Advertisements

அதிக தங்கம் வைத்திருந்தால் ஆபத்தா?

விஷயம் தெரியுமா… கல்யாணம் ஆன பொண்ணுங்க, வீட்ல 500 கிராம் தங்கம்தான் வெச்சிருக்க முடியுமாம். கல்யாணம் ஆகாதவங்க 250 கிராமும், ஆண்கள் 100 கிராமும் வெச்சிருக்க முடியும்னு நியூஸ் வந்துச்சே… கவனிச்சியா?’’

‘`என்னது… 500 கிராம்தானா? அப்போ 62.5 சவரன் நகைதான் வீட்ல இருக்கணுமா? எங்க அப்பா என் கல்யாணத்துக்கு 50 பவுன் போட்டாரு. என் மாமியாரு 20 பவுன் கொடுத்திருந்தாங்க. எங்க வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்த நகை, நான் பணம் சேமிச்சு வாங்கின நகைனு மொத்தமா எங்கிட்ட இருக்கிற நகையெல்லாம் சேர்த்தா 200 பவுன்கிட்ட இருக்குமே… இனிமே இதெல்லாம் போட்டுக்கிட்டுப் போக முடியாதா?’’

இந்தியாவில் வாழும் தனிநபர், வரிசெலுத்த அவசியம் இல்லாத வரம்புக்குள் தன்னிடம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என சமீபத்தில் மீடியாக்களில் பரவியதே… அந்தச் செய்திகளால் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்த சந்தேகங்கள்தான் இவை!

அப்படி என்றால், ஒரு தனிநபரின் தங்க இருப்பு வரம்பு இதுதானா? இதற்கு மேல் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது? கறுப்புப் பணம், தங்கம் குறித்த பேச்சுகளும் வருமான வரித்துறை ரெய்டுகளும் செய்திகளில் நிறைய அடிபடுகிறதே… இப்படி பல சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார் நிதிஆலோசகர் சா.ராஜசேகரன்.

கறுப்புப் பணம் என்பது என்ன?

“ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தை மறைத்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமானவரியைச் செலுத்தாமல், வருமானம் முழுவதையும் தானே வைத்துக்கொள்வாரேயானால், அதுதான் கறுப்புப் பணம். இது பணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உரிய வருமானவரி செலுத்தப்படாமல் வைத்திருக்கும் நகை, சொத்து எல்லாமே கறுப்புப் பணமே!

யாரெல்லாம் வரி செலுத்த வேண்டும்?

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக ஈட்டக்கூடிய  ஒவ்வொரு வரும் வரி செலுத்த வேண்டும். இன்சூரன்ஸ், வீட்டுக் கடன், மருத்துவக் காப்பீடு, குழந்தைகள் கல்விக் கட்டணம், வரிவிலக்கு உள்ள முதலீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட வருமானவரி விலக்குகளுக்கு உட்பட்ட காரணங்களுக்கான தொகைக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ஒரு நபரின் மாத வருமானம் 30 ஆயிரம் எனில், அவரின் ஆண்டு வருமானம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய். இந்த வருமானத்தில் கல்விக் கட்டணம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட மேற்கண்ட காரணங்களுக்காக செலவு செய்த தொகை ரூபாய் 60 ஆயிரம் (வரிச்சலுகைக்கு உட்பட்டு 80C, 80D  உட்பட்டு) போக, அவரிடம் 50 ஆயிரம் ரூபாய் வருமான வரிக்கு உட்பட்டு இருக்கிறது என்றால், அந்த 50 ஆயிரத்துக்கு 10%  என்கிற அளவில் 5 ஆயிரம் ரூபாயை வருமான வரியாகச் செலுத்த வேண்டும். அந்த 5 ஆயிரம் ரூபாயை அவர் வரியாக அரசுக்குச் செலுத்த விரும்பாமல், தன் வருமானத்தை மறைத்தால், அந்தப் பணம் கறுப்புப் பணமாகிறது. வருமானம் மற்றும் வயதைப் பொறுத்து செலுத்த வேண்டிய வரி விகிதம் மாறுபடும்.

வருமானம் ஈட்டிய ஆண்டை முந்தைய ஆண்டு (Previous year) என்றும், அதற்கு அடுத்த ஆண்டை Assessment year என்றும் சொல்வார்கள். முந்தைய ஆண்டு சம்பாதித்த கணக்குகளை, அதற்கு அடுத்த ஆண்டான அசெஸ்மென்ட் ஆண்டில் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது ஏப்ரல் 1, 2015 முதல் மார்ச் 31, 2016 வரை முந்தைய ஆண்டு என்றால், ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2017 என்பது அசெஸ்மென்ட் ஆண்டாக இருக்கும்.

ஒருவர் சட்டத்துக்கு உட்பட்டு, வருமான வரித்துறையின் விதிகளுக்கு உட்பட்டு, காப்பீடு, வீட்டுக்கடன் போன்ற செலவுக் கணக்கு சமர்ப்பித்து, தனக்கான வரியைக் குறைப்பது வரி திட்டமிடல் (Tax Planning) எனப்படும். அதே நேரத்தில் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில், பினாமி பெயர்்களில் சொத்து வாங்குவது, வரு மானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்குவது போன்ற குறுக்குவழிகள் மூலம் வரியைக் குறைத்துச் செலுத்தும் முறை, வரி ஏய்ப்பு (Tax Evasion) எனப்படும். இந்த வரி ஏய்ப்பு முறை, நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும்.

தங்கம் வைத்திருப்பதில் சிக்கல் உண்டா?

இந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்தப் புதிய கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.வருமான வரிச் சட்டத்தின்படி விதியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள கட்டுப்பாடுகள் நீடிப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனவே, திருமணமாகாத, ஆன ஆண், பெண்களுக்கான தங்க இருப்பு என சமீபத்தில் செய்திகளில் வந்தது, அரசின் புதிய அறிவிப்பு அல்ல.

திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 62.5 சவரன் (500 கிராம்) தங்கமும், மண மாகாத பெண்கள் 31.25 சவரன் (250 கிராம்) தங்கமும் வைத்திருக் கலாம். ஆண்கள் 12.5 சவரன் (100 கிராம்) வரை தங்கம் வைத்திருக்கலாம். இந்த அளவுக்கு அதிகமாக தங்க இருப்பு வைத்திருப்பவர்கள், அதை வாங்குவதற்காக அவர்களின் வருமானம் மூலம் செய்த செலவுக் கணக்கை வருமான வரித் துறைக்குச் சமர்ப்பித்து, உரிய வரியை செலுத்தி, எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கு வருமானவரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை சோதனையின்போது கணக்கில் காட்டாத, வரிசெலுத்தாத தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் கூடுதல் தங்கத்துக்கு வரி விதிக்கப்படும். சரியான விளக்கம் அளிக்கப்பட்டு வரி கட்டப்பட்டிருந்தால் எந்த வரியும் கட்டத் தேவை இல்லை. அதனால் அச்சப்பட தேவையில்லை!

பெண்களின் சேமிப்பு இனி எப்படி இருக்கலாம்?

பொதுவாக ஆண்களைவிட பெண்களே சேமிப்புப் பழக்கம் அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் உண்டியலில் சேமிப் பது, பாதுகாப்பற்ற சீட்டுகளில் இணைவது, தங்க நகை வாங்குவது  உள்ளிட்ட சேமிப்பு வழிகளில் ஈடுபடுவார்கள். இதனால் குறுகிய பலன்களையே பெற முடிவதோடு, அவை பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன.

 

சேமிக்க விரும்பும் பெண்கள், நிதி ஆலோச கரின் ஆலோசனையுடன் மியூச்சுவல் ஃபண் டில், நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நல்ல வருனமானத்துடன்  பயன்பெற முடியும். மொத்தப் பணத்தையும் வங்கியில் மட்டுமே அல்லாமல், தங்கம் மற்றும் நிலத்தில் முதலீடு செய்வது என பிரித்துச் சேமிப்பதும் நல்லது. கல்விக்கட்டணம், வீடு, வாகனம் வாங்குவதாக இருந்தால் வங்கிக் கடன் மூலம் அவற்றைப் பூர்த்தி செய்துகொள்வது வருமான வரியைக் குறைக்கும் இன்னொரு வழி!”

Advertisements
%d bloggers like this: