Advertisements

நல்லன எல்லாம் தரும் கீரை

கீரை உடலுக்கு மிகவும் நல்லது’ என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். ஆனால், வாரத்துக்கு ஒருநாள் கூட கீரை சேர்த்துக்கொள்ளாத குடும்பங்கள்தான் நம் ஊரில் அதிகம். கீரைகள் ஊட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்களின் சுரங்கம். வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீசியம், பீட்டாகரோட்டின், நுண்ஊட்டச்சத்துக்கள் என அனைத்தும் கீரைகளில் நிறைந்துள்ளன.

கலோரி மிகக் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கிறது, புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதிக மக்னீசியம், குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் கொண்டதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம், தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும்.

கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் பலன் என்ன என்பதை விளக்குகிறார் சித்த மருத்துவர் உலகநாதன். கீரைகளைக்கொண்டு சுவை யான ரெசிப்பிகளைச் செய்து காட்டியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் லட்சுமி சீனிவாசன்.

 

முருங்கைக் கீரை

*கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள், வைட்டமின் பி மற்றும் சி, நார்ச்சத்து நிறைவாக உள்ளன.

*எலும்பு, பற்கள் வலுப்பெறும். ரத்தசோகையைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்மையைப் பெருக்கும்.

*உடல் வெப்பத்தைத் தணிக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலியைத் தடுக்கும்.

*கை, கால் வலி, மூட்டுவலியைக் குணமாக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

*செரிமானக் கோளாறு, மந்தத்தன்மை ஆகியவற்றைக் குறைக்கும்.

*முருங்கைக்கீரைச் சாற்றைத் தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால், பொடுகுப் பிரச்னை தீரும்.

முளைக்கீரை

*கால்சியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், புரதம், வைட்டமின் ஏ மற்றும் பி, ஆக்சாலிக் அமிலம் உள்ளிட்டவை நிறைவாக உள்ளன.

*நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. உடல் வெப்பத்தைக் குறைக்கக்கூடியது.

*வயிற்றுப் புண், அல்சர் பிரச்னையைக் குணமாக்கும்.

*குழந்தைகளுக்கு முளைக்கீரை சூப் கொடுக்கலாம். இதனால், அவர்களது உயரம் மற்றும் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

*முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து, நீரைப் பாதியாகச் சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகும்.

அரைக்கீரை

*வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளன.

*நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்துக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.

*ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

*உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது. அரைக்கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், சளி, இருமல் நீங்கும்.

*நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைச் சீராக்கும். சோர்வைப் போக்கும். உடலுக்குச் சுறுசுறுப்பளிக்கும்.

பொன்னாங்கண்ணி

*‘மேனிக்கு பொன்’ போன்ற அழகையும் மினுமினுப்பையும் தருவதுதான் பொன்னாங்கண்ணிக் கீரை.

*வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன.

*காசநோய், கண் நோய், உடல் உஷ்ணம், வாதம், கபம் ஆகியவற்றைப் போக்கும். கண் நோய்களைக் குணமாக்கும்.

*ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூலச்சூடு நீங்கும்.

*பித்த மயக்கம், கைகால் எரிச்சலைப் போக்கும்.

*வாய்ப்புண், வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும். கல்லீரல் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

பசலைக் கீரை

*வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்துள்ளன.

*நீர்க்கடுப்பு, நீர் அடைப்பு, பால்வினை நோய்கள் ஆகியவற்றுக்குச் சிறந்த தீர்வாகும்.

*உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுப்பவர்களுக்கு உகந்தது.

*சிறுநீரைப் பெருக்கும். சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.

*தைராய்டு பிரச்னைகள் குணமாகும். கால்சியம் குறைபாட்டால் உண்டாகக்கூடிய அனைத்துவிதமான நோய்களையும் போக்கும்.

*கர்ப்பப்பைவாயில் ஏற்படும் புண்களைச் சரிசெய்ய உதவும். வெள்ளைப்படுதல் பிரச்னையைப் போக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கைத் தடுக்கும்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால், ஆண்களின் விந்து தானாக வெளியேறுவது தடுக்கப்படும்.

சிறுகீரை

*பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன. புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.

*நார்ச்சத்து நிறைந்திருப்பதால், சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. சிறுநீர்க்கடுப்பு, கண் எரிச்சலைப் போக்குகிறது.

*இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகையைப் போக்கும். பித்தம் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கும். காசநோயைக் கட்டுப்படுத்தும்.

*வண்டு, பூச்சிக்கடி ஆகிய விஷக்கடிகள் மூலம் ஏற்படும் நச்சுத்தன்மையைப் போக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.

முடக்கத்தான் கீரை

*கை, கால் முடக்கத்தை நீக்கும் கீரை என்பதால், `முடக்கத்தான்’ என்று பெயர். கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

*கால்சியம் நிறைந்திருப்பதால், 40 வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது. பற்கள் உறுதியாகும். எலும்புகள் வலுப்படும். எலும்பு மஜ்ஜை ஆரோக்கியம் மேம்படும்.

*நரம்புமண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வாதத்தைக் கட்டுப்படுத்தும்.

*கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, இடுப்பு எலும்புகள் வலுவாகும். கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். சுகப் பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும். உடல்வலி குறையும்.

வெந்தயக்கீரை

*கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் நிறைந்துள்ளன.

*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும்.

*வாயுக்கோளாறைச் சரிசெய்யும். செரிமானத்தை மேம்படுத்தும்.

*சர்க்கரைநோயைக் கட்டுப் படுத்தும்.

*எலும்புகளை வலுவாக்கும். பற்கள் உறுதியாகும்.

மணத்தக்காளி கீரை

*வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன.

*குடல்புண், வாய்ப்புண்ணுக்குச் சிறந்த மருந்து.

*மனஅழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. பக்கவாதம் மற்றும் மூட்டுவலிக்கு நல்ல பலன் தரும்.

*உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.

*பத்தியம் இருந்து 48 நாட்கள் இந்தக் கீரையைச் சாப்பிட்டுவந்தால், சொரியாசிஸ் உள்ளிட்ட தோல் நோய்கள் குணமாகும், கட்டுப்படும்.

புளிச்சக் கீரை

*வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

*ஆரம்பநிலை காசநோயைக் குணமாக்கும்.

*ஆண்களின் உயிரணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*நிகோட்டினிக் அமிலம் (Nicotinic Acid) அதிகம் நிறைந்தது.

*இதய நோய்கள், நரம்புத்தளர்ச்சி, வாதம், ரத்தஅழுத்தம் உள்ளிட்டவற்றைப் போக்கக்கூடியது.

*மலச்சிக்கலைப் போக்கும். தேமல், படை போன்ற தோல் நோய்களைக் குணமாக்கும்.

வல்லாரை

*கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

*சூடும் அல்லாத குளிர்ச்சியும் இல்லாத சமநிலை இயல்பு கொண்ட கீரை இது.

*மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, சிறப்பாகச் செயல் படவைக்கும். நினைவுத்திறனை அதிகரிக்கும்.

*ஆட்டிசம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. கவனச்சிதறல்களைக் குறைக்கும்.

*உடல்சோர்வு, நரம்புத்தளர்ச்சி, பார்வை மங்குதல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

*ரத்தத்தைச் சுத்திகரிக்கும். உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகும்.

தூதுவளை

*வைட்டமின் சி, இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன.

*தூதுவளை சூடு என்பதால், இதை மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாகவும் செய்து குடிக்கலாம்.

*ஜலதோஷம் நீங்கும். நுரையீரலைச் சுத்தப்படுத்தும் தன்மை, இந்தக் கீரைக்கு உண்டு. தொண்டைக் கமறல், தொண்டைப்புண்ணைக் குணமாக்கும்.

*தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த்தொற்று குணமாகும்.

*நரம்புகளை வலுப்படுத்தும். பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

முள்ளங்கிக் கீரை

*வைட்டமின் ஏ, பி, சி நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் நிறைவாக உள்ளன.

*முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளைத் தூக்கி எறிந்துவிடுகின்றனர். இது தவறு. முள்ளங்கியைப்போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.

*மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு ‘குன்மநோய்’ என்று பெயர். பெண்கள் தொடர்ந்து 48 நாட்களுக்கு முள்ளங்கிக் கீரையைச் சாப்பிட்டுவந்தால், இந்த வலி குறையும்.

*உடல் வெப்பத்தைக் குறைக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

*முள்ளங்கிக் கீரைச் சாற்றைத் 30 மி.லி தொடர்ந்து 21 நாட்கள் காலை வேளையில் பருகிவந்தால், சிறுநீரகக் கற்கள் நீங்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். கல்லீரல் நோய்கள் குணமாகும்.

பாலக் கீரை

*வைட்டமின் கே, ஏ, பி, சி கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்புச்சத்து, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

*குளிர்ச்சித்தன்மை கொண்டது. உடல் சூட்டைத் தணிக்கும்.

*சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

*ரத்த உற்பத்திக்கு உதவும்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

*ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது. வெள்ளைப்படுதல் குணமாகும்.

கொத்தமல்லி

*வைட்டமின் பி1, பி2, சி, புரதச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம் (Oxalic acid) இதில் உள்ளன.

*குளிர் காய்ச்சல், பித்தம், வாத நோய்கள் குணப்படுத்தும்.

*புண்கள், வீக்கம் விரைவில் குணமடைய உதவும்.

*நரம்பு, எலும்பு, தசைகளில் உண்டாகும் பாதிப்புகளைத் தவிர்க்கும்.

*காசநோயைக் குணப்படுத்தும்.

*உயர் ரத்தஅழுத்தம் சீராகும். ஊளைச்சதைக் குறையும்.

*பெண்களுக்கு மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

அகத்திக் கீரை

*இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் ஆகியவை இதில் உள்ளன.

*உடலில் உள்ள அதிகமான பித்தத்தைத் தணிக்கும். மூலச்சூட்டைக் குறைக்கும்.

*வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கும். உடலின் நச்சுக்களை நீக்கும், விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

*வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்.

இந்தக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணிநேரம் ஊறவைத்துக் குளித்தால், இளநரை குறையும்.

தவசிக் கீரை

*இதை, `மல்ட்டி வைட்டமின் கீரை’ என்றும் சொல்வார்கள்.

*இரும்புச்சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவில் இருக்கின்றன.

*ரத்தசோகையைப் போக்கும். உடல் புத்துணர்வு பெறும்.

*ஆண்மைக்குறைபாடு நீங்கும்.

*இருமலைப் போக்கும்.

பருப்புக் கீரை

*இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளன. அனைவரும் சாப்பிட ஏற்றது.

*பாலூட்டும் தாய்மார்களுக்குத் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க உதவும். வெள்ளைப்படுதல், சிறுநீர்க் கடுப்பு ஆகியவற்றைப் போக்கும்.

*சீதபேதி, ரத்தபேதி குணமாகும். தலைவலி, காய்ச்சல் நீங்கும்.

*கல்லீரல் வீக்கம் குறைய உதவும். பருப்புக் கீரை சாப்பிடுவதால், மது, புகை, போதை பழக்கத்திலிருந்து விடுபடலாம்.

*உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

துத்திக் கீரை

*வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகமாக உள்ளன.

*இதன் கீரை, வேர், பட்டை, விதை, பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.

*உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் நோய்கள் நீங்கும்.

*மூலம், உடலில் ஏற்படும் கட்டி, புண்கள் குணமடையும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

*துத்திக் குடிநீரைத் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் சிறிதளவு பருகி வந்தால், சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்கள் கரையும்.

கரிசலாங்கண்ணி

*வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் கொண்டது.

*கரிசலாங்கண்ணி கீரை வெள்ளை, மஞ்சள் என வெவ்வேறு நிற பூக்களைக் கொண்டதாக இருக்கும்.

*மஞ்சள்காமாலையைக் கட்டுப்படுத்தும். கல்லீரலைக் காக்கும். புற்றுநோயைத் தவிர்க்கும்.

*காலையில் கரிசலாங்கண்ணி சாறைப் பருகிவந்தால் பித்தப்பைக் கற்கள் மறையும். பித்தநீர் சரியாக சுரக்க உதவும்.

*கரிசாலை இலைச்சாற்றைக் காலை, மாலை பருகிவந்தால், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.

புளியாரைக் கீரை

*வைட்டமின் சி மற்றும் கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளன.

*உடல் வெப்பத்தைத் தணித்துப் பசியைத் தூண்டும்.

*பித்த மயக்கம், வயிற்றுப்போக்கு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, மூலக்கடுப்பு, மூலநோய் பாதிப்புகள் நீங்கும். வாத நோய்கள் தீரும்.

*சீதபேதி குணமாகும். தோலில் உண்டாகும் மருக்கள் நீங்கும். புளியாரை இலையை வெந்நீர்விட்டு அரைத்து, பருக்கள், கொப்பளங்கள் மீது வைத்துக்கட்ட, குணமாகும்.

சுக்கான் கீரை

*வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளன.

*குடல்புண்ணைக் குணமாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

*வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான்.

*ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். பித்தம் குறையும். கல்லீரல் பலப்படும்.

*மஞ்சள்காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து. 

வயதாவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலியைத் தடுக்கலாம்.

லெட்யூஸ்

*லெட்யூஸ், நிறைய நார்ச்சத்தும், செல்லுலோஸும் கொண்டது. லெட்யூஸில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டாகரோட்டின் இதயத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*லெட்யூஸில் பல வகைகள் உள்ளன. ரோமெய்ன், கிறிஸ்ப்ஹெட், பட்டர்ஹெட், ரெட் அண்ட் கிரீன் லீஃப் ஆகியவை சில வகைகள். ரோமெய்ன் வகை பொதுவாகக் கிடைப்பது.

*உடல்பருமனைக் குறைக்க உதவும். செரிமானத்தையும் சீராக்கும்.

*லெட்யூஸில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள பித்தத்தை அகற்றவல்லது. இதன் மூலம் உடலின் கொழுப்பும் நீங்கும்.

கொடிப்பசலை

*கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உள்ளன.

*உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. வெட்டைச் சூடு குணமாகும். உடலுறவு மீதான நாட்டம் அதிகரிக்கும்.

*கொடிப்பசலைக் கீரையைக் கஷாயம் வைத்துக் குடித்தால், மலச்சிக்கல் குணமாகும்.

புதினா

*நீர்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, தயமின் உள்ளன. புதினாவில் வைட்டமின் டி உள்ளது.

*செரிமானத்துக்கு உதவும். தினமும் காலையில் சாப்பிட்டுவந்தால், ரத்தம் சுத்தமாகும். செரிமான மண்டலம் மேம்படும். சிறுநீர் பிரியும்.

*சளி, இருமலைக் கட்டுப்படுத்தும். காய்ச்சல் குணமாகும். வாந்தி ஏற்படுகின்ற உணர்வைத் தடுக்கும்.

*மாதவிலக்கின்போது ஏற்படும் அடி வயிற்று வலி நீங்கும்.

*மஞ்சள்காமாலைக்கு சிறந்த மருந்து.

*ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நிற்கும். வாய் துர்நாற்றம் நீங்கும்.

கறிவேப்பிலை

*இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் நிறைந்துள்ளன.

*ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்.

*கண் பார்வையைத் தெளிவாக்கும். கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட, கை, கால் நடுக்கம் நிற்கும்.

*ரத்தத்தை சுத்தப்படுத்தும். நகங்கள் எளிதில் உடையாது, வலிமை பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.

*சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வீக்கம், கட்டிகள் இருந்தால் குறையும்.

*குளுக்கோஸ் அளவை சமன் செய்யும். கூந்தல் கருப்பாகும். முடி உதிர்தலைத் தடுக்கும். உடல் சூடு தணியும். இளம் நரை தவிர்க்கும்.

Advertisements
%d bloggers like this: