Advertisements

ரிலையன்ஸ் ஜியோ வழி போக்கமான் கோ

பன்னாட்டளவில் மிகப் பிரபலமாகவும், தனித்தன்மையுடனும் விளையாடப்படும் போக்கமான் கோ கேம், இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இதனை வடிவமைத்து வெளியிட்டுள்ள நியான்டிக் நிறுவனம், இந்தியாவில் இதனை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இனி, ஆயிரக்கணக்கான ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ் மற்றும் அதன் கூட்டு நிறுவன மையங்கள், இந்த விளையாட்டில் கையாளப்படும் “போக் பந்துகள்” தரப்படும் இடங்களாகச் செயல்படும்.
அத்துடன், ஜியோ சேட் அப்ளிகேஷனில் புதியதாக, “போக்கமான் கோ” என்ற சேனல் ஒன்று இயங்கும். இந்த சேனல் மூலம், இந்த கேம் விளையாடும் ஒருவர், இதனை விளையாடும் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு, நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் விளையாட முடியும். ஏற்கனவே, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள், வரும் மார்ச் 31 வரை டேட்டா கட்டுப்பாடின்றி இலவசமாக ஜியோ சிம் பயன்பாட்டினை மேற்கொள்ள முடியும் என்பதால், அவர்கள் அனைவரும் போக்கமான் கோ விளையாட்டில் ஈடுபட்டு அதன் அடிமைகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம். போக்கமானைப் பிடிக்கும் வேலையில் இவர்கள் தீவிரமாகச் சாலைகளில், பூங்காக்களில் இந்த விளையாட்டின மேற்கொள்வதனைப் பார்க்க முடியும்.
ஏற்கனவே இந்த விளையாட்டில் உள்ள கேரக்டர்களுடன், தற்போதுள்ள வந்துள்ள இந்த கேமின் மேம்பாட்டில், ‘டோகபி’ மற்றும் ‘பிச்சு’ என இரண்டு கேரக்டர்கள் அறிமுகமாகியுள்ளன. தற்போது வர இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தினையொட்டி, ‘பிக்காச்சு’ என்னும் விழாக்கால தொப்பி அணிந்த ஒரு கேரக்டரை அறிமுகம் செய்திட, நியான்டிக் நிறுவனம் முயன்று வருகிறது.
போக்கமான் கோ விளையாட்டினை ஆண்ட்ராய்ட் இயக்க ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள், https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo&hl=en என்ற முகவரியிலும், ஐபோன் வைத்திருப்பவர்கள், https://itunes.apple.com/gb/app/pokemon-go/id1094591345?mt=8 என்ற முகவரியிலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இதனை இந்தியாவில் அறிமுகம் செய்த விழாவில் பேசிய, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் மேத்யூ ஓமன் கூறுகையில், “பன்னாட்டளவில், 50 கோடிப் பேருக்கு மேல், தரவிறக்கம் செய்து விளையாடும் போக்கமான் கோ விளையாட்டினை, ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்வது பெருமையான ஒரு நடவடிக்கையாகும்.
இந்த கேம் இந்தியாவில் வருவதற்கு ரிலையன்ஸ் ஜியோ நல்லதொரு வழியைத் தருகிறது என்பதோடு, ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் ஒன்றை வழங்குகிறோம் என்பதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார்.
ரிலையன்ஸ் ஜியோ ஒரு தொலை தொடர்பு நிறுவனம் அல்ல; பல டிஜிட்டல் தளங்களை உருவாக்கி, மக்கள் விரும்புபவற்றைத் தரும் நிறுவனமாக இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதே போல, மக்கள் விரும்பும் பல விஷயங்களை டிஜிட்டல் வடிவில் ரிலையன்ஸ் ஜியோ தரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விளையாட்டு அறிமுகமாகிய சில நாட்களிலேயே, ஒருவகையான ஜூர வேகத்துடன் மக்கள் இதனை விளையாடினர். ஜி.பி.எஸ். எனப்படும் சாட்டலைட் தொழில் நுட்பம் மூலம், நாம் இருக்கும் இடத்தினைக் கண்டறிந்து, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் திரையில், நம்மைச் சுற்றியுள்ள இடங்கள் காட்சியாகக் காட்டப்படுகின்றன. நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் காட்சித் தோற்றங்களுடன், டிஜிட்டல் வழியாக உருவாக்கப்பட்ட காட்சிகள், இந்த விளையாட்டில் இணைத்துத் தரப்படுகின்றன. இதனை, ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா, அதில் கிடைக்கும் கூகுள் மேப் மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் உதவியுடன் இந்த உருவங்களைத் தேடிக் கண்டுபிடித்து கைப்பற்றுவதுதான் இந்த விளையாட்டு. நாம் விளையாட்டினைத் தொடங்கும்போது உருவாக்கப்பட்ட உருவம், நாம் நடக்கும்போது நம்முடன் நடக்கிறது. பின், குறிப்பிட்ட இடத்தில், சில கதாபாத்திரங்கள் டிஜிட்டல் வழியில் உருவாக்கப்பட்டு, அவற்றை நாம் பிடிப்பதற்கான வழிகளும் தரப்படுகின்றன. இவற்றைப் பிடிப்பதே, இந்த விளையாட்டின் சுவாரஸ்யம்.
அமெரிக்காவில் ஜூலை 6ல் இது வெளியானது. அன்றே, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளிலும் அறிமுகமானது. மறு நாள், பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வெளியானது.
தற்போது 31 நாடுகளில் இந்த கேம் தரவிறக்கம் செய்து விளையாடக் கிடைக்கிறது. அமெரிக்காவில் வெளியாகி ஒரு வார காலத்திலேயே, இதனை விளையாடுபவர்கள் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டியது. தொடர்ந்து உயர்ந்து கொண்டும் உள்ளது. தரவிறக்கம் செய்தவர்கள் எண்ணிக்கை 50 கோடிக்கும் மேல். இந்தியாவில் தற்போது இது அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த விளையாட்டினை அலுவலகத்தில், வீட்டில் உள்ளே இருந்து விளையாட முடியாது. ஹெட்போனை மாட்டிக் கொண்டு, வீதியில் சென்றால், விளையாட்டின் அடுத்த நிலைகளுக்குச் செல்லலாம். எப்போதும் போனின் திரையைப் பார்த்துக் கொண்டு, திரை காட்டும் காட்சிகள், டிஜிட்டல் உருவங்களைப் பார்க்க வேண்டியதிருப்பதால், சாலைகளில் இவற்றைத் தேடுகையில் நாம் விபத்துக்களை அதிகம் சந்திக்க வேண்டியதுள்ளது. இருந்தாலும் மக்கள் இதனைத் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
போக்கமானைப் பிடிப்பது எப்படி?
‘போக்கபால்’ எனப்படும் பந்து ஒன்று உங்கள் நண்பனாக உங்களுக்கு வந்து சேரும். அதனைக் கிளிக் செய்து பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். போக்கமானைச் சுற்றி பச்சை நிறத்தில் வட்டம் ஒன்று கிடைக்கும் வரை காத்திருக்கவும். அப்போது உங்களிடம் உள்ள பந்தை எறிந்து போக்கமானைப் பிடிக்க வேண்டும். பந்து சரியாக எறியப்படாவிட்டால், போக்கமான் ஓடி மறைந்துவிடும். எனவே, சரியாகப் பந்தினை எறிய வேண்டும்.
இவ்வாறு பிடிக்கப்படும் போக்கமான்கள் குறித்து, Pokedex என்பதில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதில் ஒன்றில் கிளிக் செய்தால், அதன் உருவம், எடை, உயரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பிடித்து வைத்துள்ள போக்கமான்களின் எண்ணிக்கைக்கேற்ப, நீங்கள் விளையாடும் நிலை உயரும். உங்களிடம் உள்ள போக்கமான் உங்களுக்குத் தேவை இல்லை என்றால், அதனை Professor ஒருவருக்கு அனுப்பலாம். அவர் அதற்குப் பதிலாக போக்கமான் மிட்டாய் (Candy) ஒன்று தருவார். இதனுடன் போக்கமான் பிடித்தற்காக, Stardust வெற்றியின் அடையாளமாகத் தரப்படும்.
ஆனால், தற்போது பலர் இதனைத் தொடர்ந்து விளையாடாமல் விட்டுவிட்டனர். இந்தியாவில், முன்பு குறிப்பிட்டது போல, ரிலையன்ஸ் ஜியோ இலவச இணைய இணைப்பினை மார்ச் மாதம் வரை தருவதால், இந்த விளையாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
%d bloggers like this: