Advertisements

ஜெயலலிதா இடத்தில் சசிகலா… சசிகலா இடத்தில் திவாகரன்! பரபரக்கும் மன்னார்குடி ‘கள நிலவரம்’-விகடன்

ங்களுக்கு துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை; உறவுமில்லை. உங்களுக்கு உண்மையான தங்கையாகவே இருக்கவே விரும்புகிறேன். அவருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்”  – 2011-ம் ஆண்டு இறுதியில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறிய சசிகலா, 2012-ம் ஆண்டு துவக்கத்தில் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி தான் இது.  இதை அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா.

இந்த கடிதத்தை ஏற்று சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்று, மீண்டும் கட்சிக்குள்ளும், கார்டனுக்குள்ளும் சசிகலாவை அனுமதித்தார் ஜெயலலிதா. “சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதே பொருள் கொண்ட அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார். சசிகலா அளித்துள்ள விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில், நடராஜன், திவாகர், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியபெருமாள், பழனிவேல், தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தானலட்சுமி சுந்தரவதனம் மற்றும் வைஜெயந்தி மாலா ஆகியோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை; அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என அறிவித்திருந்தார்.

5 ஆண்டுகளுக்கு பின்னால்…

இது நடந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டது. அப்போது ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கி பின்னர் சேர்க்கப்பட்ட சசிகலா, இப்போது ஜெயலலிதா இடத்தில் இருக்கிறார். கட்சியின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக சசிகலாவை அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்க அழைக்கின்றனர். இன்னும் கட்சியில் சேர்க்கப்படாமல் இருந்த, ‘கட்சியினர் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது’ என அறிவித்திருந்தவர்கள் எல்லாம் இப்போது சசிகலாவுடன் அணி வகுத்து நிற்கிறார்கள். ஜெயலலிதாவின் உடலை சுற்றி அரணாக நின்றவர்களும் இவர்கள் தான்.

தமிழகத்தின் மையத்தில் உள்ள மன்னார்குடியை மையப்படுத்தி தான் இப்போது தமிழக ஆட்சியும், அ.தி.மு.க.வும் இயங்கத்துவங்கி இருக்கிறது. இந்நிலையில், மன்னார்குடியின் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்ள விசாரித்தோம். கட்சியிலும், ஆட்சியிலும் ஆளுமை செலுத்த துவங்கியுள்ள மன்னார்குடி குடும்பத்தில் என்ன நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்பது குறித்து அவர்களுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். அந்த தகவல்களின் தொகுப்பு தான் இனி வருபவை..

‘அம்மா’ இடத்தில் ‘சின்னம்மா’

ஜெயலலிதா இடத்தில் இருந்து சசிகலா கட்சியை வழிநடத்துவாரா என்ற நம் முதல் கேள்விக்கு பதில் மிக வேகமாக விழுந்தது. “ஏன் கூடாதா?. ‘ஜெயலலிதா வீட்டுக்கு கேசட் கொடுக்க சென்ற சசிகலா, அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்கலாமா?’ என்கிறார்கள். சரி சசிகலா வேண்டாம். அப்படியென்றால் யார் கட்சி பொறுப்பை ஏற்பது?. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அல்லது மகள் தீபாவை பொறுப்பில் அமர்த்தலாமா?  அப்படி தலைமை பொறுப்பில் அமர்த்தினால் அவர்களால் அப்பதவியில் செயல்படத்தான் முடியுமா? 34 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நிழலாகவே இருந்து அவரது ஆளுமை, அரசியல், ஆட்சி, அதிகாரம் என அனைத்தையும் அறிந்தவர் சசிகலா.

அவரைத் தவிர வேறு யாருக்கு ஜெயலலிதாவின் உணர்வுகள் புரியும்?.  அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா நேரில் பிறப்பித்த உத்தரவுகளைவிட சசிக்கலா மூலம் பிறப்பித்த உத்தரவுகளே அதிகம் என்பதை அனைவரும் அறிவார்கள்.  சாதியை தாண்டி நட்பால் தோழியை அடையாளம் கண்டவர் ஜெயலலிதா.  அம்மா – சின்னம்மா இந்த இருவரையும் பிரித்து பார்க்க முடியாது. எனவே அம்மா இடத்தில் சின்னம்மா தான் இருப்பார்” என அழுத்தமாகவே சொன்னார்கள்.

சசிகலா இடத்தில் திவாகரன்…

அப்படியென்றால் சசிகலாவுக்கு உதவியாக இருக்கப்போவது யார்?. “சந்தேகமே இல்லாமல் திவாகரன் தான். கணவராகவே இருந்தாலும் நடராஜனின் செயல்பாட்டில் சசிகலாவுக்கு மாற்று கருத்து உண்டு. ரகசியமாய் நடராஜனின் ஆலோசனைகளை சசிகலா கேட்கலாம். ஆனால் சசிகலாவின் அசைக்கமுடியாத நம்பிக்கை திவாகரன்தான். ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி இறந்துபோனவர் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன்.  அதனால் அவரது மனைவி இளவரசிக்கும், மகன் விவேக்கும் ஜெயலலிதா பார்வையில் முக்கியத்துவம் பெற்றார்கள்.  பெரும்பாலான சொத்துக்கள்கூட அவர்கள் பெயரில்தான் இருக்கின்றன.  

சுப்ரீம் கோட்டில் நிலுவை உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சசிகலாவுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. எனவே ஜெயலலிதாவால் வெற்றிடமான ஆர்.கே. நகர் தொகுதியில் சசிகலா நிறுத்தப்படுவார். ஜெயலலிதாவைப்போல கட்சியையும், ஆட்சியையும் தலைமை ஏற்று நடத்தப்போவது சசிகலா தான். அந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆவார். சசிகலாவின் நிழலாக திவாகரன் இருப்பார்,” என்றார்கள்.

முதல் மரியாதை ஆரம்பம்…

இதை உறுதிப்படுத்தும் வகையில், திவாகரனுக்கு இப்போதே முதல் மரியாதை கிடைக்கத்துவங்கி விட்டது. “அம்மா இறந்தவுடன் அடக்கம் செய்கிற காரியம் வரை எல்லாத்தையும் நான்தான் பார்த்துகிட்டேன்” என்று எல்லோரிடமும் கூறி வருகிறார் திவாகரன். கட்சி நிர்வாகிகள் துவங்கி வி.ஐ.பி.க்கள் முதல் எல்லோரும் திவாகரனுக்கு முதல் மரியாதை செலுத்தத் துவங்கி விட்டார்கள். மன்னார்குடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்த திருமணத்தில், முக்கிய வி.ஐ.பி.க்கள் பலரும், மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தாமல் திவாகருக்கு வணக்கம் போடுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

மன்னார்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2011 தேர்தலில் அகமுடையார் இனத்தைச் சேர்ந்த சிவராஜமாணிக்கத்தையும், 2016 தேர்தலில் அவரது வலது கரமான கள்ளர் இனத்தைச் சேர்ந்த எஸ். காமராஜையும் நிறுத்தினார் திவாகரன்.  இருவருமே தோல்வியை தழுவினர்.  தற்போது உணவுத்துறை அமைச்சராக உள்ள ஆர்.காமராஜை ஓரம்கட்டி, எஸ். காமராஜை அமைச்சராக கொண்டுவருவதுதான் திவாகரின் திட்டமாக இருந்தது.  ஆனால், எஸ்.காமராஜ் தோல்வி அடைந்ததால் அது நடைபெறவில்லை. 

அதிலிருந்து கட்சிப் பணிகளில் ஒதுங்கி இருந்த காமராஜ் தற்போது ஜெ மறைவிற்கு பின் முக்கியத்துவம் பெற்று வருகிறார். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவாரூரில் நடைபெற்ற ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும், சசிக்கலாவை தலைமை ஏற்க அழைப்பு விடுக்கும் வகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் எஸ்.காமராஜ் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.  அவர் திவாகரன் ‘குட் புக்கில்’ இருப்பதால் முதல்மரியாதை கொடுக்கப்பட்டது.  

அச்சத்தில் அதிகாரிகள்

திவாகரன் ஓரங்கட்டப்பட்ட பின்னர் அவருக்கு மரியாதை அளிக்காத அதிகாரிகள் பலரும் தற்போது ‘கிலி’யில் இருக்கிறார்கள்.  குறிப்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், எஸ்.பி. மயில்வாகனம் விரைவில் மாற்றப்படலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.  திருவாரூரில் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “திவாகரன் நடத்தும் கல்லூரியில் எதிர்த்து பேசிய பஸ் டிரைவர் மீது டீசல் திருட்டு வழக்கு போடச் சொன்னார்கள்.  திவாகர் வீட்டு பின்புறம் சோழியத் தெருவில் உள்ள நபர் மீது அவரது காம்பவுண்ட் சுவரை தொட்ட காரணத்திற்கு வழக்கு போடச் சொன்னார்கள். 

இப்போது சின்னம்மா தலைமை ஏற்கணும் என்ற போஸ்டரை யாரோ கிழித்துவிட்டார்களாம் அவர்களை உடனே கைது செய்யணும் என்று கூறுகிறார்கள்.  இனி காவல்துறை அவர்களது ஏவல் துறையாகத்தான் இயங்க முடியும்.  இங்கு வேலை பார்ப்பதைவிட வேறு எங்கு போனாலும் நிம்மதிதான்” என்று புலம்பினார்.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ?

Advertisements
%d bloggers like this: