ஊட்டியில் இலவச வைபி ஸ்டேஷன்

ஊட்டி என அழைக்கப்படும் உதக மண்டலம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வை பி இணைப்பு வழங்கப்படும் வசதி அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதிக மக்கள் வந்து போகும் 400 ரயில் நிலையங்களில், இலவசமாக இணைய இணைப்பினைப் பொது மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை கூகுள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனுடன் கை கோத்துச் செயல்படுவது, இந்திய ரயில்வேயின் ‘ரெய்ல்டெல்’ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனமாகும்.

இலவச வை பி வசதி பெறும் ஊட்டி, இத்திட்டத்தில் நூறாவது ரயில்வே ஸ்டேஷனாகும். இந்த நூறு ரயில் நிலையங்களில், ஏறத்தாழ ஒரு கோடி பேர் இலவச இணைய இணைப்பினைத் தங்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு 30 நிமிடங்கள் பயன்படுத்த இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் தொடர்ந்து இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 லட்சமாகும். ஒவ்வொரு நாளும், புதியதாக இந்த நெட்வொர்க்கில் இணைந்து இணையத்தைப் பயன்படுத்துவோர் 15 ஆயிரம் பேர். இந்த தகவல்களை, ஊட்டியில் இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்த விழாவில், கூகுள் இந்தியா நிறுவன அலுவலர் ஆசாத் தெரிவித்தார்.
ஜெய்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இந்த வசதியைப் பயன்படுத்தும் பயனாளி ஒருவர் தான் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை, ரயில்வே ஸ்டேஷனுக்கு இந்த இலவச இணைய இணைப்பைப் பெறுவதற்காகவே வருவதாகவும், அப்ளிகேஷன்களையும் மற்றும் தன் மகள் படிப்பிற்கு வேண்டியவற்றை டவுண்லோட் செய்து செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில், இணைய இணைப்பினைத் தங்களுக்கென இல்லாதவர்களுக்கு, இந்த ரெயில்வே ஸ்டேஷன் வசதி உற்ற துணையாக உள்ளது. இது நிச்சயமாக, இந்திய மக்களிடையே ஒரு திருப்பத்தை உண்டாக்கும்.

%d bloggers like this: