Advertisements

போயஸ் கார்டனுக்குள் அதிகாரிகளுக்கு நோ என்ட்ரி! – கோட்டையில் கோலோச்சும் ஓ.பி.எஸ்.-விகடன்

அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. அதே சமயம், ‘முதல்வர் மரணம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சை எழுப்புவதால், மிகப் பொறுமையாகவே காய் நகர்த்தி வருகிறார் சசிகலா’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ‘அ.தி.மு.கவுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்’ எனக் கட்சியின் சீனியர்கள் பேசி வருகின்றனர். ‘இதற்காக அ.தி.மு.கவின் உட்கட்சி விதிகளையும் தளர்த்துவோம்’ என நேற்று பேட்டி அளித்தார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.பொன்னையன். “ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தவர்கள் எல்லாம், இப்போது சசிகலாவின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். ‘சின்னம்மா தலைமையேற்க வேண்டும்’ என மாவட்டங்கள் தோறும் சுவரொட்டிகள் முளைத்துவிட்டன. அ.தி.மு.கவின் 135 எம்.எல்.ஏக்களும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போயஸ் கார்டன் செல்ல உள்ளனர். அங்கு சசிகலாவை சந்தித்து, தலைமையேற்க அழைப்பு விடுக்க உள்ளனர். அதன்பிறகு, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கான தேதி அறிவிக்கப்படும். அதேநேரம், தமிழக அரசியலில் நிலவும் அனைத்து விவகாரங்களையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சசிகலாவுக்கு ஆதரவாக வெளியிடப்படும் விளம்பரங்களையும் கூர்ந்து கவனிக்கின்றனர்” என விளக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர், 

முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, சசிகலாவை முன்னிறுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் தொடர்கிறார். அதேநேரம், கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஆட்சி அதிகாரத்துக்குள் நுழையும் முடிவில் இருக்கிறார் சசிகலா. ‘தங்களால் கொண்டு வரப்பட்ட ஓ.பி.எஸ், ராஜினாமா செய்யத் தயங்க மாட்டார்’ என மன்னார்குடி தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் ஓ.பி.எஸ், பதவியை விட்டு விலகுவது என்பது சாத்தியமில்லை. இந்தத் தருணத்தில், ‘சசிகலா முதலமைச்சர் ஆக வேண்டும்’ என அமைச்சர் ஒருவர் கொடுத்த விளம்பரம், மத்திய அரசின் கண்களில் விழுந்திருக்கிறது. ‘அதிகாரத்தில் வலுவாக இருக்கும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அந்த அமைச்சரை நீக்கிவிட்டால், மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஓ.பி.எஸ் பின்னால் வந்துவிடுவார்கள்’ என்ற ரீதியில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. இதை உணர்ந்து, ‘ மாநில அரசின் அதிகாரத்துக்குள் மத்திய அரசு தலையிடப் பார்க்கிறது’ என அ.தி.மு.க சீனியர் ஒருவர் நேற்று பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை விளங்கிவிடும். மத்திய அரசோடு இணக்கமாகச் செயல்பட்டு, மாநில அரசுக்கான நலத் திட்டங்களைப் பெறும் முடிவில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.

தற்போது அ.தி.மு.கவின் உறுப்பினராக மட்டுமே சசிகலா இருப்பதால், அதிகாரத்திற்குள் கேள்வி கேட்காமல் அமைதியாக இருக்கிறார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் முழு அதிகாரமும் இருப்பதால், வர்தா புயல் பாதிப்பு ஆலோசனை, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவது, அதிகாரிகளிடம் வேலை வாங்குவது என மிரள வைக்கிறார். இப்படியொரு பன்னீர்செல்வத்தை சக அமைச்சர்களே பார்த்ததில்லை என்னும் அளவுக்குச் செயல்படுகிறார். தற்போது உயர் அதிகாரிகள் யாரும் கார்டனுக்குச் செல்வதில்லை. முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடமே விவாதிக்கின்றனர். மன்னார்குடி தரப்புக்கு நெருங்கிய அதிகாரிகள் மட்டுமே, கார்டனுக்குச் சென்று விசுவாசத்தைக் காட்டுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ்ஸின் கைகளே ஓங்கியிருக்கிறது. மத்திய அரசின் நெருக்குதலுக்காக சீனியர் அமைச்சர் நீக்கப்படுவாரா என்பதைப் பொறுத்து, அடுத்தகட்ட காட்சியைத் தீர்மானிக்கலாம்!” என்றார் விரிவாக. 

” அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து 20-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம். பொதுக்குழு நடக்கும் நாளன்று, காலையில் செயற்குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ‘கொடநாட்டில் நடத்த வேண்டும்’ என்பதுதான் மன்னார்குடி உறவுகளின் விருப்பம். சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் எதாவது ஓர் இடத்தில் நடக்கலாம். செயற்குழு, பொதுக்குழு குறித்த அறிவிப்பையும் கட்சியின் சீனியர்களே அறிவிப்பார்கள். மத்திய அரசின் அழுத்தத்தை முழுமையாக எதிர்க்கும் வகையில், மன்னார்குடி தரப்பினர் தயாராகி வருகிறார்கள். அதற்கேற்ப, உறவுகள் மத்தியில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. பொதுக்குழுவில் சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஆட்சியிலும் கட்சியிலும் அதிரடியான முடிவுகள் எடுக்கப்படலாம்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

சசிகலாவுக்கு எதிர் மனநிலையில் உள்ளவர்கள் மூலம் வழக்குப் போட வைப்பது; ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை சுப்ரமணியன் சுவாமி மூலம் தொடர்ந்து எழுப்புவது; ஓ.பி.எஸ் மூலம் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது என பா.ஜ.க மேலிடம் பரபரப்பாக இயங்கி வருகிறது. பொதுக்குழு வரையில் அனைத்தையும் மௌனமாகவே கவனித்து வருகிறார் சசிகலா! 

Advertisements
%d bloggers like this: