Advertisements

3வது பெரிய கட்சிக்கு 5வது இடம்!-விகடன்

சரிந்த தே.மு.தி.க-வின் கதை

த்திய அமைச்சர் ஜவடேகர் ஃபிளைட் பிடித்து வந்தார். பொன்னாரும் தமிழிசையும் ஷிப்ட் போட்டு அட்டென்டன்ஸ் போட்டார்கள். மக்கள் நலக் கூட்டணியே விஜயகாந்த்தின் வரவுக்குக் காத்திருந்தது. ‘ஸ்டன்ட் நடிகர். அதனால்தான் பிடி கொடுக்காமல் இருக்கிறார்… பழம்

கனிந்திருக்கிறது.’ என்றெல்லாம் உருகினார் கருணாநிதி. – இப்படி எந்தக் கட்சிக்குமே கிடைக்காத டிமாண்ட் விஜயகாந்த் கட்சிக்கு கடந்த சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்டது. இப்போதோ யாருமே சீண்டாதவராக ஆகிவிட்டார் விஜயகாந்த். இடைத் தேர்தலில் பி.ஜே.பி-க்கும் நோட்டாவுக்கும் அடுத்த இடத்தைப் பிடித்து பரிதாபகரமான நிலையில் இருக்கிறது தே.மு.தி.க.

2005-ம் ஆண்டுதான் தே.மு.தி.க. உதயமானது. 2006 சட்டசபைத் தேர்தலை முதன்முறையாகத் தனித்து எதிர்கொண்டது. விஜயகாந்த் மட்டுமே ஜெயித்தார். ஆனால் அந்தத் தேர்தலில் தே.மு.தி.க., வாங்கிய வாக்குகள் அரசியலில் அதிர்வலை களை உண்டாக்கின. தே.மு.தி.க. பெரிய சக்தியாக உருவெடுத்ததோடு 128 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. 105 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கியது. எடுத்த எடுப்பிலேயே 8.45 சதவிகித வாக்குகளை வாங்கி அரசியல் அரங்கைத் திரும்பிப் பார்க்க வைத்தது அ.தி.மு.க-வை 62 தொகுதிகளிலும், தி.மு.க-வை 23 தொகுதிகளிலும், பா.ம.க-வை 12 தொகுதிகளிலும், ம.தி.மு.க-வை 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகளை 6 தொகுதிகளிலும் தனிப்பட்ட முறையில் தே.மு.தி.க வேட்பாளர்கள் பாதிப்பை உண்டாக்கினார்கள். தே.மு.தி.க பெற்ற வாக்குகளால் அ.தி.மு.க., தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வெற்றி வித்தியாசம் மிகவும் குறைந்துபோனது. இதனால் சொற்ப ஓட்டுகளில்தான் பலரும் ஜெயித்தார்கள். அ.தி.மு.க. மீண்டும் அரியணையில் அமர முடியாமல் போனதற்கும் தி.மு.க-வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கும் காரணம் விஜயகாந்த்.
அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தே.மு.தி.க பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு பெரிய கூட்டணிகள் களத்தில் நின்றபோது தனித்து 40 தொகுதிகளிலும் களமிறங்கியது தே.மு.தி.க. பெரும்பாலான தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை வாங்கிக் குவித்து மூன்றாம் இடம்பிடித்தது. மொத்தமாக 31.26 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 10.08 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கள்ளக்குறிச்சியில் 1,32,223, விழுப்புரத்தில் 1,27,476, விருதுநகரில் 1,25,229 வாக்குகளைப் பெற்று பெரிய கட்சிகளையே கலகலக்க வைத்தது.
9 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாரி குவித்தது. வைகோ, தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தா.பாண்டியன், பிரபு, மணிசங்கர் அய்யர் ஆகியோரின் வெற்றியைத் தட்டிப்பறித்தது. 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தே.மு.தி.க மாறியது. தே.மு.தி.க பிரித்த ஓட்டுகளால் அ.தி.மு.க கூட்டணி 13 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், பி.ஜே.பி கூட்டணி ஓர் இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தன. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டசபை தொகுதி வாரியாகப் பிரித்துக் கணக்கிட்டபோது 27 தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரையில் ஓட்டுகள் வாங்கிய தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 142. பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 65.
2011 சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 41 தொகுதிகளைப் பெற்று 29 இடங்களில் வென்றது. விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர் ஆனதோடு தி.மு.க-வுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து கிடைக்காமலும் பறித்தார். தே.மு.தி.க. எம்.எல்.ஏ-கள் அடுத்தடுத்து முகாம் மாறினார்கள். கட்சி கரைய ஆரம்பித்தது அப்போதுதான். அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தே.மு.தி.க-வின் சரிவு தொடங்கிவிட்டது. அடுத்து 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியோடு கைகோத்து இன்னும் பலத்த அடி வாங்கியது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட்டை இழந்தார். கிட்டத்தட்ட சரிந்தே போனது தே.மு.தி.க.
‘சட்டசபைத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களில் தே.மு.தி.க. மீண்டும் எழுந்து நிற்கும் என்கிற கட்சியினரின் நினைப்பை மொத்தமாக துடைதெறிந்துவிட்டது இடைத் தேர்தல் முடிவுகள். தே.மு.தி.க-வுக்கு செல்வாக்கான தொகுதி என வர்ணிக்கப்பட்ட திருப்பரங்குன்றத்தில் 3-வது இடத்தைக்கூட தொட முடியவில்லை. 4-வது இடத்துக்குப் போன தே.மு.தி.க. வாங்கிய வாக்குகள் வெறும் 4,105 தான். தஞ்சாவூரில் 1,534 வாக்குகள். அரவக்குறிச்சியில் 1,513 வாக்குகள். அதாவது நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட குறைவான வாக்குகளைத்தான் இந்த இரண்டு தொகுதிகளிலும் தே.மு.தி.க. பெற்றது.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளின் வாக்குகளையும் சேர்த்து கணக்கிட்டால் வாக்கு சதவிகிதத்தில் முதலிடத்தில் அ.தி.மு.க-வும் இரண்டாவது இடத்தில் தி.மு.க-வும் மூன்றாவது இடத்தில் பி.ஜே.பி.யும் உள்ளன. தே.மு.தி.க-வுக்கோ 4-வது இடம்தான். 3 தொகுதிகளிலும் சேர்த்து தே.மு.தி.க-வுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் 1.3 சதவிகிதம்தான். தனித்து போட்டியிட்டு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மிக அதிகபட்சமாக 10.08 சதவிகிதம் வாங்கிய தே.மு.தி.க., இடைத் தேர்தலில் வாங்கியதோ வெறும் 1.3 சதவிகிதம். இப்போதும் தனித்துதான் போட்டி. 3-வது பெரிய கட்சி, எதிர்க் கட்சி அந்தஸ்து என சிகரத்தின் உச்சிக்குப் போன தே.மு.தி.க. அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. இனி எழுமா என்பது சந்தேகம்தான்.

Advertisements
%d bloggers like this: