Advertisements

மன்னார்குடி குடும்ப அதிகாரம்..! இனி என்ன ஆகும் அ.தி.மு.க. எதிர்காலம்?-விகடன்

முதலில் ஒரு ப்ளாஷ் பேக்….

1987-ம் ஆண்டு. இதே டிசம்பர் மாதம். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த போது, அடுத்த முதல்வர் யார்? கட்சியை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்தன. ஜானகியை ஒரு தரப்பினரும், ஜெயலலிதாவை மற்றொரு தரப்பினரும் ஆதரித்தனர். இதனால் அ.தி.மு.க.வில் இரண்டு ஆண்டுகள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கட்சி உடைந்து சிதறியது. எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது, பல ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க காரணமாய் அமைந்தது இந்த குழப்பம்.

அப்போது, அதாவது 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பிளவுபட்டு, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஜெ அணி, ஜானகி தலைமையில் அ.தி.மு.க. ஜா அணி என அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தன. இரட்டை இலை சின்னம் இருவருக்கும் கிடைக்கவில்லை. ஜானகிக்கு இரட்டை புறா, ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. எம்.ஜி.ஆர். வென்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜானகியே தோற்றார். ஜெயலலிதா அணி 27 இடங்களில் வென்றது. போடிநாயக்கனூரில் நின்ற ஜெயலலிதா வென்றார்.

இந்த தோல்வியால் ஜானகி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 27 இடங்களில் வென்றதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு தனக்கு தான் என்பதை நிரூபித்த ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. வந்தது. அடுத்த இரு ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரானார் ஜெயலலிதா. கட்சியையும், ஆட்சியையும் தனது தலைமையில் கொண்டு வந்தார் ஜெயலலிதா.

கை மாறுகிறதா அதிகாரம்?

இப்போது இன்றைய சூழலுக்கு வருவோம். 1987-ம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது இல்லை. யார் முதல்வர் என்பதில் போட்டி இருப்பதாய் தெரியவில்லை. எந்த எதிர்ப்பும் இல்லாமல், ஏற்கெனவே பொறுப்பு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே மீண்டும் முதல்வர் என அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் கட்சியை நிர்வகிக்கப்போவது யார்? கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் சசிகலாவின் குடும்பம் கட்சியில் அதிகாரம் செலுத்த துவங்கியிருப்பதை அனைவராலும் உணர முடிகிறது. ஜெயலலிதா மரணித்த பின்னர், அப்போலோவில் துவங்கி போயஸ் கார்டன், ராஜாஜி ஹால், எம்.ஜி.ஆர் நினைவிடம் என ஜெயலலிதாவின் உடல்  நல்லடக்கம் செய்யும் வரை அத்தனையும் சசிகலாவின் குடும்பத்தினர் கண்ணசைவில் தான் நடந்தது. கட்சி செயல்பாடும் அப்படித்தான்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த, சொல்லப்போனால் போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் ம.நடராஜன் உட்பட சசிகலா குடும்பத்தினர் பலர் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி அரணாக நின்றிருந்தனர். ஆளுநர், மத்திய அமைச்சர், முதல்வரின் வரிசையில் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ம.நடராஜன். மறுபுறம் ஜெயலலிதாவின் ரத்த உறவான தன்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழுதபடி புகார் சொல்லிக்கொண்டிருந்தார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூட கொஞ்சம் தள்ளி நின்றே அனைத்தையும் பார்த்து வந்தார்.

மன்னிப்பே கிடையாது என எச்சரிக்கப்பட்டவர்கள்

2011 ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டார். சசிகலாவின் உறவினர்களான ராவணன், மிடாஸ் மோகன், கலியபெருமாள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் கட்சியில் இருந்து களையெடுக்கப்பட்டனர். சசிகலா குடும்பத்தோடு எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா.

“தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களைப் பகைத்துக் கொண்டால், நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு, உங்களைப் பழி வாங்கி விடுவோம். ஆகவே எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வரும் வகையில் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களின் பேச்சைக் கேட்டு நம்பி செயல்படும் கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்புக் கிடையாது”  என பொதுக்குழுவில் ஜெயலலிதா கர்ஜிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை நீண்டது.

சில நாட்களுக்கு பிறகு சசிகலாவை மீண்டும் ஏற்றார் ஜெயலலிதா. ஆனால் நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்களை ஜெயலலிதா சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயலலிதா யாரை போயஸ் கார்டனை விட்டு விரட்டி அடித்தாரோ, யாரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்தாரோ அவர்கள் எல்லோரும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் உடலை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர்.

குழப்பத்தில் தொண்டர்கள்

என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஜெயலலிதாவை மட்டுமே அறிந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்களே ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் யார் என தெரியாமல் குழம்பி நின்றதை பார்க்க முடிந்தது. தொலைக்காட்சியில் அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்தவர்கள், ஜெயலலிதாவின் அருகில் நிற்பவர்கள் யார் என்பது தெரியாமல் வாதிட்டுக்கொண்டதை காண முடிந்தது. இவர்கள் எல்லாம் யார், ஏன் இவர்கள் அருகில் நிற்கிறார்கள்? ஓ.பன்னீர்செல்வம் ஏன் ஓரமாக நிற்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளை ஏன் அனுமதிக்கவில்லை என்ற கேள்விகள் எல்லாம் பரவலாக கேட்க முடிந்தது.

இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு புறம் என்றால், மறுபுறம் எம்.ஜி.ஆர். மறைவின் போது எழுந்த மிகப்பெரிய கேள்வி இப்போது மீண்டும் எழுந்துள்ளது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்பது தான் அந்தக் கேள்வி.

யார் முதல்வர் என்பதில் எந்த சர்ச்சையும் எழவில்லை. கட்சியை நிர்வகிக்கப்போவது நான் தான் என யாரும் சண்டையிடவில்லை. வாக்குவாதங்கள், அடி தடி சண்டைகள் என எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் எம்.ஜி.ஆர். இறந்த பின்னர் அ.தி.மு.க.வில் எழுந்த குழப்பம் இப்போது இல்லை என உறுதியிட்டு சொல்லி விட முடியாது. அத்தனை சிக்கல்கள் கட்சியில் கொட்டிக்கிடக்கின்றன.

அத்துமீறுவதாக சொல்லி ஜெயலலிதாவால் பதவியை பறிக்கப்பட்டவர்கள், கைதானவர்கள், விரட்டி அடிக்கப்பட்டவர்கள் இப்போது ஜெயலலிதா இருந்த இடத்தில் இருப்பதை மறுப்பேதும் சொல்லாமல் கட்சி தொண்டர்கள் ஏற்பார்களா என தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு நெருக்கடியான சூழலில், முதல்வர் பதவியை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். இதுவும் கூட சசிகலாவின் கண்ணசைவில் தான் நடந்தது. அது ஜெயலலிதாவுக்கு நன்மை பயப்பதாகவும் இருந்தது. ஜெயலலிதாவின் விசுவாசி யார் என்றால் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை முதலில் சொல்லும் அளவுக்கு மிகுந்த விசுவாசமாக இருந்தார். இப்போதும் இருக்கிறார்.

கட்சியை வழிநடத்தப்போவது யார்?

அப்படியென்றால் ஜெயலலிதாவுக்கு பின்னால் அ.தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார்? இவர் தான் என உறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று மட்டும் சொல்ல முடியும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதே பன்னீர்செல்வம் தான் இப்போதும் இருக்கிறார். அப்போது ஜெயலலிதாவை சொல்வதை கேட்டார். இப்போதும் யார் சொல்வதையோ கேட்டு நடக்கிறார்.

அ.தி.மு.க.வின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வி பரவலாக இருந்தாலும், இந்த கேள்வியை யாரிடம் முன்வைப்பது என யாருக்கும் தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கேள்வியை நாம் கேட்டால், நாம் கேட்டது அவருக்கு கேட்டதா இல்லையா என்பதை கூட நம்மால் உறுதி செய்து விட முடியாதபடி கடந்து சென்று விடுவார். இன்னும் பேசும் அதிகாரமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்ததாக தெரியவில்லை. அப்படி இருக்க கேள்விகளுக்கு பதிலை எல்லாம் அவரிடம் எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை.

நிச்சயம் சசிகலா தான், தலைமை ஏற்கப் போகிறார் என்ற கேள்விகள் பரவலாக எழத்துவங்கியுள்ளது. ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் நட்புடன் இருந்த சசிகலா தான் சரியான தீர்வு என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை மேடையில் பேசியதோ, செய்தியாளர்களிடம் பேசியதோ, அறிக்கை விட்டதோ, எந்த கூட்டத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதோ இல்லை. ஆனால் இப்போது அதை செய்யத் துவங்கி இருக்கிறார். 2011-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என சொல்லப்பட்டவர் சோ. அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்ததன் மூலம் தான் அதிகாரத்துக்கு வந்து விட்டதை உணர்த்தி இருக்கிறார் சசிகலா. ஆனால் கட்சியின் எதிர்காலம் குறித்து தொண்டர்களிடமோ, செய்தியாளர்களிடமோ, எம்.எல்.ஏ.க்களிடமோ சசிகலா வெளிப்படையாக பேசவில்லை.

இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

இந்த சூழலில் தான் ஜெயலலிதா நல்லடக்கம் முடிந்த கையோடு, கட்சியின் எதிர்காலம் குறித்து பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இவர். ‘அ.தி.மு.க.வின் எதிர்காலம் குறித்து யாரும் கவலைப்பட அவசியம் இல்லை. மிகுந்த பலத்தோடு அ.தி.மு.க. இருக்கிறது’ எனச்சொல்லி செய்தியாளர்களிடம் இருக்கிறார் இவர். இவர் அ.தி.மு.க.வின் நிர்வாகி இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அ.தி.மு.க.வின் உறுப்பினர் கூட இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஆம் சசிகலாவின் கணவர் நடராஜன் தான் அது.

உடல் நல்லடக்கத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடராஜன், “ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏதும் இல்லை. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இருவரது புகழும், உழைப்பும் கட்சியை கொண்டு செல்லும். இதே இடத்தில் எம்.ஜி.ஆரை அடக்கம் செய்த போது யார் அடுத்த தலைவர்? கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல தகுதியானவர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருந்த தலைவர்கள், அந்த ஒளி விளக்கை ஏந்தும் தகுதியுடையவர் புரட்சித்தலைவி தான் என்பதை உறுதி செய்தோம். கட்சியை அவர் 25 ஆண்டுகள் வழிநடத்துவார் என எதிர்பார்த்தோம். 25 ஆண்டுகளை கடந்து 28 ஆண்டுகள் வழிநடத்தி இருக்கிறார். திராவிடர் கழக ஆட்சி 50 ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா இந்த 4 பேரின் சகாப்தம் இன்றும் என்றும் தொடரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா போட்ட விதையை யாராலும் திருடி விட முடியாது. கட்சியை சாதாரண கடைநிலை தொண்டர் கூட கொண்டு செல்ல முடியும். அதற்கான அடித்தளத்தை புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் வகுத்து வைத்திருக்கிறார்கள்,” எனச்சொல்லி இருக்கிறார்.

கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாதவருக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அதிகாரத்தை கொடுத்தது யார்?. கட்சியில் நடராஜனும், சசிகலா குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் காட்டுகிறது. “கட்சியில் எல்லாம் அவர்கள் கண்ணசைவில் தான் நடக்கிறது. அவர்கள் திட்டப்படியே அனைத்தும் அரங்கேறி வருகின்றன. முதல்வர் தேர்வில் துவங்கி எல்லாம் அவர்களின் திட்டம் தான். யாரிடமும் எதையும் ஆலோசிக்க அவர்கள் தயாராக இல்லை,” என எம்.எல்.ஏ.க்களே புலம்ப துவங்கியுள்ளது தான் உச்சம்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னால், அ.தி.மு.க.வில் பெரும்பான்மையானோரால் முன்மொழியப்பட்டு முதல்வரானவர் ஜானகி. ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை வழிநடத்தும் தலைவராக ஏற்றுக்கொண்டது ஜெயலலிதாவைத்தான். எம்.ஜி.ஆர் மறைந்த போது ஏற்பட்ட பெரும் குழப்பம், இப்போதும் ஏற்பட்டுள்ளது.

உண்மையில் அ.தி.மு.க.வை வழிநடத்தும் அடுத்த தலைவர் யார்? இதற்கான விடையை அறிந்தவர்கள் அல்லது விடையை தேடி கண்டுபிடிப்பவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் தான். ஏனென்றால் தொண்டர்கள் விரும்புபவர்களே தலைவர்கள் ஆகின்றனர்.

Advertisements
%d bloggers like this: