Advertisements

புயல் பாதிப்பு… வீட்டைப் பாதுகாக்கும் இன்ஷூரன்ஸ்!

யற்கை சீற்றம் என்பது எதிர்பாராத ஒன்று. அதனைத் தடுத்து நிறுத்துவது நம் கையில் கிடையாது. வர்தா புயல் டிசம்பர் 12-ம் தேதி ஏற்படுத்திய சேதம் மிக அதிகம். சில இடங்களில் வீடுகளில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வீடு, சுற்றுச் சுவர்கள் தரைமட்டமானது. இதனால், லட்சக் கணக்கில் சேதம் உண்டானது.

கடந்த வருடம்,  பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான சென்னை மக்கள், இந்த ஆண்டு பெரும் புயலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள். அடிக்கடி நடக்கும் இது போன்ற இயற்கைச் சீரழிவுகளிலிருந்து நம் வீட்டையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) எடுப்பதுதான்.

பொதுவாக, நாம் இரு சக்கர வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். நமக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ஆசையாகக் கட்டிய நம் வீடுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதே இல்லை. நம் வீட்டுக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது என்று நினைத்து நிம்மதியாக இருந்துவிடுகிறோம். ஆனால், வெள்ளமோ, புயலோ வந்தால்தான் நமக்குத் தெரிகிறது, நாம் எவ்வளவு பெரிய அபாயத்தைச் சந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று.    

வீட்டு உரிமையாளர் பாலிசி!

ஒவ்வொரும் கட்டாயம் எடுத்திருக்க வேண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முக்கியமானது வீட்டு உரிமையாளர் பாலிசி. வீட்டு உரிமையாளர் பாலிசியில் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டடத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் கவரேஜ் கிடைக்கும். இதில் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். 

மழை, புயல் போன்றவற்றால் வீடு இடிந்து விழுந்தால், பாதிக்கப்பட்டால் இழப்பீடு கிடைக்கும்.  இந்த பாலிசிக்கு, நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக்கும்.

இந்த வீட்டு உரிமையாளர் பாலிசி குறித்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் டி.ஏ.கேசவனிடம் பேசினோம்.

“நிறுவனங்கள் தீ விபத்து, திருட்டு என தனித்தனியாக பாலிசிகளை எடுக்க முடியும். நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. காப்பீட்டுத் தொகை அதிகம். நிறுவனங்கள் தனித்தனியாக பாலிசிகளை வைத்துக்கொள்ள முடியும். ஆனால், வீட்டுக்கு  தனித்தனியாக பாலிசிகளை எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு ஒருங்கிணைந்த பாலிசியாக வழங்கப்படுகிறது. பொதுவான வீட்டு உரிமையாளர் பாலிசியில் தீ விபத்துக்கான கவரேஜ் இருக்கும். வீட்டு உரிமையாளர் தீ விபத்துக்கான பாலிசியில் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பாலிசிகளை எடுத்துக்கொள்ளலாம். இதுவே வாடகை வீட்டில் வசிப்போர், வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள பாலிசி எடுக்க முடியும்.

தங்க நகைகள் வீட்டிலோ, வங்கி லாக்கரிலோ அல்லது வெளியே அணிந்து செல்லும்போது தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அதற்காகவும் காப்பீடு வழங்கப்படுகிறது. மின்சாரம், இடி, மின்னல் என இயற்கையாக ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் என எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனம் பாதிக்கப் பட்டாலும் அதற்கு இழப்பீடு கோரும் விதமாக பாலிசி வழங்கப்படுகிறது. இயற்கைச் சீற்றங்களினால் பாதிப்படைந்த வீட்டைச் சரி செய்ய மூன்று மாதம் ஆகும் எனில், அதுவரை, வேறு ஒரு வீட்டில் பாலிசிதாரர் வாடகைக்கு இருந்தால், அதற்கான வாடகை செலவையும் கிளெய்ம் செய்ய முடியும்.

எதற்கெல்லாம் கிளெய்ம் கிடைக்காது!

வீட்டு உரிமையாளர் பாலிசியில், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் கிளெய்ம் கிடைக்காது. ரூபாய் நோட்டுக்கள், சொத்துப் பத்திரங்கள்,  நிறுவனப் பங்குகளுக்கான சான்றிதழ்கள், பாண்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள், தங்க நகைகளில் சேர்க்காத வைரம் மற்றும் வைடூரியம், கல்விச் சான்றி தழ்கள், கடன் பத்திரங்கள் போன்றவை சேதம் அடைந்தால், திருடு போனால் வீட்டு உரிமையாளர் பாலிசியில் கிளெய்ம் கிடைக்காது.

எதற்கு கிளெய்ம் கோருகிறீர்களோ, அதற்கு இன்ஷூரன்ஸ் செய்து இருக்க வேண்டும். சிலர் வீட்டில் எல்லாப் பொருட்களையும் இன்ஷூரன்ஸ் செய்துள்ளேன் என்பார்கள். ஆனால், கிளெய்ம் சமயத்தில் டிவியை இணைக்க மறந்துவிட்டேன், காம்பவுன்ட் சுவரை சேர்க்க மறந்துவிட்டேன் என்று சொல்வார்கள். இந்தச் சூழ்நிலையில் டிவி, காம்பவுன்ட் சுவர் பாதிக்கப்பட்டால் கிளெய்ம் தரமாட்டார்கள்.

வீட்டில் தண்ணீர் தேங்கி இருந்தால் அல்லது தீ விபத்து போன்ற சம்பவங்களை  போட்டோவாக எடுத்து வைத்திருப்பது நல்லது. இது கிளெய்ம் கோரும்போது உதவும். ஏனெனில் சில இடங்களில் தண்ணீர் வடிந்த பிறகு, தண்ணீர் தேங்கி இருந்ததற்கான அடையாளம்  இருக்காது. ஆகையால், ஸ்பாட் போட்டோ எடுப்பது நல்லது. இதனை உங்கள் போனில் கூட எடுத்துக்கொள்ளலாம். 

இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

தங்க நகைகள் நீங்கலாக டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் இவையனைத்தும் உள்ள ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை பிரீமியம் இருக்கும். இது 30,000 ரூபாய் மதிப்புடைய டிவியை உள்ளடக்கிய தோராயமான வீட்டு உரிமையாளர் பாலிசி பிரீமியமாகும்.இதுவே டிவியின் மதிப்பு ரூ.3 லட்சம் எனில், பிரீமியம் அதிகமாக இருக்கும். தங்க நகைகளைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைக்கு ஆண்டுக்கு, ஆயிரம் ரூபாய் வரை பிரீமியம்” என்றார் அவர்.

நீங்களும் உங்கள் வீட்டை இன்றே பாலிசி செய்யத் திட்டமிடுவீர்!


கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

 

இயற்கை சீற்றங்கள் எப்போது வரும், எப்படி வரும் என்று யாருமே சொல்ல முடியாது. இவையனைத்தும் நம்மை ஒரே நாளில் நிர்கதியாக்கிவிடும். எனவே வீட்டு உரிமையாளர் பாலிசி எடுக்கும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் எனச் சொன்னார் கேசவன்.

*உங்கள் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இன்ஷூரன்ஸ் செய்துவிட்டீர்களா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*எந்தெந்த பொருட்களுக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதோ, அந்தப் பொருட்களுக்கான பில்களை வைத்திருப்பது நல்லது. நாளை ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அந்தச் சமயத்தில் இந்த பில்கள் உதவும்.  கிளெய்ம் செய்ய இவை உதவும்.

*சந்தை மதிப்பைப் பொறுத்து கிளெய்ம் கணக்கிடப்படும். அதாவது, ஒரு சேதம் ஏற்பட்டால் அந்தப் பொருளை புதிதாக வாங்கத் தேவைப்படும் விலை கணக்கில் கொள்ளப்படும். எனினும், சேதமடைந்த பொருளின் மீதான தேய்மானம் கணக்கில் கொள்ளப்பட்டு, புதிய விலையில் கழித்துக்கொண்டு மீதம் தரப்படும்.

*வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். கட்டடத்துக்கு எடுக்க முடியாது.

*வீட்டில் உள்ள ஒரே ஒரு பொருட்களை மட்டும் தனியாக இன்ஷூரன்ஸ் செய்யாமல், கூடுமானவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கும் சேர்த்து இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது.

Advertisements
%d bloggers like this: