Advertisements

தலைமைச் செயலரை சிக்க வைத்த சேகர் ரெட்டி! -கார்டனை அதிர வைத்த வாக்குமூலம்-விகடன்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டை குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. ‘ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்தே, தலைமைச் செயலாளரின் வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அரசின் அனுமதியோடுதான் அனைத்தும் நடக்கிறது’ என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்குப் பிறகு, பாரிமுனையில் தங்கமாக வாங்கிக் குவிக்கப்பட்ட கறுப்புப் பணம் பற்றிய தகவல்களை சேகரித்தது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. இந்த வளையத்தில் முதலில் சிக்கியவர் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த தங்க வியாபாரி பிரேம்குமார். அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி கால நண்பரான பிரேம் குமார் மூலமாகத்தான் தங்கக் கட்டிகளை வாங்கிக் குவித்தார் சேகர் ரெட்டி. இதையடுத்து டிசம்பர் முதல் வாரத்தில் சேகர் ரெட்டி, பிரேம் குமார் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத 130 கோடி ரூபாய் பணமும் 127 கிலோ தங்கமும்  பிடிபட்டது. அதை அப்படியே மீடியாக்கள் முன்பு காட்சிப்படுத்தினர். 

” சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமும் ஆவணங்களும் தமிழக அரசில் கோலோச்சுபவர்களின் அனைத்து விவகாரங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. தொடர்ந்து மூன்று நாட்கள் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினோம். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத்தான் தேடிப் போனோம். எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வீட்டிலேயே ஆவணங்களை வைத்திருந்தார் ரெட்டி. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அமைச்சர்களோடும் அரசுச் செயலர்களோடும் ரெட்டி நடத்திய பரிவர்த்தனைகளையும் ஆந்திர, கர்நாடகா வர்த்தக தொடர்புகளையும் அலசினோம். அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் அனைத்தும் சி.பி.ஐ கன்ட்ரோலுக்குச் சென்றுவிட்டது. அமலாக்கத்துறையின் துறையின் விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது. நாங்கள் கேட்பதற்கு முன்பே, ரெட்டி அனைத்து தகவல்களையும் கூறிவிட்டார்.

இதையடுத்து, தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்த, நிதித்துறை அமைச்சகத்தின் நேரடி வரிகள் விதிப்பு வாரியத்திடம் அனுமதி கேட்டோம். ‘ யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்ட வேண்டாம். எந்த இடத்தில் வேண்டுமானாலும் சர்ச் செய்யுங்கள்’ என உத்தரவிட்டனர். இதையடுத்தே, சி.எஸ் வீட்டிற்குச் சென்றோம். அவர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு என்பது பார்மாலிட்டிக்காக நடத்தப்பட்டது. சேகர் ரெட்டி வீட்டிலேயே அவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றிவிட்டோம்” என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில். 

” தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டை சோதனையிடச் செல்வது குறித்து, கார்டன் வட்டாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் சென்றது. இதற்கு சசிகலா தரப்பில் இருந்த எந்த எதிர்வினையும் காட்டப்படவில்லை. மன்னார்குடி உறவுகளோ, ‘ ராமமோகன ராவ் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் 9 மாதம் இருக்கிறது. மத்திய அரசு என்ன செய்கிறதோ, செய்துவிட்டுப் போகட்டும். சேகர் ரெட்டி அனைத்தையும் கூறிவிட்டார். இல்லாவிட்டால் இவ்வளவு வேகமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அவரை அவரே காப்பாற்றிக் கொள்ளட்டும்’ எனப் பேசியுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசம் காட்டியதன் விளைவாக, தலைமைச் செயலாளர் பதவியை எட்டிப் பிடித்தார் ராமமோகன ராவ். அடுத்த சில நாட்களில் முந்தைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மீது நடவடிக்கையும் பாய்ந்தது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான், வருமான வரித்துறையின் கவனத்திற்கு துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். அதற்கேற்ப, நூல் பிடித்தார்போல வருமான வரித்துறையின் ரெய்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேகர் ரெட்டி பிடிபட்ட பிறகு, தன்பக்கம் நடவடிக்கை பாயலாம் என்பதையும் ராமமோகன ராவ் எதிர்பார்த்தே காத்திருந்தார்” என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில். 

வருமான வரித்துறையின் ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ” இந்த ரெய்டின் மூலம் யார் அவமானப்பட்டாலும், நமக்குக் கவலையில்லை என மத்திய அரசு நினைக்கிறது. ஆளுங்கட்சியின் தொடர்புகள் மூலம் குவிக்கப்படும் லஞ்சப் பணம் குறித்து மக்களிடம் முன்வைப்பதற்காகவே இவ்வாறு நடத்தப்படுகிறது. பொதுப் பணித்துறையின் முக்கிய ஒப்பந்ததாரராக சேகர் ரெட்டி இருக்கிறார். அவருக்கு கார்டன் வட்டாரத் தொடர்பை உருவாக்கிக் கொடுத்ததில் தலைமைச் செயலருக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. ரெட்டிக்கு நெருக்கமான அமைச்சர்கள்; பிரேம் குமாரிடம் தங்கத்தை வாங்கிக் குவித்த அமைச்சர்கள் என அமலாக்கத்துறையின் பார்வை விரிவடைந்து கொண்டே போகிறது. இந்நிலையில், முதல் அமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் உதவியாளர் ரமேஷ் வீட்டிலும் ரெய்டு எனத் தகவல் பரவியது. சேகர் ரெட்டியின் தொடர்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் வீட்டில் மட்டுமே ரெய்டு நடக்கிறது. அடுத்து நடக்கப் போகும் ரெய்டு கிரீன்வேஸ் சாலையிலா? கார்டனுக்கு நெருக்கமான வட்டாரத்திலா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இதனால் கார்டனைச் சுற்றி வரும் அமைச்சர்கள் பலரும் கதிகலங்கிப் போய் உள்ளனர்” என்றார் விரிவாக. 

Advertisements
%d bloggers like this: