Advertisements

மிஸ்டர் கழுகு: மருத்துவமனையில் தலைவர்! அடுத்த ‘தலைவர்’?

ழையில் நனைந்து வந்த கழுகாருக்குத் துடைக்கத் துண்டு கொடுத்தோம். தலையை துவட்டி சிலிர்த்தவர், பேச ஆரம்பித்தார்!
‘‘அப்போலோவை நோக்கி இருந்த தமிழக அரசியல் இப்போது, காவேரி மருத்துவமனையையும் சேர்த்துச் சுழல ஆரம்பித்துவிட்டது. ஆம்! அப்போலோவில் ஜெயலலிதா இருக்கிறார். காவேரியில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போலோவுக்கு பெருந்தலைகள் வந்து சென்றது மாதிரி காவேரிக்கும் வந்து செல்லத் தொடங்குவார்கள்!”

என்றபடியே குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார் கழுகார்.
‘‘கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை சில இதழ்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன். வயது முதிர்ச்சி, மருந்துகள் அலர்ஜி காரணமாக கருணாநிதிக்கு உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டன. கால் மூட்டு, கை மூட்டு ஆகியவற்றில் கொப்பளங்கள் உருவாகின. அந்த கொப்பளங்கள் உடைந்து அருகிலேயே மீண்டும் கொப்பளங்கள் வந்தன. அதே கொப்பளம் முதுகிலும் கழுத்திலும் வந்தபிறகு படுப்பதற்குக்கூட கருணாநிதி சிரமப்பட்டார். சில நேரங்களில் தூக்க மாத்திரைகூட அவருக்குத் தரப்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்படி படுத்தே இருந்ததால் உடம்பில் வீக்கமும் ஆரம்பித்தது. முகம், கை, கால்கள் வீங்கின. கடந்த வாரத்தில் அன்பழகன் வந்து கருணாநிதியை சந்தித்த புகைப்படத்தை ரிலீஸ் செய்தார்கள். அதை உற்றுக் கவனித்தால் கையும் முகமும் வீங்கி இருப்பது தெரியும்!”
‘‘ஆமாம்!”
‘‘அதனுடன் லேசான இருமலும் சளியும் சேர்ந்துகொள்ள அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மருந்துகளும், ஸ்டீராய்டு ஊசியும் செலுத்தி சிகிச்சை அளித்தாலும், அதனை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு கருணாநிதி உடம்பில் போதிய தெம்பும் இல்லை. ‘இனி மருத்துவமனையில்தான்  சிகிச்சை அளிக்க வேண்டும்’ என மருத்துவர்கள் சொன்னாலும், வீட்டைவிட்டு மருத்துவமனைக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை. 29-ம் தேதியே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சளி அதிகமாக இருப்பதால், அடுத்த நாள் அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்து இருக்கிறார்கள். 30-ம் தேதி இரவு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் ஒரு இட்லியை சாம்பார் தொட்டு சாப்பிட்டு இருக்கிறார். அதன்பின் கொஞ்சம் பால் அருந்தி, மாத்திரைகளை எடுத்துக்கொண்டார். சில காலமாகவே தூக்கம் இல்லாமல் தவித்தவர் அன்றும் தூங்க சிரமப்பட்டிருக்கிறார். அதிகாலையில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடும் சேர… உடல் மேலும் சோர்வடைந்தது. வீட்டில் முதலுதவி சிகிச்சை அளித்தாலும் உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். ‘ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றால் ஏதோ பெரிய பிரச்னை இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் உண்டாக்கலாம். அதைத் தவிர்க்க அவரது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம்’ என திட்டமிட்டார்கள். கருணாநிதி, அப்போலோவில் சிகிச்சை எடுப்பதுதான் வழக்கம். இப்போது ஜெயலலிதா அங்கே சிகிச்சை எடுக்கும்போது, கருணாநிதியையும் அங்கு அழைத்துச் சென்றால் தேவையற்ற சலசலப்புகள் உண்டாகும் என காவேரி மருத்துவ மனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ‘ஏதாவது ஒரு அவசரம் என்றால் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என சில தினங்களுக்கு முன்பு கருணாநிதியே சொல்லியிருந்தாராம். காரணம் கடந்த இரண்டு மாதங்களா  காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தான் கருணாநிதியை கவனித்து வந்தார்கள்!”
‘‘ம்!”
‘‘ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், சண்முகநாதன் மற்றும் அவரது உதவியாளர்களுடன் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து 1-ம் தேதி அதிகாலை 5.15 மணிக்குப் புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்துவிட்டார் கருணாநிதி. மருத்துவமனையில் உள்ள நான்காம் தளத்தில்தான் அதிக வசதிகள் கொண்ட ஐ.சி.யூ பிரிவு இருக்கிறது. அங்கு 8 பேர் சிகிச்சை எடுக்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன. கருணாநிதியை சேர்த்தபோது மூன்று, நான்கு பேர் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களை உடனடியாக வேறு பிளாக்கில் உள்ள ஐ.சி.யூ-வுக்கு மாற்றிவிட்டார்கள். காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் முதன்மையாக சில டெஸ்டுகள் எடுத்தாலும், அப்போலோவில் கருணாநிதியை பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர்களும் மருத்துவமனையில் தயாராக இருந்தனர். முதலில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.  நான்காவது தளத்தில் ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், கனிமொழி கூடவே இருந்தார்கள். காலை 8.30 மணிக்கு அழகிரி, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா, ஜெ.அன்பழகன் இவர்கள் நால்வருக்கு மட்டும் நான்காவது மாடிக்கு வர அனுமதி தரப்பட்டது. மற்ற அனைவரையும் முதல் தளத்திலேயே நிறுத்திவிட்டார்கள். 1-ம் தேதி முழுக்க குளுக்கோஸ் மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள். சளிப் பிரச்னை முழுமையாக குணம் அடைய சில நாட்கள் ஆகலாம். உடம்பில் உள்ள வீக்கத்தையும் போக்க மேலும் சில சிகிச்சை தேவைப்படலாம். அதனால், அதிகபட்சம் ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்று சொல்கிறார்கள்!”

“இந்த நிலைமையில், ஸ்டாலினை செயல் தலைவராக்க பேராசிரியர் அன்பழகனிடம் நிர்பந்தம் செய்யப்பட்டதாகச் சொல்கிறார்களே?”
‘‘கருணாநிதியை கடந்த வாரத்தில் அன்பழகன் சந்திக்க வந்தார் அல்லவா? அதில் இருந்தே அன்பழகன் கொஞ்சம் மனம் தளர்ந்து விட்டாராம். ‘தலைவர் இவ்வளவு தளர்ந்து விட்டாரே? என்னைவிட ஒரு வயது இளையவர் ஆச்சே அவர்?’ என்று அன்பழகன் சொல்லிக்கொண்டு இருந்தாராம். அன்பழகன் வந்தபோது பேசுவதற்கே சிரமப்பட்டுள்ளார் கருணாநிதி. காரணம், வாயில் கொப்பளங்கள் ஏற்பட்டதுதான். ‘நீங்கள் இரண்டு நாட்களாவது மருத்துவமனையில் இருந்து எல்லா டெஸ்டுகளும் எடுத்துக்கொண்டு கண்காணிப்பில் இருக்கவேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார் அன்பழகன். அப்போது கருணாநிதி, ‘என் அக்காவுக்கு கடைசிக் காலத்தில் இப்படிதான் உடலில் கொப்பளங்கள் இருந்தது. அதுபோல எனக்கு இருக்கிறது’ என்று கலங்கினாராம். அதைப் பார்த்து அன்பழகன் உருகி கண்கலங்கி, ‘நீங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும். உங்களைவிட நான் மூத்தவன். ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?’ என்று கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டாராம். அன்பழகனும் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில்…”
‘‘இந்த நிலையில்…. என்று எதையோ இழுக்குறீரே?”
‘‘கடந்த செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழா தி.மு.க சார்பில் கொண்டாடப்பட்டது. அதனை ஸ்டாலின்தான் தலைமையேற்று நடத்தினார். துரைமுருகன், சுப.வீரபாண்டியன், பழ.கருப்பையா, க.திருநாவுக்கரசு, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய துரைமுருகன், ‘நீங்கள்தான் கலைஞர். நீங்கள்தான் எங்களின் அடுத்த தலைவர்.’ என்ற தொனியில் பேசினார். கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் படுக்க வைத்துவிட்டு இப்படி அறிவாலயத்தில் பேசினார்கள்.”
‘‘ஏனாம் இந்த திடீர் பேச்சு?”
‘‘செவ்வாய்க்கிழமை மாலையில் இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன்னதாக காலையில் தி.மு.க வட்டாரத்தில் ஒரு பரபரப்பு கிளம்பியது. தி.மு.க தலைவராக ஸ்டாலினை அறிவிக்கப்போகிறார்கள் என்பதுதான் அந்தத் தகவல். ‘ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் தி.மு.க தனது அரசியலை வேகமாகச் செய்ய வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் தலைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கலைஞர் உடனுக்குடன் அறிக்கை வெளியிடுவார். கூட்டம் பேசுவார். பத்திரிகையாளர்களை சந்திப்பார். போராட்டம் அறிவிப்பார். போராட்டங்களில் பங்கெடுப்பார். இப்போது அவரால் அது இயலவில்லை. அவருக்குப் பதிலாக தளபதிதான் அனைத்தையும் செய்ய வேண்டும். இப்போது அவர் அதைச் செய்து வந்தாலும் தலைவர் என்ற அங்கீகாரம் இருந்தால், அவரால் இன்னும் வேகத்துடன் செயல்பட முடியும். எனவே ஸ்டாலினை தலைவராக அறிவிக்க வேண்டும்’ என்று சில நாட்களாகவே தி.மு.க-வில் ஒரு தரப்பினர் பேச ஆரம்பித்தார்கள். கருணாநிதி காதுக்கும் அது போனது. அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. இதனை ராஜாத்தி அம்மாளும் அழகிரியும் ஏற்கமாட்டார்கள் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அவரே கடைசி வரை தலைவர் பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லை என்பதும் உண்மை. இந்த நிலையில், தலைவர் பதவியை விட்டுத்தரவில்லை என்றால் செயல் தலைவர் பதவியையாவது உருவாக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.”
‘‘அப்படியா?”

‘‘இதற்கு கருணாநிதியை சம்மதிக்க வைப்பதற்கு முன்னதாக அன்பழகனை சம்மதிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டார்கள். துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் ஸ்டாலினின் ஆறு முகங்களாகக் கிளம்பினார்கள். துரைமுருகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலையில், அன்பழகனின் அண்ணாநகர் வீட்டுக்குச் சென்றார்கள். வந்த விஷயத்தை துரைமுருகன்தான் மெல்ல அவிழ்த்து உள்ளார். அமைதியாகக் கேட்டுக்கொண்ட அன்பழகன், ‘தலைவர் உடல் நலமில்லாத நேரத்தில், அவரிடம் இதை எப்படிப் போய் கேட்பது?’ என்று கேட்டு இருக்கிறார். ‘கட்சியின் நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறோம்’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகு கோபாலபுரம் வந்தார் அன்பழகன். கருணாநிதியை சந்தித்தார். காலையில், ஆறுமுகங்கள் வந்து சொன்னதை அன்பழகன் சொன்னார். அமைதியாகக் கேட்டுக் கொண்ட கருணாநிதி, இதற்கு சம்மதிக்கவில்லை. ‘பொதுக்குழு, செயற்குழுவுலதான் எதையும் முடிவு செய்ய முடியும்’ என்றாராம் கருணாநிதி. இது ஸ்டாலின் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு. அதனால்தான் மாலையில் நடந்த கூட்டத்தில் துரைமுருகனை பொங்கவைத்து ஸ்டாலின் போக்குக் காட்டினாராம்!”
‘‘அப்போலோ அரசியலைவிட காவேரி அரசியல் கடுமையாகப் போகிறதே?”
‘‘இதற்கு மத்தியில் சிலர் கிளப்பிவிட்ட வதந்திதான் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது. ‘கருணாநிதியும் அன்பழகனும் பதவி விலகச் சம்மதித்துவிட்டார்கள். ஸ்டாலின் தலைவர். துரைமுருகன் பொதுச்செயலாளர், திண்டுக்கல் பெரியசாமி அல்லது எ.வ.வேலு பொருளாளர் என்றது ஒரு தரப்பு. ஸ்டாலினை செயல் தலைவராக அறிவிக்கப் போகிறார்கள். அவர் வகித்த பொருளாளர் பதவி எ.வ.வேலுக்கு கிடைக்கப் போகிறது என்றது இன்னொரு தரப்பு. இப்படி ஆள் ஆளுக்கு பதவிகளை ஏலம் போட்டது சீனியர்கள் சிலருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.”

‘‘இதற்கு அழகிரி எப்படி சம்மதிப்பார்?”
‘‘அதற்கும் இந்த வதந்தி மனிதர்கள் தீர்வு சொன்னார்கள். அழகிரி மீண்டும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆகப் போகிறார். அவருக்கு அந்தப் பதவியை விட்டுத்தர ஸ்டாலின் சம்மதித்துவிட்டார். இதற்கான பேச்சுவார்த்தை கோபாலபுரம் வீட்டில் நடந்துவிட்டது என்பதுதான் இவர்கள் சொன்னது. அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை. அழகிரியை மீண்டும் உள்ளே கொண்டு வர ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. கோபாலபுரம் குடும்பத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படி அவர்கள் இருந்தால், இதுவரை இரண்டு மூன்று அதிகார மையங்கள் இருந்தது மாதிரியே கட்சி இயங்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறாராம். அதனால் அழகிரி வருகையை அவர் கடைசி வரைக்கும் எதிர்ப்பார் என்கிறார்கள்”
‘‘அழகிரிதான், ‘நான் அரசியலிலேயே இல்லை’ என்று சொல்லி விட்டாரே?”
‘‘இப்படி பல முறை சொல்லி இருக்கிறார். இப்போதும் சொல்லி இருக்கிறார். இதனை ஸ்டாலின் நம்பவில்லை. ‘எதையாவது சொல்லி குட்டையைக் குழப்புவது அழகிரியின் வாடிக்கை’ என்று ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், அழகிரியை எப்படியாவது கட்சிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்களில் ஒருவர் கருணாநிதியின் மகள் செல்வி. அவர்தான் அழகிரியைப் பற்றி ஸ்டாலினிடம் அடிக்கடி சொல்லி வருவதாகச் சொல்கிறார்கள்.  இதனை ஸ்டாலின் விரும்பவில்லை. புதன்கிழமை காலை கருணாநிதி வீட்டுக்கு செல்வியும், அழகிரியும் பின்வாசல் வழியாக வந்தார்கள். கருணாநிதியின் அறைக்குச் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது ஸ்டாலின் குறித்து பேச்சு வந்துள்ளது. ‘என்னை முதலில் கட்சியில் சேருங்கள், ஸ்டாலினுக்கு எந்த எதிர்ப்பும் நான் தெரிவிக்கவில்லை’ என்று சொன்னாராம் அழகிரி. அவர் கோபாலபுரம் வீட்டில் இருக்கும்போதே ஸ்டாலினும் அங்கு வந்துவிட்டார். அழகிரி மாடியில் இருக்கிறார் என்று தகவல் சொன்னதால், கீழே இருந்தார் ஸ்டாலின். அவர் இறங்கி வந்த பிறகுதான் மேலே சென்றார். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை”
‘‘என்ன ஆகும்?”
‘‘கருணாநிதியின் உடல்நிலையைப் பொறுத்து நிலைமைகள் வேகம் பிடிக்கும். டிசம்பருக்குள் கட்சியின் பொதுக்குழுவை நடத்த வேண்டும். நடத்தி தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப வேண்டும். அந்த பொதுக்குழுவில், எப்படியாவது அறிவிக்க வைத்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் தரப்பு துடிக்கிறது.!” என்றபடி பறந்தார் கழுகார்!

Advertisements
%d bloggers like this: