Advertisements

தேவை ஒரு குடும்ப மருத்துவர்!

ழைய திரைப்படங்களில் ஒரு காட்சி யைப் பார்த்திருப்பீர்கள். உடல்நிலை சரியில்லாதவரை ஒரு மருத்துவர் வீடு தேடிவந்து பரிசோதித்து, ஊசி போட்டுவிட்டுப் போவார். முன்பெல்லாம் பொது மருத்துவர்கள் அதிகம் இருந்த காலம் அது. வீட்டுக்கு ஒரு மருத்துவர் இருப்பார். நாம் அவரை ‘ஃபேமிலி டாக்டர்’ என்போம். அவருக்கு அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் உடல்நிலை பற்றியும் முழுமையாகத் தெரிந்திருந்தது. அதனால், அவர்கள்

நோய்வாய்ப்படும்போது அவர்களுக்கு எது அலர்ஜி, என்ன பிரச்னை என முன் உணர்ந்து சிகிச்சை தர முடிந்தது. இன்று நிலைமை அப்படி இல்லை. மருத்துவ விஞ்ஞானம் வளர வளர எங்கும் துறைசார்ந்த சிறப்பு மருத்துவர்கள். ஒவ்வோர் உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவர். மக்களும் கண்கள் சிறிது சிவந்திருந்தால்கூட நேராக கண் மருத்துவரைப் பார்க்கச் செல்கின்றனர். லேசான தலைவலி என்றால்கூட நரம்பியல் மருத்துவரை நோக்கிப் படை எடுகின்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன் என்று பர்ஸைப் பழுக்கவைத்துவிட்டு “உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இது சாதாரணப் பிரச்னைதான்” என்று மருத்துவர் சொன்னதும், “காசுக்குப் பிடிச்ச கேடு… நமக்கு நேரம் சரி இல்லை” எனப் புலம்பித் திரும்புகிறார்கள்.
பொது மருத்துவரும் சிறப்பு மருத்துவரும்
மேற்கத்திய நாடுகளில் இன்றும் பொது மருத்துவரின் சேவைதான் பிரதானமானது. அவர்கள் அந்த அமைப்பை இன்னும்கூட கறாராகப் பேணிவருகிறார்கள். அதாவது, ஒருவர் என்ன பிரச்னை என்றாலும், தன்னுடைய மருத்துவரைச் சந்தித்துதான் முதலில் ஆலோசனை பெற வேண்டும். அவர் பரிந்துரைத்தால்தான் சிறப்பு மருத்துவரைச் சந்திக்க முடியும். ‘ப்ரைமரி ஒபினியன்’ என்னவென்று தெரிந்தகொண்ட பிறகு ‘ஸ்பெஷாலிட்டி ஒபினியன்’ என்னவென்று நாடுவதுதான் நல்லது. இது குறித்த விழிப்புஉணர்வு மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது நம்மிடம் சுத்தமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நோய் நாடும் முறை
பொதுவாக, நோயைக் கண்டறிய, நோயாளி நோய் குறித்துச் சொல்லும் வாய்வழித் தகவல்களோடு நோயாளியின் தற்போதைய ஆரோக்கிய நிலை (Present health history), கடந்தகால ஆரோக்கிய நிலை (Past health history) ஆகியவற்றோடு குடும்ப ஆரோக்கியநிலை (Family health history), குடும்ப வரலாறு (Family history) ஆகியவற்றையும் தெரிந்துவைத்திருப்பது மருத்துவத்துக்கு மிகவும் நல்லது. இவை அனைத்தையும் தெரிந்துகொண்ட பிறகு தேவையான உடல் பரிசோதனைக்குச் சென்றால் மருத்துவ சிகிச்சை, மிகுந்த பயன் உடையதாக இருக்கும். ஆனால், இன்றைய நடைமுறையில் நோயாளியைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில் நோயாளி சொல்வதை வைத்து, நேரடியாக உடல் பரிசோதனைக்குப் பரிந்துரைக் கிறார் மருத்துவர். இது தவறு இல்லை என்றாலும், சில சமயங்களில் முழுமையான சிகிச்சை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது.
குடும்பம் எனும் அமைப்பு
நம் நாட்டில் குடும்ப அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்குமான பிரத்தியேகமான உணவுப்பழக்கங்கள், வாழ்க்கைமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட வாழ்க்கை முறை உள்ள குடும்பங்களில் குறிப்பிட்ட நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் குடும்ப மருத்துவர் என்ற அமைப்பு இருக்கும்போது, நோயாளியின் உடலைப் பற்றிய முழுமையான புரிதல் இருக்கும். இதனால், என்ன பிரச்னை என மேலதிகத் துல்லியமாக திட்டமிட முடியும்.    
குடும்ப மருத்துவர் இருப்பதன் நன்மைகள்…
1.ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நிலை குறித்தும் அவருக்கும் தெரிந்திருக்கும் என்பதால், நோயின் அறிகுறிகளை வைத்தே என்ன நோய் என அவரால் ஓரளவு அனுமானிக்க முடியும்.
2.தேவையற்ற பரிசோதனைகளைத் தவிர்ப்பதன் மூலம் நேர விரயம், பண விரயம் தடுக்கப்படுகின்றன.
3.மருத்துவருக்கும் நோயாளிக்குமான தனிப்பட்ட நல்லுறவு பேணப்படுவதால், நோயாளியால் தயக்கமின்றி தன் பிரச்னைகள் பற்றி மருத்துவரிடம் விவாதிக்க முடிகிறது.
4.நோயின் தன்மை, நோய்க்கான காரணம், தேவைப்படும் சிகிச்சை போன்ற அனைத்தும் குறித்த நம்பகத்தன்மையும் உண்மைத்தன்மையும் மேம்படுகின்றன.
5.தேவையற்ற சிகிச்சைகள் தவிர்க்கப்படுவதால், தவறான சிகிச்சைகளின் பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதோடு, நோயாளியின் வாழ்க்கைத்தரம், ஆரோக்கியம் உயர்கின்றன.
தொழில்நுட்பம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் என்னதான் முன்னேற்றம் ஏற்பட்டாலும் நோயாளி – மருத்துவர் இடையேயான உறவு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சாியான சிகிச்சை என்பது சாத்தியமாகும். இதற்கு, இருவருக்கும் இடையேயான தொடர்பு நீண்டகாலமானதாக இருக்க வேண்டும். ஆரம்பநிலையிலேயே நோயைக் கண்டறியவும் அவசர சிகிச்சைக்கும் ஃபேமிலி டாக்டர் கட்டாயம் தேவை.

Advertisements

One response

  1. நமக்கு நாமே வைத்தியர்

%d bloggers like this: