Advertisements

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்!?’ – மத்திய அரசின் வியூகம்-விகடன்

மிழக முதல்வராக வலம் வரத் தொடங்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ‘ஆட்சியைப் போலவே, கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாது என மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன’ என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

முதல்வர் ஜெயலலிதா மறைவின் எதிரொலியாக, ஆளுநர் மாளிகையில் நள்ளிரவில் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். “ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்தாலும், கட்சியின் கட்டுப்பாட்டை தன்னுடைய பிடிக்குள் வைத்துக் கொள்ளவே சசிகலா விரும்புகிறார். கடந்த 5-ம் தேதி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டன. ‘ஆட்சியின் சூழலுக்கு ஏற்ப, சிலவற்றில் மாறுதல்களைக் கொண்டு வருவதற்காக கையெழுத்து வாங்கப்பட்டது’ எனவும் பேசுகின்றனர். மத்திய அரசின் துணையோடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சியைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் பதவி என்பது அதிகாரம் நிரம்பியது. இதனைக் கைப்பற்றுவதற்கான கோஷ்டி பூசல்கள் தொடங்கிவிட்டன” என விவரித்தார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், “அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சசிகலா. ஆனால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமைப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்படுவதில் ஜெயலலிதா ஆதரவு சீனியர்கள் பலருக்கும் விருப்பமில்லை. ‘கட்சியின் பிடி நழுவிவிட்டால், ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் தன்னைவிட்டுப் போய்விடும் என்பதால், பொதுச் செயலாளராக வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் சசிகலா. பொதுக்குழு உறுப்பினர்களிடம் மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கம் வேறாக இருக்கிறது. ‘ சசிகலாவை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால், கட்சிக்குள் அவர் வருவதை பிரதமர் விரும்பவில்லை’ என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இந்த நேரத்தில் மோடியின் ஆதரவோடு, கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்படுவதற்கான காரியங்களில் சிலர் இறங்கியுள்ளனர்” என்றவர் சின்ன இடைவெளிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

“அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குத் தம்பிதுரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே பிரதமரின் சாய்ஸாக இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தாலும், மத்திய அரசுக்கு அணுக்கமான போக்கில் நடந்து கொள்வார்; தொண்டர்கள் மத்தியிலும் பெரிய எதிர்ப்புகள் இருக்காது என நம்புகின்றனர். மறுபக்கம் மதுசூதனன் உள்ளிட்டவர்களும் கட்சிப் பதவிக்கு வர விரும்புகிறார்கள். சீனியர்கள் ஆளுக்கு ஆள் பதவி கேட்டு நிற்பதை அறிந்துதான், ஓ.பி.எஸ் தரப்பினர் தெளிவாக காய்களை நகர்த்துகின்றனர். ‘சோனியா காந்தியைப் போல் கட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தில் வேறு ஒருவர் இருந்ததைப் போல் அ.தி.மு.கவில் மேற்கொள்ள முடியாது. கட்சியில் கோலோச்சுகின்றவர்களால், ஆட்சி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படும். நிம்மதியாகச் செயல்பட முடியாது. ஜெயலலிதாவைப் போல் இரண்டு பதவிகளும் ஒருவரிடம் இருந்தால், கட்சியின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஆட்சி மற்றும் கட்சியில் இருந்தால், மக்கள் மத்தியில் வேறு எண்ணத்தைத் தோற்றுவிக்கும். தொண்டர்களும் சிதறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, பொதுச் செயலாளர் பதவிக்கும் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட வேண்டும்’ என மத்திய அரசில் உள்ளவர்களிடம் பேசி வருகின்றனர். ‘பிரதமர் அழுத்தம் கொடுத்தால், சசிகலா பணிவார்’ எனவும் அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால், இதனை மன்னார்குடி உறவுகள் ஏற்பதாக இல்லை. ‘முதல்வர் பதவியை விட்டுத் தரும் முடிவிலேயே நாங்கள் இல்லை. ஆளுநர் அழுத்தம் கொடுத்ததால்தான் சம்மதித்தோம். மற்றபடி கட்சிப் பதவிக்கு சசிகலாவைத் தவிர வேறு யாரையும் யோசிப்பதாக இல்லை’ எனக் கொதிக்கின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ.பி.எஸ், தம்பிதுரை, மதுசூதனன் ஆகியோர் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். பொதுக்குழுவுக்காக காத்திருக்கிறார்கள் தொண்டர்கள்!” என்கிறார் சசிகலா ஆதரவு அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு அரசியலால் கட்சியை வளர்த்தெடுத்தார். ஜெயலலிதாவின் வெற்றியும் அதைப் பின்பற்றியே தொடர்ந்தது. தற்போது சசிகலா எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற இரு புள்ளிகளில் அ.தி.மு.கவின் எதிர்காலம் மையமிட்டுள்ளது. இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை! 

Advertisements
%d bloggers like this: