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் நிறுவனத்தின் ‘பேஸ் டைம்’ மற்றும் கூகுள் ‘டுயோ’ ஆகிய செயலிகள் ஏற்கனவே இந்த வசதியினைத் தந்து வருகின்றன. வீடியோ அழைப்பு மட்டுமின்றி, ஒரே செயலியில் செய்திகளையும் அனுப்பலாம். இந்த வசதியினைத் தாமதமாக வாட்ஸ் அப் தந்தாலும், இதனைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை, உலக அளவில் அதிகமாக இருக்கும். ‘பேஸ்டைம்’ செயலி ஆப்பிள் நிறுவன போன்களில் மட்டுமே செயல்படும். அதே போல கூகுள் நிறுவனத்தின் ‘டுயோ’ (Duo) அண்மையில் வந்த ஆண்ட்ராய்ட் இயக்க முறைமைகளில் மட்டுமே செயல்படும்.
இந்த வசதி நவம்பர் 15 செவ்வாய் அன்று உலகில் 180 நாடுகளில் உள்ள வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. முதலில், சென்ற மே மாதத்தில், இந்த செயலி சோதனை செய்து பார்க்கப்பட்டது. பின்னர், சிலருக்கு மட்டும் இதன் சோதனைத் தொகுப்பு சென்ற அக்டோபரில் வழங்கப்பட்டு, சோதிக்கப்பட்டு, பின்னூட்டம் பெறப்பட்டது. இப்போது அனைவரும் பயன்படுத்தத் தரப்பட்டுள்ளது.
ஆப்பிள் ‘பேஸ்டைம்’ செயலியில் உள்ளது போல, தொடர்பு கொள்ளப்படும் இரு முனைப் பரிவர்த்தனைகளும், ‘மறை குறியாக்க முறையில்’ (End to End Encryption) மறைக்கப்பட்டு பயனாளர்களுக்கு மட்டும் கிடைக்கின்றன. மறை குறியாக்கம் என்பது, இருவரின் காணொளிப் பரிவர்த்தனைகளும், அவர்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில், மறைவான குறியீடு மூலம் பரிமாறிக் கொள்ளப்படும். எனவே, அரசோ அல்லது நீதிமன்றமோ ஆணையிட்டாலும், இவை குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தாலும் ஒன்றும் செய்திட முடியாது.
இது இணையத்தில் நம் தனி நபர் உரிமையைக் காத்திடும் அரிய தொழில் நுட்பம் என்று பலராலும் பாராட்டப்படுகிறது. மற்ற செயலிகளில், இந்த மறை குறியாக்கம் ஓரளவிற்கே உள்ளது. ஆனால், வாட்ஸ் அப் செயலி, நூறு கோடி பேர்களுக்கு மேல் உள்ள பயனாளர்கள் அனைவருக்கும் இந்த மறை குறியாக்க வசதியை ஒரே நேரத்தில் தந்திருப்பது மிகவும் வியக்கத்தக்க, பாராட்டத்தக்க விஷயமாகும்.
இந்த வீடியோ அழைப்பு வசதியைப் பயன்படுத்த, வழக்கம்போல பேசுவதற்கு, அழைப்பவரின் பெயர் பதிவைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள தொலைபேசிக்கான ஐகானை அழுத்தினால், Voice Call / Video Call என இரு ஆப்ஷன்கள் தரப்படும். வீடியோ அழைப்பினைத் தேர்ந்தெடுத்தால், உடன் வீடியோவிற்கான கேமரா இயக்கப்பட்டு, அழைப்பை ஏற்படுத்துபவரின் முகம் திரையில் தெரியும். அழைப்பு இணைக்கப்பட்டவுடன், இருமுனைகளில் உள்ளவர்களின் உருவங்கள் காட்டப்படும். உயிர்த்துடிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேசலாம். அழைக்கப்படுபவரின் ஸ்மார்ட் போனில் இந்த வசதி பெறும் வகையில் வாட்ஸ் அப் மேம்படுத்தப்படவில்லை என்றால், அந்த தகவல் ஆங்கிலத்தில் தரப்படும்.“Could not place call. “………..” is using a phone that doesn’t support video calls” என்று அந்த செய்தி இருக்கும்.
வீடியோ அழைப்பு இயக்கத்தில் இருக்கையிலேயே, ஸ்மார்ட் போனின் முன்புற, பின்புற கேமராவிற்கு மாற்றிக் கொள்ளலாம். அழைப்பின் ஒலியை முடக்கி வைக்கலாம். அல்லது சிகப்பு பட்டன் அழுத்தி, அழைப்பைத் துண்டிக்கலாம். வீடியோ அழைப்பினை மேற்கொள்கையில், போனில் வேறு செயல்களிலும் ஈடுபடலாம். வீடியோ அழைப்பு பின்னணியில் இயங்கிக் கொண்டே இருக்கும்.
வாட்ஸ் அப் செயலி இயக்கத்தினால், கட்டணம் செலுத்தி மெசேஜ் அனுப்புவதும், அழைத்துப் பேசுவதும் மிகவும் குறைந்து போய்விட்டது. இந்த புதிய வசதி, முற்றிலுமாகக் கட்டணம் செலுத்திப் பேசுவதை முழுமையாகக் குறைத்துவிடலாம். இந்தியாவில், 16 கோடி பேர் வாட்ஸ் அப் பயனாளர்களாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்தும் விதம் குறித்த காணொளிக் காட்சி ஒன்று https://www.youtube.com/watch?v=MfN2fRPF5fk என்ற முகவரியில் கிடைக்கிறது.
இதற்கிடையே வாட்ஸ் அப் பயன்பாடு, உலக அளவில் இந்தியாவில் மிக அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில், இதன் மெசேஜ் அனுப்பும் வசதியைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 16 கோடியைத் தாண்டி முதல் இடம் பெற்றுள்ளது. உலக அளவில், ஒரு மாதத்தில் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியதாக, சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
வாட்ஸ் அப் நிறுவனத்தை, மார்க் ஸக்கர்பெர்க் அவர்களின் பேஸ்புக் நிறுவனம், 1900 கோடி டாலர் கொடுத்து, 2014ல் வாங்கியது. அப்போது 300 கோடி பேர் விரைவில் இதனைப் பயன்படுத்துவார்கள் என மார்க் கூறினார். அதில் மூன்றில் ஒரு பங்கு இலக்கு எட்டப்பட்டுவிட்டது. புதிய வசதி இன்னும் பலரை இதன் பக்கம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
%d bloggers like this: