Advertisements

குழந்தைகளுக்கு ‘சேஃப் வீடு’ எது?

வீடு… குழந்தைகள் வளரும், கற்கவும் ஆரம்பிக்கும் இடம். கற்பதற்கு ஏற்ற வகையில் அன்பு, சௌகரியம், அக்கறை என அனைத்தும் ஒருங்கிணையும் போது குழந்தை தன்னைச் சுற்றியுள்ள உலகை பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து கற்றுக்கொள்ளத் தொடங்கும். இது சரியாக நிகழும்போது குழந்தையின் உடலும் மனமும் சரியான முறையில் வளர்ச்சியடையும். இதனுடன், பாதுகாப்பும்

இணையும்போது, பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என குழந்தை உணரும்போது இந்த வளர்ச்சி இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை அழைத்து வந்தார். “ஹாலில் உட்கார வைத்தால், சமையல் அறைக்குள் நுழைந்து கேஸ் டியூபை பிடித்து இழுக்கிறான். படுக்கை அறையில் அலமாரியில் ஏறி, மேலே உள்ளதை இழுத்துபோடுகிறான். வீட்டில் கீழே எந்த பொருளையும் வைக்க முடியவில்லை. ரொம்ப ஆக்டிவாக இருக்கிறான். இது ஹைப்பர் ஆக்டிவ் பிரச்னையா?” என்று கேட்டார். ஆக்டிவாக இருக்கிறான். அவனுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. குழந்தை துறுதுறுவென இருப்பது இயல்பானதுதான். குழந்தையை விளையாட அனுமதியுங்கள். எல்லாம் நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லி அனுப்பினேன்.
என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு காயம் ஏற்படுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆபத்தை அறியாமல் குழந்தைகள் செய்யும் தவறைத் தடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்குத்தான் உண்டு. குழந்தைகள் இருக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புஉணர்வு நம் ஊரில் மிகக் குறைவுதான். இதை தெரிந்துவைத்திருந்தோம் என்றால், விபத்துக்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க முடியும். குழந்தை இருக்கும் வீடு எப்படி இருக்க வேண்டும்?

சமையல் மேடை உயரமாக இருக்கட்டும்!
குழந்தைகளை சமையல் அறைக்குள் அனுமதிக்க வேண்டாம். முடிந்தால் சமையல் அறை கதவை மூடியே வைக்க வேண்டும்.
சமையல் அறை கதவு இல்லாத சூழலில், கத்தி, அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
அடுப்பிலோ, அடுப்பு மேடையிலோ உள்ள பாத்திரத்தை குழந்தை எடுக்க முயற்சிக்கும்போது, பால், குழம்பு, வெந்நீர் என அதில் உள்ள சூடான பொருள் அவர்களின் மேல் கொட்டிவிடலாம்.  அதனால், கையில் எதுவும் கிடைக்காதபடி தள்ளியே வைக்க வேண்டும்.
ஸ்டவ்வை ஆஃப் செய்வதும் ஆன் செய்வதும்  அவர்களுக்கான விளையாட்டாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனம் தேவை. இதனால் கேஸ் கசியும் வாய்ப்பும் உள்ளது.
கிரைண்டர், மிக்ஸியை பயன்படுத்தியதும் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, உயரமான இடத்தில் வைத்துவிட வேண்டும். இவை இயங்கும் போது குழந்தைகளை அருகில் செல்ல விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
மின்சாரம் ஆபத்து!
குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் ஸ்விட்ச் பாக்ஸை அமைக்க வேண்டும். உயரத்தில் இருந்தாலும் அது பழுதாகியோ, வயர் வெளியே தொங்கிக்கொண்டோ இருக்காமல் உடனே சரிசெய்வதும் முக்கியம்.
அயர்ன் செய்து முடித்த உடன், அயர்ன் பாக்ஸை உயரத்தில் வைப்பதில் எப்போதும் அலட்சியம் வேண்டாம். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் டேபிள் ஃபேனை தவிர்க்கவும்.
இன்றைக்கு பல வீடுகளிலும் மொபைல் போன் சார்ஜர் கீழே தொங்கிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகள் உள்ள வீடு என்றால் மொபைல் சார்ஜரில் கவனம் தேவை.
தண்ணீர் சேமிப்பதில்.. கவனம்!
தண்ணீர் அருகில் குழந்தைகளை தனியாக விடக்கூடாது. சமையல் அறை, குழந்தை அடிக்கடி செல்லும் அறையில் தொட்டி, டிரெம், டப் போன்றவற்றில் தண்ணீர் சேமிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பாத்ரூம் கதவை மூடி வைக்கவும். தண்ணீர்த்தொட்டியின் அருகில் குழந்தைகளை விளையாட விட வேண்டாம்.
இன்றைக்கு பல குழந்தைகளுக்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படக் காரணம் ஏதாவது ஒரு பொருள் தொண்டையை அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படுவதால்தான். எனவே, சிறிய பொருட்களை மேலே வைக்க வேண்டும். பட்டாணி, வேர்க்கடலை போன்ற உணவுப் பொருட்கள் சிந்தினாலும் உடனடியாக எடுத்து தூரப்போட வேண்டும்.
குழந்தை என்றாலே தடுமாறி விழுவது வாடிக்கைதான். அதனால், கூர்மையான முனை உள்ள பொருட்களைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் படி இறங்குதல், கட்டிலில் இருந்து இறங்குதல் போன்றவற்றாலும் காயம் ஏற்படலாம். குழந்தை சிறுநீர் போயிருந்தால் அதை துடைக்கவில்லை என்றால் வழுக்கி விழ வாய்ப்புள்ளது. எனவே, தரையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாக்கர்… காயங்களும் தரும்!
குழந்தைக்கு வாக்கருக்குப் பதிலாக, தள்ளும் நடைவண்டி வாங்கித்தரலாம். குழந்தையின் எடை ஒரு பக்கமாகச் சாய்ந்தால், வாக்கரும் சாய்ந்துவிடுவது, வாக்கரின் சக்கரங்கள் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்று சுவற்றில் மோத நேர்வது, உயரங்களிலிருந்து கவிழ்ந்துவிட நேர்வது போன்ற ஆபத்துகள் உள்ளன.
பொதுவாக, குழந்தை நடக்கும்போது தன் காலைப் பார்த்துதான் நடக்க வேண்டும் என்பதால், வாக்கர் தவிர்த்து, நடைவண்டியில் அவர்களை நடக்கப் பழக்குவதே நல்லது.

வீல் வைத்த டேபிள்!
வீல் வைத்த மேஜைகள், நாற்காலிகள் பெரியவர்களுக்கு நகர்த்துவதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், உயரமான பொருட்களில் ஏறி விளையாடுவதால், அப்போது அந்த மேஜையில் உள்ள பொருட்கள் அவர்கள் மேல் விழுவது, நாற்காலி அவர்களை கட்டுப்பாடின்றி இழுத்துச் செல்வது போன்ற ஆபத்துகளும் இதில் உள்ளன.
மாடி வீடு ஆபத்துகள்!
தடுப்புச்சுவர் உயரம் குறைவாக இருந்தால், மரத்தடுப்பு, இரும்பு கேட் என ஏற்பாடுகள் செய்யலாம். தவழும், நடை பழகும் குழந்தைகள் படிக்கட்டுப் பக்கம் போகாமல் இருக்க, கதவை ஞாபகமாக எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும். கதவு, ஜன்னல்களில் கைவிரல் மாட்டி காயம் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. கதவை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும் லாக் அல்லது தடுப்புகளை பொருத்தலாம்.

வீடு, கார் கதவுகள் விபரீதமாகலாம்!

அறைக் கதவுகளில் உட்புறமாக தாழிட்டுக்கொள்ளாத வகையில், தாழ்ப்பாள்களை கதவின் மேல் பகுதியில் அமைக்க வேண்டும். குழந்தையின் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள தாழ்பாளை அகற்றிவிட வேண்டும்.
கார் கதவை ஒவ்வொரு முறை மூடும்போது, குழந்தைகள் அதன் விளிம்பில் கை வைத்திருக்கிறார்களா என்று பார்த்தபின்னரே மூடவும். காரின் கதவைத் திறந்து, மூடி விளையாட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
பைக் சைலன்ஸர் சூடு!
கொஞ்சம் விபரம் தெரிந்த குழந்தைகளுக்கு சைலன்ஸர் சுடும் என்பதைச் சொல்லி எச்சரித்து வைக்க வேண்டும். என்றாலும்கூட, குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பைக்குகளை வீட்டுக்கு வெளியே நிறுத்தி, சூடு போனதும் உள்ளே வைக்கலாம்.
சில நீர்மப் பொருட்கள்!
குழந்தையின் கையில் பாத்ரூம், தரையை சுத்தம் செய்யும் ரசாயனங்கள், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்றவை கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மண்ணெண்ணெய், தைலங்கள், பேஸ்ட், கழிப்பறை சுத்தப்படுத்திகள் போன்றவற்றின் வண்ணங்களால் ஈர்க்கப்படும் குழந்தைகள், ஜூஸ், கூல்டிரிங்ஸ் என நினைத்து குடித்துவிடும் விபரீதங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இவற்றை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கழிப்பறை பொருட்களை கழிப்பறையில் வைக்க வேண்டும். அவற்றை ஹால், படுக்கை அறையில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை அலமாரிகளை கதவு போட்டு பூட்டிவிட வேண்டும்.
சிறு அலட்சியங்களே பெரிய விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்றன. குழந்தைகள் விஷயத்தில் அலட்சியங்களை தவிர்ப்போம்!’

Advertisements
%d bloggers like this: