நகலெடுத்து ஒட்டுவதில் புதிய வசதிகள்

விண்டோஸ் 10 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில் நமக்குப் பல வசதிகளையும் பயன்களையும் தரும் ஒரு செயல்பாடு, ‘நகலெடுத்து ஒட்டுவது’. இந்த செயல்பாட்டில், இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருவதற்குப் பல செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அதற்கு முன், நகலெடுத்து ஒட்டுகையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

நீங்கள் டெக்ஸ்ட் அல்லது ஒரு படத்தை நகலெடுக்கையில் (Copy text or image) அது உடனே, நேராக, ‘கிளிப் போர்டில்’ சென்று அமர்ந்து கொள்கிறது. மீண்டும் அதனை எந்த செயலியில் ஒட்டினாலும், அடுத்து இன்னொரு டெக்ஸ்ட் அல்லது படத்தை நகலெடுக்கும் வரையில், மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் வரை, கிளிப் போர்டிலேயே தான் இருக்கும். எனவே, கிளிப் போர்ட் என்பது ஒரு தற்காலிகத் தேக்ககம். பயனாளர் ஒருவர், கம்ப்யூட்டரின் எந்த செயலியின் ஓர் இடத்திலிருந்து, படம் அல்லது டெக்ஸ்ட்டினை நகல் எடுத்து, இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்று ஒட்டுவது வரை, அதனைத் தேக்கி வைக்கும் இடம் இது.
வேர்ட் 2007 மற்றும் அதன் பின் வந்த இந்த செயலியின் பதிப்புகளில், கிளிப் போர்ட் தனியே காட்டப்பட்டு, அதில் நகலெடுத்த அனைத்தும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். நாம் எதனை ஒட்ட வேண்டுமோ, அதில் கிளிக் செய்தால், அந்த டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டிக் கொள்ளும்.
இதற்கும் மேலாக சில வசதிகளைப் பெற, இணையத்தில் பல Clipboard managers செயலிகள் கிடைக்கின்றன. ஆவணங்களை உருவாக்குபவர்கள், அடிக்கடி Copy/Cut/Paste செயல்பாடுகளில் ஈடுபட்டால், கூடுதல் வசதி தரும் இந்த கிளிப் போர்ட் செயலிகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில செயலிகளையும் அவை தரும் கூடுதல் வசதிகளையும் இங்கு காணலாம்.
கிளிப் போர்ட் ப்யூஷன் (ClipboardFusion)
இது ஓர் எளிய செயலி; ஆனால், மேம்படுத்தப்பட்ட பல வசதிகளை இது தருகிறது. குறிப்பாக, ஒன்றை இங்கு குறிப்பிடலாம். குறிப்பிட்ட செயலி ஒன்றில் இருந்து, காப்பி செய்து, இன்னொரு செயலிக்குக் கொண்டு செல்கையில், எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்குள்ள வடிவமைப்பு மற்றும் சில சிறப்பு அம்சங்களும் உடன் செல்லும். இது இன்னொரு வகை செயலியில் ஒட்டுகையில், அதனுடன் ஒத்திசைந்து அமையாமல், பிரச்னைகள் ஏற்படலாம். ‘கிளிப் போர்ட் ப்யூஷன்’ இந்த சிக்கலைத் தீர்த்து வைக்கிறது. இதில் காப்பி செய்திடுகையில், டெக்ஸ்ட்டினை மட்டும் எந்தவிதமான வடிவமைப்பு பண்புகள் இல்லாமல் எடுத்துக் கொடுக்கிறது. இதனால், வேறு எந்த செயலியின் கோப்பிலும் அவ்வாறு காப்பி செய்யப்பட்டதனை ஒட்டலாம். இது தரும் இன்னொரு சிறப்பு வசதி Text Replace ஆகும். இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட் உள்ள இடத்தில், காப்பி செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை ஒட்டச் சொல்லி அமைக்கலாம். குறிப்பிடப்படும் அனைத்து இடங்களிலும், நகலெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒட்டப்படும். இதில் உள்ள Preview என்னும் வசதி மூலம் கிளிப் போர்டில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள படத்தின் தோற்றத்தினை அறியலாம். இதனை இணையத்தில் https://www.clipboardfusion.com/Download/ என்ற முகவரியில் இலவசமாகப் பெறலாம்.
டிட்டோ (Ditto)
பயன்படுத்துவதற்கு எளிமையான இடைமுகத்துடன் கிடைக்கும் ‘க்ளிப் போர்ட்’ செயலி ‘டிட்டோ’. நீங்கள் காப்பி செய்த டேட்டாவினை வரிசையாகப் பெற, ஒரே ஒரு கீயை அழுத்தினால் போதும். பயன்படுத்திய டேட்டாவினை இன்னொரு கீயை அழுத்தி மீண்டும் பெறலாம். நகலெடுத்த டேட்டா வரிசையில், உங்களுக்கு வேண்டிய டேட்டாவினைத் தேடிப் பெற தேடல் கட்டம் ஒன்றும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. நெட்வொர்க் வழியாக, இதன் டேட்டாவினைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்போது அவை மறை குறியாக்க (encryption) முறையில் அனுப்பப்படும். பல கம்ப்யூட்டர்களின் டிட்டோ டேட்டாவினை, ஒருங்கிணைத்துக் காணவும் இந்த செயலி வழி தருகிறது. இந்த க்ளிப் போர்ட் மேனேஜர் செயலி, மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக் கொண்டு செயலாற்றுகிறது. இதனைப் பெற http://ditto-cp.sourceforge.net/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
க்ளிப் க்யூப் (ClipCube)
இலவசமாகக் கிடைக்கக் கூடியதும், பயன்படுத்தப்படுகையில் மிக மிகக் குறைந்த இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதுமான இன்னொரு செயலி “க்ளிப் க்யூப் (ClipCube)”. இதனை இயக்குகையில் இது காட்டும் காட்சித் தோற்றமும் இடைமுகமும் மிகச் சிறப்பாக உள்ளது. இதில் தேக்கி வைக்கப்பட்டு நாம் காப்பி செய்த டேட்டாக்களின் எண்ணிக்கை 2000க்கும் மேலாகவே கிடைக்கும் என்பது ஓர் அரிய தகவல். க்ளிப் போர்ட் மேனேஜர் செயலியாக மட்டுமின்றி, இதனை சிறு குறிப்புகள் அமைக்கவும் பயன்படுத்தலாம். இது முன்னர், Clipbox என அழைக்கப்பட்டது. http://zodcode.com/clipcube/ என்ற இணைய தளத்திலிருந்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
க்ளிப் போர்ட் மாஸ்டர் (Clipboard Master)
நமக்குக் கிடைக்கக் கூடிய க்ளிப் போர்ட் மானேஜர் செயலிகள், அதிக வசதிகளைத் தரக்கூடிய, மிகப் பயனுள்ள செயலி இது. டெக்ஸ்ட், பைல் மற்றும் படங்களை காப்பி செய்து, மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. இதில், 10,000 டேட்டா வரை தேக்கி வைத்துப் பயன்படுத்தலாம். இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டேட்டா தேக்கி வைக்கப்படுவதால், அவற்றைப் பிரித்து எடுத்துத் தேவையானதைப் பெற வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வகை டேட்டா அல்லது படம் எனப் பிரித்து அறியலாம். இதில் டேட்டாவினைப் பாஸ்வேர்ட் மூலம் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். கூடுதலாகப் பாதுகாப்பு வேண்டும் என்றால், அனைத்து டேட்டாவிற்குமாக, ஒரு மாஸ்டர் பாஸ்வேர்ட் உருவாக்கி வைக்கலாம். இதன் மூலம் டேட்டா மறைமுக குறியாக்கம் மூலம் ரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. பாஸ்வேர்ட் இருப்பதனால், டேட்டாவினை எளிதாகத் திரும்பப் பெற்றுப் பயன்படுத்த முடிகிறது. இதனாலேயே, இணையத்தில் கிடைக்கின்ற க்ளிப் போர்ட் மேனேஜர் செயலிகளில், இது மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://www.clipboardmaster.com/download/download.html.
மேலே குறிப்பிட்டவற்றுடன், இன்னும் சில க்ளிப் போர்ட் மேனேஜர் செயலிகள் இணையத்தில் உள்ளன. ஆனால், இவை குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வித்தியாசமான வசதிகளைக் கொண்டிராமல், வழக்கமான தேக்கக செயல்பாட்டினையும், ‘கட் அண்ட் பேஸ்ட்’ செயல்பாட்டினையுமே கொண்டுள்ளன. அவை: Ethervane Echo, ShapeShifter, Save.me, Ars Clip, Clipjump, CLCL மற்றும் ClipTray. கூடுதல் வசதிகள் வேண்டுமாயின், முதலில் சொல்லப்பட்டவற்றில், உங்களுக்கு எளிமையாகத் தோன்றுவதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

%d bloggers like this: