Advertisements

இப்போ வேலையில கவனம் செலுத்துங்க… பார்த்துக்கலாம்!” – ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடியின் நம்பிக்கை!

விசுவாசத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். சசிகலா முதல்வராவதற்கு அவர் வழிவிட வேண்டும்”. கடந்தவாரம் பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. ஆனால், இந்த வார்த்தைகளின் வெப்பம் குறைவதற்குள் தமிழகத்தின் அனைத்துக் காட்சிகளும் மாறிவிட்டன. பெரியகுளத்துக்காரருக்கான தலைமைச் செயலக பாதையை டெல்லி ஆட்கள் சரியாக்கி வருகின்றனர். அதன் தொடக்கமே முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட சோதனை. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொடர் சோதனைகளால் ‘ஆக்ட்டிங் சி.எம்’-யை, ‘ஆக்டீவ் சி.எம்’-ஆக மாற்றும் வேலையைத் தொடங்கியிருக்கிறது டெல்லி.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தமிழகத்தை டெல்லி மேகங்கள் சூழத் தொடங்கி விட்டன. ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவை எதிர்த்து வரும் பி.ஜே.பி, அவரை கட்சியை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா இறந்தபோது கூட ஒ.பி.எஸ்-தான் அடுத்த முதல்வர் என தேர்வு செய்ததே பி.ஜே.பி-தான். அதைத்தடுக்க நினைத்த சசிகலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மோடி, சசிகலாவை விடவும் பன்னீருக்குத்தான் அதிக ஆறுதல் கூறியதைக் காண முடிந்தது. ஆனால் திடீரென காட்சிகள் அனைத்தும் மாறி, சசிகலா பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என கட்சியின் நிர்வாகிகள், வலியுறுத்தத் தொடங்கி விட்டனர். இந்த நடவடிக்கை டெல்லி மேலிடம் சற்றும் எதிர்பார்க்காதது. அதுவரை தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து வந்த அதிகாரிகள், அதன்பிறகு சசிகலா விசுவாசிகளாக மாறத் தொடங்கியுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் ராம மோகனராவ். தமிழகத்தில் இவர் கைபடாமல் எந்த டெண்டரும் நகராது. சசிகலா கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருந்தால், தனது தொழிலுக்கு எந்த பாதிப்பும் வராது என நினைத்து மத்திய அரசுக்கு தகவல் கொடுப்பதை நிறுத்தினார் ராம மோகனராவ். தமிழக அரசியல் குழப்பம் காரணமாக, முழுமையாக அவரை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டதால் தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வராக ராம மோகனராவ் இயங்கி வந்தார். ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தாராம். அந்த உத்தரவும் காற்றில் பறக்க விடப்பட்டது. ஆளுநர் – முதல்வர் ஒ.பி.எஸ் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடந்து விடாமல் இருக்க, பன்னீரைச் சுற்றி சசிகலா, ராம மோகனராவின் ஆட்கள் அமர்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட ‘லாக்’ செய்யப்பட்ட நிலையில் இருந்தார் ஒ.பி.எஸ்.

‘வர்தா புயல்’ முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தலைமைச் செயலகத்தில் ஒ.பி.எஸ் அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஒருமணி நேரம் தாமதமாகவே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். பன்னீர் செல்வத்துக்கு முதல்வருக்கு உண்டான எந்த மரியாதையும் ராம மோகனராவ் உள்ளிட்ட 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அளிப்பதில்லை. முன்பு இருந்த காலம்வேறு தற்போதுநிலைமை வேறு என்பதை புரிந்துகொள்ளாத அதிகாரிகள் அவரை, ஒரு அமைச்சரைப் போலவே நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் ஒ.பி.எஸ் கூறிய சில கருத்துக்களை பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், கிண்டலடித்து பதில் சொல்லியிருக்கிறார். அதனால் மிகவும் நொந்துபோன ஒ.பி.எஸ் உடனடியாகக் களத்தில் இறங்கி புயல் நிவாரணப் பணிகளை நேரில் செய்யத் தொடங்கினாராம். நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்போன இடத்தில், முதல்வரின் எளிமையைப் பார்த்து மக்கள் பாராட்ட, மீடியாவும் முதல்வரின் சுறுசுறுப்பான பணிகளைப் பாராட்டி செய்திகளை வெளியிட்டன. இது சசிகலா குடும்பத்தினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சசிகலா உறவுகள் சிலர், ஒ.பி.எஸ்-யை நேரடியாகவே போனில் அழைத்துத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் சில அமைச்சர்களும் முதல்வருக்கு உரிய மரியாதை தருவதில்லையாம். அடுத்த முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என கூறுவதோடு இல்லாமல், ஒ.பி.எஸ் அதற்கு வழிவிட வேண்டும் என பொதுவெளியில் பேட்டி கொடுப்பது அ.தி.மு.க-வில் இதுவரை இல்லாத நடைமுறை. இதுபோன்ற செயல்கள் எல்லாம் பன்னீர் செல்வதை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் டிசம்பர் 17-ம் தேதியன்று தமிழக ஆளுநரிடம் பேசி, பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு முதல்வர் தரப்பில் கேட்கப்பட்டதாம்.

இதையடுத்து, டிசம்பர் 19-ம் தேதி திங்கள் கிழமை பிரதமரைச் சந்திக்கச் சென்ற முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்துடன், ராம மோகனராவ் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். பிரதமருடன் எதையெல்லாம் பேச வேண்டும்? எதை பேசக்கூடாது? என்பது உள்ளிட்ட அத்தனை விஷயங்களையும் முன்கூட்டியே பன்னீர் செல்வத்திடம் சொல்லி அழைத்துச் சென்று உள்ளனர் அதிகாரிகள். புயல் நிவாரண ஃபைல்களை பெற்றுக் கொண்டு, “வேறு என்ன விஷயம்?” என பன்னீர் செல்வத்தைப் பார்த்து பிரதமர் மோடி கேட்க. ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்து இருக்கிறார் ஒ.பிஎஸ். அதிகாரிகள் அனைவரையும் வெளியில் போகச் சொல்லிவிட்டு ஒ.பி.எஸ்-யுடன், பின்னர் தனியாகப் பேசியிருக்கிறார் மோடி. ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் அனைத்தையும் புலம்பி விட்டாராம் முதல்வர். “போய் ஒர்க்க பாருங்க..எல்லாம் சரி ஆகி விடும்” என நம்பிக்கையும், தைரியமும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் மோடி. தவிர, என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற அறிவுரையையும் ஒ.பி.எஸ்-யிடம் வழங்கினாராம் மோடி. பிரதமருடன், பன்னீர் செல்வம் ‘என்ன பேசினார்?’ என்பதை அறிய சசிகலாவும், ராம மோகனராவும் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லையாம். ஆனால், ‘சசிகலா மீது மோடி மிகுந்த கோபத்தில் உள்ளார்’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார் ஒ.பி.எஸ்.

அதன் பிறகே, ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்ததற்கு நன்றி’ என சசிகலா தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி, சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாராம். ஆனால் சசிகலாவின் நன்றி கடிதத்திற்கு டெல்லியில் இருந்தோ அல்லது தமிழக பி.ஜே.பி சார்பிலோ எந்த ரியாக்ஷனும் கொடுக்கப்படவில்லை. டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ஒ.பி.எஸ், இதுவரை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. இந்நிலையில் ராம மோகனராவ் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. தவிர, தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது, அங்கு இருந்த முதல்வர் பன்னீர் செல்வம், மத்திய அரசைக் கண்டித்து ஒருவார்த்தையும் கூறவில்லை. அமைதியாக இருந்து விட்டு மாலை 6 மணிக்கு ரெய்டு முடிந்த பிறகு கிளம்பிச் சென்றார்.

ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் மீது வருமான வரித்துறையினர் தொடங்கியுள்ள சோதனையின் தொடக்கம்தான் ராம மோகனராவ் வீட்டிலும், அலுவலகத்திலும் நடத்தப்பட்டது. இன்னும் 13 அதிகாரிகள் இந்த பட்டியலில் உள்ளனர். சசிகலா ஆதரவாளர்கள் என கருதப்படும் அனைவரையும் வெளியேற்றி விட்டு தனக்கு அடக்கமான ஒரு அரசை, தமிழகத்தில் நிறுவ சாட்டையைத் சுழற்றத் தொடங்கி விட்டது பி.ஜே.பி. இதில் யாருக்கு லாபமோ, நஷ்டமோ தெரியாது. ஆனால் இனி முதல்வர் பன்னீர் செல்வத்தின் ரூட் மட்டும் கிளீயர்!

Related Stories

‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா..!?’ என்ன…

  • 2 weeks ago

ஜெயலலிதா மரணமும்…ஒரு வாரத்தில் மாறிய…

  • a week ago

‘ரமணா’ விஜயகாந்த் போல செயல்பட்டாரா ராம மோகன ராவ்?…

  • 9 hrs ago

QUICK ACCESS

OTHERS

BACK TO TOP

Dailyhunt (NewsHunt)

  • Free – In Google Play

VIEW

Advertisements
%d bloggers like this: