Advertisements

மிஸ்டர் கழுகு: “எல்லோரும் ஒன்றுசேர முடியாது!”

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘மறக்கப்பட்ட அப்போலோ’ நிலவரம் பற்றிக் கேட்டோம்!
“அப்போலோ பிரதாப் ரெட்டி பேசும்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி இருக்கிறது; அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்; அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என்று  திரும்பத் திரும்பச்

சொல்லிக்கொண்டிருக்கிறார். கடந்த 25-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘ஜெயலலிதா நன்றாக உடல்நலம் தேறிவிட்டார். அவர் எழுந்து நடப்பதுதான் அடுத்தநிலை. மேலும், முதலமைச்சர் உணவுகளை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு TRACHEOSTOMY TUBE தேவைப்பட்ட போது மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல, செயற்கை சுவாசமும் அவ்வப்போதுதான் கொடுக்கப்படுகிறது’ என்றார். ரெட்டியின் தகவல்படி பார்த்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்னும் தொண்டையில் குழாய் வைக்கப்படும் TRACHEOSTOMY மற்றும் செயற்கை சுவாசம் வைக்கும் நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.”
‘‘ஆமாம்!”
‘‘இயல்பான உணவுகளை முதலமைச்சர் எடுத்துக் கொள்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதை என்ன முறையில் எடுத்துக் கொள்கிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. தொண்டையில் ‘TRACHEOSTOMY TUBE’ இன்னும் இருக்கிறது. அதனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூக்கின் வழியாக செல்லும் மற்றொரு ட்யூப் மூலம், உணவுகள் செலுத்தப் படுகின்றன. அவர் பேசும் சத்தம் வெறும் முனகல் சத்தமாக மட்டும்தான் கேட்கிறது. அதைத் தெளிவாகக் கேட்பதற்காகத்தான், ‘மைக்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருப்பவரைத்தான் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லலாம் என்று ரெட்டி சொல்கிறார்.”

 

‘‘இந்த நிலையில் இருப்பவரை எப்படி வீட்டுக்கு அனுப்ப முடியும்?”
‘‘முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது இருக்கும் நிலையில் அப்படியே வீட்டில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கலாம். அதற்கான ‘செட்டப்’களை அப்போலோ சார்பில்  ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களே பார்த்துக் கொள்வதாகவும் சொல்கின்றனராம். ஆனால், மருத்துவ வட்டாரங்கள் வேறோரு டோனில் சொல்கின்றன.”
‘‘என்ன சொல்கின்றன?”
‘‘சமீபத்தில் அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், ஒரு நிகழ்ச்சியில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் சில முக்கியமான தகவல்களை அந்தப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களில்  ஜெயலலிதாவின் உடல்நிலையை துல்லியமாக அறியமுடிகிறது. விஷயம் என்னவென்றால், ‘அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒரு நோயாளிக்கு உச்சபட்சமாக 10 நாட்கள் மட்டும்தான் செயற்கை சுவாசம் கொடுப்பார்கள். அதற்கு மேல் ஒரு நோயாளிக்கு செயற்கை சுவாசம் அளிப்பது என்றால், அது மிக மிக ஆபத்தான நிலை. அப்படிக் கொடுப்பதால், சிகிச்சை பெறுபவரின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவைப்போல் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக ஒருவருக்கு  செயற்கை சுவாசம் அளித்தால், அந்த நபர் மீண்டும் செயற்கை சுவாசம் இல்லாமல் சுவாசிப்பது என்பதே சாத்தியம் இல்லாத காரியம். 99 சதவிகிதம் அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொன்னாராம்!”
‘‘ம்ம்ம்… அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே?”
‘‘அதேபோல, நோய்த் தொற்று பிரச்னை என்பது பொது இடங்களில் ஒருவருக்கு ஏற்படுவதைவிட, மருத்துவமனைச் சூழலில்தான் அதிகம் ஏற்படும். அதைவிட அதிகமாக, சி.சி.யூ மற்றும் ஐ.சி.யூ-வில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அது சிகிச்சை பெறுபவரை மிகப்பெரிய அபாயத்தில் சிக்கவைத்துவிடும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளோடு 2 மாதங்களுக்கும் மேலாக செயற்கை சுவாசத்தில் ஒருவர் வைக்கப்பட்டு இருந்தால், அவர்கள் முழுமையாகக்  குணமடைந்து வரக் காலதாமதம் ஆகும். அவ்வளவு காலம் மருத்துவமனையில் இருந்தால் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் நினைக்கிறதாம். இதில் சசிகலா தரப்புக்கு உடன்பாடு இல்லையாம்!”
‘‘சசிகலா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்து ஏதோ சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டதாகச் சொல்லப்பட்டதே?”
‘‘நவம்பர் 23-ம் தேதி அப்படி ஒரு விஷயம் கசிந்தது. உடனே பார்த்தசாரதி கோயில் வட்டாரத்தில் விசாரித்தேன். ‘ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்களில் ஒருவரும், பூஜை புனஸ்காரங்களில் ஜெயலலிதா-சசிகலாவுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்பவருமான தேவாதி என்பவர் பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தார். ஆனால், சசிகலா வரவில்லை. தேவாதி வந்து இருந்ததால், பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் வான்மதி, அந்தக் கோயிலில் பணிபுரியும் சில ஊழியர்கள் அன்று இரவு கோயிலில் இருந்தனர். ஆனால், சிறப்பு யாகங்கள், பூஜைகள் என்று எதுவும் நடைபெறவில்லை. கோயில் நடை சாத்தியபிறகு, பார்த்தசாரதி கோயிலுக்குள் அப்படிப்பட்ட பூஜைகளை யாரும் நடத்தவும் முடியாது. இரவு 9 மணிக்குமேல், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் கோயில் திறந்திருக்கும். உள்ளே பக்தர்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நாட்களில் அப்படி யாரும் போகமுடியாது. கோயில் பட்டரே நினைத்தாலும் போக முடியாது. குறிப்பாக யாகங்களை நடத்தவே முடியாது. அப்படி நடத்தினால், அது யாருக்காக நடத்தப்பட்டதோ அவருக்கே கேடாக முடியும் என்பது தேவாதிக்கும் தெரியும்; சசிகலா-ஜெயலலிதாவுக்கும் தெரியும்’ என்று சொன்னார்கள்!”
‘‘பிறகு ஏன் இந்த இரவு நேர விசிட்?”
‘‘கோயிலில் சீரமைப்பு வேலைகள் கொஞ்சம் நடக்கின்றன. ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் அகற்றப்படுகின்றன. அதுபோல், கோபுரத்தை மறைத்துப் போடப்பட்டு இருந்த தகர ஷெட்கள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, ஜெயலலிதா, சசிகலா சார்பில் கோயிலுக்கு ஏதேனும் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதுபோல, வேறு சிறப்பு பூஜைகள் விரைவில் நடத்தப்படலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. அதற்கான யோசனைகள், மேற்பார்வைக்காக இந்த விசிட் என்று சொல்லப்படுகிறது.” என்று சொன்ன கழுகாரிடம் அரசியல் விவகாரங்களைச் சொல்லச் சொன்னோம்!
‘‘மக்கள் நலக்கூட்டணி கலகலத்துக்கொண்டு இருக்கிறது. வைகோ மீது மற்ற மூன்று கட்சித் தலைவர்களும் கடுப்பில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காவிரிப் பிரச்னை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதில் இருந்தே வைகோவின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. அப்போதே, அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினரோடு வைகோ முரண்பட்டார். அதன்பிறகு, இடைத் தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு மாறுபட்டார். அதன்பிறகு, விஜயகாந்தை விமர்சிப்பதிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களோடு வைகோ முற்றிலும் மாறுபட்டு நின்றார். அந்த முரண்பாடுகள் எல்லாம் பூசி மெழுகியதுபோல் இருந்தன. ஆனால், இப்போது கறுப்புப் பண விவகாரத்தில், ‘என் வழி தனி வழி’ என்ற ரீதியில் வைகோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.”
‘‘ஏனாம்?”
‘‘தி.மு.க.வுடன் திருமாவளவன் போய்விடுவார் என்று வைகோ நினைக்கிறாராம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க. கூட்டணிக்கு போய்விடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில்
அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணி அமையும் என்று நினைக்கிறாராம் வைகோ. அதில் இணையவே அவர் திட்டமிட்டுச் செயல்படுகிறாராம். கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் விமர்சனங்களே இல்லாமல் அவர் மோடியை ஆதரிப்பதற்கும் அதுதான் காரணமாம். இந்த நேரத்தில் பி.ஜே.பி-க்கும் வைகோவின் தயவு இப்போது தேவைப்படுகிறது.!”

‘‘வைகோ-வின் தயவு பி.ஜே.பி-க்குத் தேவைப்படுகிறதா?”
‘‘ஆம். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தபிறகு, அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. அதையடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி சார்பில், தமிழகத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளிடமும் ரகசியமாகப் பேசி உள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பி.ஜே.பி கேட்டதாகச் சொல்லப்படுகிறது.   தி.மு.க   ஒப்புக்கொள்ளவில்லை. ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தங்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டை ரூபாய் நோட்டு விவகாரத்தில் தெரிவித்துவிட்டனர். ஆனால், வைகோ ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கை நல்லது என்ற ரீதியில் பொத்தாம் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு வைத்திருந்தார். அதைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பி.ஜே.பி வைகோவிடம் பேச வேண்டிய விதத்தில் பேசியது. அதன்பிறகுதான், எல்லோரும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை, பொதுமக்களை கடும் சிரமத்தில் வைத்திருக்கும் ஒரு திட்டத்தை வைகோ பிரமாதம் என்ற ரீதியில் ஆதரித்து அறிக்கை கொடுப்பதும் பேட்டி அளிப்பதுமாக இருக்கிறார்.”
‘‘ம்!”
‘‘நளினி சுயசரிதைப் புத்தகம் வெளியீட்டு விழாவில், இடதுசாரிகள், அ.தி.மு.க, தி.மு.க தவிர மற்றக் கட்சிகள் அனைத்தும் கலந்துகொண்டன. காங்கிரஸ் கட்சி சார்பில், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி சீமான், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களோடு வைகோவும் மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அந்த விழாவில் வேல்முருகன் ஒரு பரபரப்பைக் கிளப்பினார்.”
‘‘என்ன பரபரப்பு?”
‘‘வேல்முருகன், ‘தமிழக நலன், தமிழர் உரிமை போன்ற பிரச்னைகளில் நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். வைகோ சீமானுடன் கைகோக்க வேண்டும். திருமாவளவன் மருத்துவர் ராமதாஸோடு  சேர வேண்டும். நானும் எங்கள் அய்யா மருத்துவர் ராமதாஸோடு சேர்ந்து செயல்படத் தயாராக உள்ளேன்’ என்றார்.”
‘‘அட, ஆச்சரியமாக இருக்கிறதே!”
‘‘ஆம். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய திருமாவளவன், ‘இன நலன்தான் முக்கியம் என்று வந்தால், நான் யாரோடும் கைகோப்பேன். அதற்கு இந்தத் திருமாவளவன் என்றும் தயங்கியதில்லை. அதனால்தான், பலரும் எதிர்த்தபோதும்கூட சில கட்டங்களில் நான் மருத்துவர் ராமதாஸோடு சேர்ந்து செயல்பட்டேன். இனி அப்படி ஒரு தேவை ஏற்பட்டாலும், மருத்துவர் ராமதாஸோடு நான் சேர்ந்து செயல்படத் தயங்கமாட்டேன்.  மருத்துவர் ராமதாஸ் மட்டுமல்ல, இனநலனுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து செயல்படத் தயாராகவே இருக்கிறேன்’ என்றார். சீமானும் இதே கருத்தைத்தான் வலியுறுத்திப் பேசினார். ஆனால், வைகோ மட்டும் இதற்கு முற்றிலும் மாறுபட்டுப் பேசி இருக்கிறார்”
‘‘வைகோ என்ன சொன்னார்?”
‘‘வைகோ பேசியபோது, ‘தமிழனுக்கு வீரம் அதிகம்; கோபமும் அதிகம்; அதுபோல ஈகோவும் அதிகம். அதனால், தமிழர்கள் எப்போதும் ஒன்று சேர்ந்து செயல்படமாட்டார்கள். சேரர்-சோழர்-பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே இதுதான் தொன்றுதொட்டு வரும் பழக்கம். அதனால், இப்போதும் சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை’ என்றார். இங்கு இப்படிப் பேசிய பிறகுதான், ரூபாய் நோட்டு விவகாரத்தில், மத்திய பி.ஜே.பி அரசையும், பிரதமர் மோடியையும் வானளாவப் புகழ்ந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது மக்கள் நலக்கூட்டணியின் நான்கு கட்சிகளும் தனித்தனிப் பாதைக்கு போவது தெளிவாகத் தெரிகிறது” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை எதிர்க்கும் அகில இந்திய கட்சிகள் டெல்லியில்  ஆர்ப்பாட்டம் நடத்தின அல்லவா? அதில் அ.தி.மு.க சார்பில், எம்.பி. நவநீத கிருஷ்ணன் கலந்துகொண்டதை கடந்த இதழில் சொல்லி இருந்தேன். இந்தக் காட்சிகளை பி.ஜே.பி மேலிடம் ரசிக்கவில்லையாம். அ.தி.மு.க தரப்பிடம் பேசிய மத்திய அமைச்சர் ஒருவர்,  ‘நீங்கள் எங்களுக்கு எதிராக அரசியல் நடத்துகிறீர்களா? நிலைமைகள் புரியாமல் விளையாடுகிறீர்களா?’ என்றாராம். ஆட்டம் கண்டுவிட்டதாம் அ.தி.மு.க தரப்பு” என்றபடி பறந்தார் கழுகார்!

Advertisements
%d bloggers like this: