Advertisements

மிக்ஸி, ப்ரிட்ஜ், டி.வி. . . மின்சாரம் வந்ததும் மீண்டும் இயக்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை!

ர்தா புயலின் தாக்கம் மக்களைப் பெருவாரியாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ’புயலுக்குப் பின் அமைதி என்பார்களே’ அப்படித்தான் இருக்கின்றன புயல் தாக்கிய பகுதிகள். சாலையெங்கும் மரங்கள், மின்கம்பங்கள், பெயர்ப் பலகைகள், வீட்டுக் கூரைகள் விழுந்துகிடப்பதைப் பார்க்கிறோம். என்னதான்  வெளியில்  செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் ஒரு நாள் முடங்கிப் போய் மீண்டெழுவது சற்று கடினம்தான். மின்சாரம் வரும் வரை சமாளிக்க சில டிப்ஸ் இங்கே!

* புயலடித்தபோது  மிக்ஸி, டி.வி, கிரைண்டர் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டிருக்கும் . மின் ஸ்விட்ச்கள் சிலவற்றை ஆஃப் செய்யாமல் மறந்துவிட்டிருப்போம். நிலைமை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின்சார இணைப்பு கொடுக்கும்போது வரக்கூடிய மின்சாரம் உயர் அழுத்த மின்சாரமோ, அல்லது குறைந்த அழுத்த மின்சாரமோ வர வாய்ப்புள்ளதால், வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டர், ஏசி உள்ளிட்ட உயர்மின் சாதனைகளை உடனடியாக இயக்காதீர்கள்.

* வீட்டைச் சுற்றிலும் அறுந்துபோன வயர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை நீங்களாக அஜாக்கிரதையுடன் அப்புறப்படுத்த வேண்டாம். கேபிள் டிவி வயர்களாக  இருந்தாலும் கையில் பிடிப்பதைத்  தவிருங்கள்.

 

* மின்சாரம் சம்பந்தமான வேலைகளை நீங்களே சரிசெய்ய முனையாமல், அனுபவமுள்ள வயர்மேனைக்கொண்டு சரிசெய்யவும்.
* ஃபிரிட்ஜில் உள்ள பொருட்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் எளிதில் கெட்டுப் போகக் கூடும். அதனால், ஃபிரிட்ஜில் உள்ள எல்லாவற்றையும் வெளியே எடுத்துவிட்டு , ஃபிரிட்ஜை சுத்தமாகத் துடைத்து வைப்பது நல்லது. மீண்டும் அதே பழைய பொருட்களை ஃபிரிட்ஜில் அடுக்காமல், மின்சாரம் வந்ததும் புதிய பொருட்களை வாங்கிவைப்பது சிறந்தது.

 

*  குடிநீர்க் குழாய்கள்  உடைப்பு ஏற்பட்டு  கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம். எனவே,  குடிநீர்  சுத்தமாக இருக்கிறதா எனப் பார்க்கவும். காய்ச்சிய நீரைப் பருகுவது மிகவும் அவசியம்.

* வீட்டுக்கு அருகே தேங்கியிருக்கும் தண்ணீரில் கால் வைக்கும் முன், அதில் மின் வயர்கள் எதுவும் விழாமலிருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். முடிந்தவரை தண்ணீரில் கால் வைக்காமல் செல்லுங்கள்.

* மின் கம்பங்கள் ஒடிந்தோ அல்லது சாய்ந்தோ, வயர்கள்  அருந்தோ கிடந்தால் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.

* வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட சாலைகள், மண்சரிவுகள், கீழே விழுந்த மரங்கள், அறுந்து விழுந்த மின் வயர்கள் எதையும் சட்டென்று தொடாதீர்கள். முக்கியமாக குழந்தைகள் துறுதுறுவென இருப்பார்கள். அவர்களை உங்கள் பார்வையில் கவனித்துக்கொள்வது முக்கியம்.

*  மின்சாரம் இல்லாமல் செல்போன் சார்ஜ் குறைந்துகொண்டே இருக்கும். அதனால், தேவையில்லாமல் செல்போனை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். பேட்டரியில் இயங்கும் விளக்குகள் சார்ஜ் தீர்ந்தவுடன்  ஆஃப் ஆகிவிடும். அதனால் அவற்றையும் அதிகபட்ச தேவைக்குப் பயன்படுத்தவும். மெழுகுவத்திகளை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள். சிறிய எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், இவற்றை குழந்தைகள் கைப்படாத, தீப்பற்ற வாய்ப்பில்லாத இடங்களில் பாதுக்காப்பாக வைக்கவும்.

* காலணிகள் அணியாமல் வெளியே போக வேண்டாம். டூவீலரை செல்ஃப் ஸ்டார்ட் செய்யாமல் கிக் ஸ்டார்ட் செய்வது நல்லது. கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம். அவசரப்பட்டு அவற்றைத் தொட்டுத் துடைத்து, கைகளில் காயம் ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்.  அதே போல சின்னச்சின்ன கண்ணாடித் துகள்கள், குப்பைகள்  வீட்டின் உட்புறம் வந்து விழுந்திருக்கலாம். பகல் நேரத்தில் வெளிச்சம் இருக்கும்போதே சுத்தம் செய்துகொள்வது நல்லது.

Advertisements
%d bloggers like this: