Advertisements

ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? – கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ்-விகடன்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையில் உண்மையிலேயே பிரச்னையா எனத் தொண்டர்கள் கேட்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ‘மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினால், அதை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுகிறார். ஓ.பி.எஸ்ஸின் மௌனமும் தீபாவின் அரசியல் பிரவேசமும் கார்டனை கலங்க வைத்துள்ளன’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் வி.கே.சசிகலா. முதல் அறிக்கையாக, ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பாக ஸ்டாலின் பேசுவதாக’ சுட்டிக் காட்டியிருந்தார். அதேபோல், மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதில், ‘தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வர உள்ளது. ஊரெங்கும் பொங்கல் திருநாள் நடைபெற உள்ள இந்த வேளையில், மீனவர் குடும்பங்களில் தலைவனும், பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்க வேண்டுமா?’ என குமுறலை வெளிப் படுத்தியிருந்தார். நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடக் கோரி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் சசிகலா. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். ஒரே கட்சியில் இருந்து ஒரே கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்படுவதை ஆச்சரித்தோடு கவனிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

“ஆட்சியில் இருந்து ஓ.பி.எஸ் விலகுவார் என மன்னார்குடி உறவுகள் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு, பிரதமருக்குக் கடிதம் என முன்பைவிட உற்சாகமாக செயல்பட ஆரம்பித்துவிட்டார். ‘முடிவுகளை எடுக்க முடியாமல் முதல்வர் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறார்; அவருக்கு எதிராக அமைச்சர்கள் நம்பிக்கை இல்லாமல் பேசுவதால் ஓட்டெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்’ என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்திருப்பதை, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்கின்றனர். இதை அறிந்துதான், ஸ்டாலினைக் கண்டித்து அறிக்கை விடுகிறார் சசிகலா. அவருக்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல், தி.மு.கவின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட்டு அறிக்கை விட வைத்தார் ஸ்டாலின். ஜெயலலிதாவைப் போல, தீவிர தி.மு.க எதிர்ப்பை முன்வைத்தால், தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறார். ஆனால், களநிலவரம் சசிகலாவுக்குச் சாதகமாக இல்லை” என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், 

“பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டு, மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயை நேற்று சந்தித்தார் சசிகலா. ‘உங்களுக்கு எதிராக நாங்கள் இல்லை’ என்பதை மோடிக்கு நேரடியாக உணர்த்த விரும்புகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மூலமாகவே, கார்டனை முடக்கும் பணிகள் நடந்து வருவதாக அச்சப்படுகின்றனர். எனவேதான், பிரதமருக்குக் கடிதம் எழுதும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. கூடவே, தீபாவின் அரசியல் பிரவேசம் கார்டன் வட்டாரத்தை கதிகலக்கி வருகிறது. தீபாவிடம் பேசும் அரசியல் பிரமுகர்கள், ‘சசிகலா எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும்போது தாய்மார்களின் ஆதரவு உங்கள் பக்கம் இருக்கும். அரசியலில் இளைஞர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். நெடுஞ்செழியனை பின்னுக்குத் தள்ளி கருணாநிதி அதிகாரத்துக்கு வந்தபோது அவருக்கு 44 வயதுதான். கலைஞரை எம்.ஜி.ஆர் வீழ்த்தியபோது, எம்.ஜி.ஆரை வயது குறைவானவராகத்தான் மக்கள் பார்த்தனர். ஜானகியை ஜெயலலிதா வீழத்தும்போது, ஜெயலலிதா இளவயதில் இருந்தார். அதேபோல், அறுபது வயதைத் தாண்டிய ஸ்டாலினையும் சசிகலாவையும் இளைஞர் பலத்தால் உங்களால் முறியடிக்க முடியும்’ எனப் பேசி வருகின்றனர். கார்டன் வட்டாரத்தால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ‘நல்ல சூழல்கள் ஏற்படும்போது அரசியலுக்கு வருவேன்’ என ஜெயலலிதா சமாதிக்குச் சென்றபோது கூறினார் தீபா. தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறார் தீபா” என விவரித்தார். 

“ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வரிந்துகட்டிய அமைச்சர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பை மட்டும் நடத்தி வருகிறார் சசிகலா. ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை, கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. இதுகுறித்து அவரிடம் சசிகலா பேசியிருக்கிறார். ‘அறிக்கை வெளியிடுமாறு அண்ணன்தான் (ம.நடராசன்) சொன்னார். அதன்படியே செயல்பட்டேன்’ என விளக்கியிருக்கிறார். அரசியல் சூழல்களை மிகுந்த கவனத்தோடு கவனித்து வருகிறார் சசிகலா. பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் ஸ்டாலினுக்குக் அறிக்கை வெளியிடுவதையும் பதற்றத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க முடிகிறது.

தீபாவை சந்திக்க சொந்தப் பணத்தைச் செலவு செய்து தொண்டர்கள் வருகின்றனர். அதுவே, சசிகலாவை சந்திக்க நிர்வாகிகள் மட்டுமே வருகின்றனர். போயஸ் கார்டன் தெருவில் கடைகள் முளைப்பதைப் போல, தீபா வீட்டின் முன்பு கடைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன. அரசியலில் இல்லாத தீபாவுக்கு இவ்வளவு கூட்டம் கூடுவதை மன்னார்குடி உறவுகள் ரசிக்கவில்லை. ஆறுமுகநேரி, காங்கேயம், வெள்ளக் கோவில் என பரவலாக அவருக்குப் போஸ்டர்கள் முளைக்கின்றன. ‘சசிகலாவுக்குத் தொண்டர்கள் ஆதரவு இல்லை’ என்பது அம்பலப்பட்டுவிடுமோ என சீனியர் நிர்வாகிகள் கவலைப்படுகின்றனர். ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்யப் போவது சசிகலாவா? தீபாவா என அரசியல் களம் திசைமாறியிருக்கிறது” என்கின்றனர் அ.தி.மு.க தொண்டர்கள். 

மத்திய அரசின் நெருக்குதல்; ஓ.பி.எஸ்.ஸின் சைலண்ட் மோட்; தீபாவின் திடீர் பிரவேசம்; ஸ்டாலின்-ஓ.பி.எஸ் பாசம் என நான்கு முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. ‘நான்கு சுவற்றுக்குள் இருந்து கொண்டே இதுவரையில் அரசியல் செய்து வந்தவர், முதல்முறையாக அரசியல் களத்தை அச்சத்தோடு கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அ.தி.மு.கவின் எதிர்காலம் குறித்த அச்சமும் தொண்டர்கள் மத்தியில் சூழ்ந்துள்ளன’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

Advertisements
%d bloggers like this: