Advertisements

புகையைத் தவிர்த்தால் சி.ஓ.பி.டிக்குச் சொல்லலாம் `நோ’!

கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையில் சுருக்கம் ஏற்பட்டு, சுவாசத்தில் தடை ஏற்படும் நிலைக்கு, `நாட்பட்ட மூச்சுக் குழாய் அடைப்பு நோய்’ (Chronic Obstructive Pulmonary Disease – COPD) என்று பெயர். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் மிக முக்கியக் காரணிகளில் ஆறாவது இடத்தில் இருந்தது இது. `இன்னும் 10 ஆண்டுகளில் இந்த சி.ஓ.பி.டி., நான்காவது இடத்துக்கு முன்னேறிவிடும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். இதற்கு, காற்று மண்டலத்தில் அதிகரித்துவரும் புகை, மாசு உள்ளிட்டவையே முக்கியக் காரணங்கள்.

நுரையீரல் எப்படி பாதிப்படைகிறது?

சுவாசிக்கும்போது, சுவாசக் குழாய் வழியாகச் செல்லும் காற்று, இரண்டாகப் பிரிந்து நுரையீரலை அடைகிறது. அங்கு அது மரக் கிளைபோல பல நூறு நுண்ணிய குழாய்களாகப் பிரிகிறது. ஒவ்வொரு நுண்ணிய குழாயும் காற்றுப் பையில் முடிவடைகிறது. இந்தக் காற்றுப் பையில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் இருக்கின்றன. காற்றைச் சுவாசிக்கும்போது, அது காற்றுப் பையை அடைகிறது. அங்கே ஆக்சிஜன் பிரிக்கப்பட்டு, ரத்தத்தில் கலக்கிறது. அதே நேரத்தில், கார்பன் டை ஆக்ஸைடு பிரிக்கப்பட்டு, காற்றில் கலந்து வெளியேற்றப்படுகிறது. காற்றை இழுத்து வெளியே விடும்போது, எலாஸ்டிக் போல நுரையீரல் விரிந்து சுருங்குகிறது.

மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுவதற்கான காரணம்…

எம்ஃபிசிமா (Emphysema): இந்த நுரையீரல் நோய், மூச்சுக்குழாயின் சுவர் மற்றும் காற்றுப் பையின் சுருங்கிவிரியும் திறனை பாதிக்கிறது. நுண்ணிய மூச்சுக்குழாய்கள் தங்களின் செயல்திறனை இழந்துவிடுவதால், காற்றை வெளியே விடும்போது, காற்றுப் பைக்குள் இருந்த காற்று வெளியேற முடியாமல் உள்ளேயே தங்கிவிடுகிறது.

நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (Chronic Bronchitis):
இந்த நிலையில், மூச்சுக் குழாய் வீக்கம் அடைவதால், காற்று செல்லும் பாதை சுருங்கிவிடுகிறது. மேலும், நுரையீரலும் அதிக அளவில் சளி போன்ற திரவத்தைச் சுரக்கிறது. இது இன்னும் சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால், சுவாசப் பாதையில் உள்ள அடைப்பைச் சுத்தம் செய்ய, தொடர்ந்து இருமல் ஏற்படுகிறது.

காரணங்கள்

சிகரெட் புகைத்தல் மிக முக்கியக் காரணம். புகைப்பவர்களில் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு சி.ஓ.பி.டி ஏற்படுகிறது.

சிகரெட் புகைத்தவர் வெளியிட்ட புகையை சுவாசித்தல், சமையல், சாம்பிராணிப் புகை போன்று வீட்டுக்குள் ஏற்படும் புகைகூட சி.ஓ.பி.டி-யை ஏற்படுத்தும்.

வாகனம், தொழிற்சாலைப் புகைகள்…

ரசாயனம், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரிவதால் சுவாசப் பாதையில் ஏற்படும் பாதிப்புகள்.

சிகிச்சை எடுக்கவில்லை எனில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

நுரையீரல் புற்றுநோய், மனஅழுத்தம், நிமோனியா, பக்கவாதம், மாரடைப்பு.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் அறிகுறிகள் தெரியாது. அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்போது பிரச்னை முற்றிய நிலைக்குச் சென்றிருக்கும்.

சுவாசிப்பதில் சிரமம் இருக்கும். குறிப்பாக, உடற்பயிற்சி, உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்போது.

வீசிங்

நெஞ்சில் இறுக்கம்

காலையில் கண் விழிக்கும்போதே, தொண்டையில் அதிகப்படியான சளியை வெளியேற்றவேண்டிய நிலை.

நாட்பட்ட பாதிப்பு இருப்பவர்களுக்கு சளி வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்தில் வெளிப்படும்.

உதடு மற்றும் நகங்கள் நீல நிறமாக இருக்கும்.

ஆற்றல் இல்லாத உணர்வு.

முற்றிய நிலையில் உடல் எடை இழப்பு

கணுக்கால், பாதம், காலில் நீர்கோத்தல்.

சிகிச்சை

நாட்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு ஏற்பட்டால், அதை குணப்படுத்த முடியாது. பிரச்னை இன்னும் தீவிரமாகாமல் தடுக்க மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.

மற்ற நோய்களைப்போல அல்லாமல், சி.ஓ.பி.டி ஏன் ஏற்படுகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் உள்ளன. பெரும்பான்மையான பாதிப்புக்குக் காரணம் சிகரெட் புகைத்தல்தான். சிகரெட்டைத் தவிர்ப்பதன் மூலமே பெருமளவு பாதிப்பைக் குறைக்கலாம்.

ரசாயனங்கள் போன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சூழலில் பணிபுரிபவர்கள், தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சி.ஓ.பி.டி-யைத் தவிர்க்கலாம்.

சமையலில், விறகு பயன்படுத்துவதற்குப் பதில், புகையில்லா சமையல் முறைக்கு மாறுவதன் மூலம் சி.ஓ.பி-டியைத் தவிர்க்க முடியும்.

Advertisements
%d bloggers like this: