Advertisements

புத்தாண்டில் கம்ப்யூட்டரைப் புதுப்பிப்போம்

திய ஆண்டு பிறந்துவிட்டது. அனைத்தும் புதியதாக இல்லாவிட்டாலும், நாம் அன்றாடம் புழங்குவதைப் புதுப்பிக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம். சீரமைக்கிறோம். குப்பைகளைக் காலி செய்து, புதிய பொருட்களை வாங்கிப் பொருத்துகிறோம். தமிழ் மக்கள் இதற்கெனவே,

தைத்திருநாளைக் கொண்டாடுகின்றனர். எத்தனையோ விஷயங்களை, பொருள்களைப் புதுப்பிக்கும் நாம், இன்று நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட கம்ப்யூட்டரைப் புதுப்பிக்க வேண்டாமா? கம்ப்யூட்டரை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்காமல், அடிக்கடி புதுப்பிக்க்க வேண்டும். ஆனால், தினந்தோறும் அதனைப் பயன்படுத்துவதால், அதனைப் புதுப்பிக்க நேரம் இல்லாமல் நேரத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாட்களிலாவது, கம்ப்யூட்டரைப் புதுப்பிப்பது குறித்து எண்ணத் தொடங்குவோம். செயல்படுவோம். குறைந்த பட்சம் அதில் என்ன என்ன சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.
குப்பைகளை அகற்றுக
கம்ப்யூட்டரில் குப்பைகளைச் சேர்த்து வைப்பதற்கென்றே, விண்டோஸ் இயக்கத்தில், Recycle Bin என்ற குப்பைத் தொட்டி தரப்பட்டுள்ளது. அவ்வப்போது நாம் நீக்கும், அழிக்கும் பைல்கள் இங்கு தங்குகின்றன. ஒருவேளை கவனக் குறைவால் நாம் அழிக்கும் பைல்களைத் திரும்பப் பெற எண்ணுகையில், நமக்கு உதவுவதற்காக இந்த ஏற்பாடு. ஆனால், நாம் அழித்தபின், நம் பைல்கள் குப்பையாய் ஆன பின், அவற்றைப் பற்றி மீண்டும் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இந்த சுத்தப்படுத்தும் பணியில் நாம் முதலில் அதைக் காணலாம். பல நாட்களாக நீங்கள் அழித்த பைல்கள் குறித்து மீண்டும் எண்ணவில்லை என்றால், நிச்சயம் அவை உங்களுக்குத் தேவைப்படாது. எனவே, அவற்றை அழித்துவிடலாமே. Recycle Bin மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் சிறிய பட்டியலில் Empty Recycle Bin என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உடன், அவற்றை ‘அழித்துவிடவா’ என்று கேட்கும் கம்ப்யூட்டருக்கு ‘yes’ என்று அழுத்தி பைல்களை நிரந்தரமாக நீக்கவும்.
நீண்ட நாள் கோப்புகளை நீக்குக
நாம் எந்த ஒரு ஆவணத்தை உருவாக்கினாலும், படங்களைப் பதிவு செய்து வைத்திருந்தாலும், பின்னர் அவற்றை நீக்குவதே இல்லை. நிச்சயமாக அவை தேவையில்லை என்று தெரிந்தாலும், ஏதோ ஒரு பாசத்தில் (?) தொடர்ந்து கம்ப்யூட்டரில் வைத்திருக்கிறோம். இவை நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் இடத்தைத் தேவையில்லாமல் பிடித்துக் கொண்டு தங்குகின்றன. “இந்தச் சிறிய பைல் என்ன அவ்வளவு இடத்தையா பிடித்துக் கொள்கிறது?” என்று நமக்கு நாமே கேள்வி கேட்டு, அவற்றை அழிப்பதே இல்லை. அத்தகைய பைல்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, அவை எடுத்துக் கொள்ளும் இடமும் அதிகமாகவே இருக்கும். ஐந்தாண்டுக்கு முன்பு, பொங்கல் விழாவிற்கும், தீபாவளிக்கும் வாங்க விரும்பிய பொருட்களின் பட்டியல் கொண்ட டாகுமெண்ட் பைல் கூட அப்படியே இருக்கும். அதைக் கொண்டு வாங்கிய பொருட்களின் பயன்காலம் கூட முடிந்து வெளியே எறியப்பட்டிருக்கும். என்றோ பொழுது போகாமல் எடுத்த படங்கள் பல அணி வகுத்து ஏதேனும் ஒரு ட்ரைவில் இருக்கும். ‘அது பாட்டுக்கு இருக்கட்டும்’ என அவற்றை நாம் வைத்திருப்போம். தயவு செய்து இவற்றை எல்லாம் நீக்கிவிடுங்கள். இன்னும் நீக்க மனம் இடம் தரவில்லை என்றால், உங்களிடம் உள்ள போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி விடுங்கள். அல்லது ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ், பாக்ஸ் போன்ற க்ளவ்ட் தேக்ககங்களுக்கு மாற்றிவிடுங்கள். பின்னர், நேரம் அமைகையில், அங்கிருந்து அவற்றை நீக்கிவிடலாம். கண்ட்ரோல் அழுத்தி, அத்தகைய பைல்களைத் தொடர்ந்து தேடி எடுங்கள். பின்னர், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் Delete என்பதில் அழுத்தி நீக்குங்கள். இவை Recycle Bin சென்று அடையும். அங்கிருந்தும் நீக்குங்கள். அங்கு செல்லாமல் நீக்கப்பட வேண்டும் என்றால், Delete அழுத்தும் போது, Shift கீயையும் சேர்த்து அழுத்துங்கள்.
அப்ளிகேஷன்களையும் நீக்கலாம்
தேவையற்ற பைல்களைக் கண்டறிந்தது போல, பயன்படுத்தப்படாமல் பல மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் புரோகிராம்களையும் நீக்குங்கள். புரோகிராம் பட்டியலைப் பாருங்கள். ஸ்டார்ட் மெனுவில் டைல்களாக இவை காட்டப்படும். அவற்றைப் பார்த்தே, அங்கிருந்தவாறே நீக்கலாம். அல்லது, கண்ட்ரோல் பேனல் சென்று, Add or Remove Programs பிரிவைத் தேர்ந்தெடுங்கள். இங்கு அனைத்து புரோகிராம்களும், அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்களின் பெயர்களோடு காட்டப்படும். (இவற்றில் சிலவற்றின் நிறுவனங்கள் கூட தற்போது இல்லாமல் இருக்கும்.) பல மாதங்களாக, ஆண்டுகளாகப் பயன்படாத புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை Uninstall செய்துவிடவும். இந்தப் பட்டியல், மாறா நிலையில், அகரவரிசைப்படி இருக்கும். இதனை, கம்ப்யூட்டரில் Install செய்த நாள் வரிசைப்படி பெறலாம். இதன் மூலம், மிகப் பழைய புரோகிராம்களைக் கண்டறிவது எளிது. இவற்றைப் பொருத்தவரை, வேகமாக சிந்தனையின்றி அழிக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை இவை தேவையற்றுதுதானா, பல நாட்களாகப் பயன்பாட்டில் இல்லாததுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நீக்கவும்.
டெஸ்க்டாப் சுத்தம்
கம்ப்யூட்டரில், நம் வீட்டு வரவேற்பறை போலக் காட்சி அளிப்பது ‘டெஸ்க்டாப்’ திரை ஆகும். இதில் நம் மனதிற்குப் பிடித்தவர்களின் படங்களைப் பலர் பதிந்து வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் முகமெல்லாம் மறைக்கும் அளவிற்கு எக்கச் சக்க பைல்கள், போல்டர்களை அமைத்திருப்பார்கள். மீண்டும் மீண்டும் பைல்களை இங்கு தேக்கி வைப்பதற்குக் காரணம், இவை எல்லாம், ட்ரைவ்களில் உள்ள போல்டர்களில் இருந்தால், அவற்றைத் தேடி எடுக்க சோம்பல் படுவதுதான். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போதும், அடிக்கடி தேவைப்படும்போதும் பயன்படுத்தும் ஒரு சில பைல்களை மட்டும் டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ளலாம். மற்றவற்றை, ட்ரைவில் உள்ள போல்டர்களுக்கு மாற்றுங்கள். அல்லது நீக்கிவிடுங்கள். டெஸ்க்டாப் பைல்களில் பெரும்பாலானவை, புரோகிராம்களை இயக்கத் தேவைப்படும் ஐகான்கள் தான். பயன்படுத்தாத புரோகிராம்களின் ஐகான்களை நீக்கிவிடலாம். இவற்றை நீக்குவதன் மூலம், நாம் அந்த புரோகிராமிற்கான சுருக்கு வழியை மட்டுமே நீக்குகிறோம். புரோகிராம்களை அல்ல. எனவே, ஷார்ட்கட் ஐகான்கள் மீது ரைட் கிளிக் செய்து அவற்றை நீக்குங்கள். இவை ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது. உடனே அழிக்கப்படும். தேவை என்றால், மீண்டும் புரோகிராம் இயக்க பைல் சென்று, ஷார்ட் கட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். எனவே கவலைப்படாமல், இவற்றை நீக்கி சுத்தப்படுத்தவும்.
ஸ்டார்ட் மெனு சுத்தம்
டெஸ்க் டாப் திரையைச் சுத்தம் செய்தது போல, ஸ்டார்ட் மெனு மற்றும் அப்ளிகேஷன் பட்டியலையும் சுத்தம் செய்திடலாம். உங்கள் ஸ்டார்ட் மெனுவில் ‘பின்’ செய்து வைத்துள்ள புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தப் போவதில்லை என்றால், அதில் ரைட் கிளிக் செய்து, அந்த மெனுவிலிருந்து Unpin செய்துவிடலாம்.
புரோகிராம் மேம்படுத்தல்
இந்த புத்தாண்டு புத்தாக்கத்தில் நாம் கட்டாயம் கவனிக்க வேண்டியது புரோகிராம் மேம்படுத்தல். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டும் நம்மால் (அல்லது அது தானாக) மேம்படுத்தப்படுகிறது. மற்ற புரோகிராம்களை நாம் கவனிப்பதில்லை. அவையும் மேம்படுத்தப்பட வேண்டும். மேம்படுத்தப்படாத புரோகிராம்கள் வழியாக, ஹேக்கர்கள் கம்ப்யூட்டருக்குள் நுழையும் வாய்ப்பு இருப்பதால், அனைத்து புரோகிராம்களையும் மேம்படுத்தல் அவசியம். எனவே, ஒவ்வொரு புரோகிராமிற்கும், Check for Updates என்ற பிரிவில் கிளிக் செய்து, அதன் இணைய தளங்கள் வழியாக மேம்படுத்த வேண்டும்.
பல புரோகிராம்கள், நமக்கு அவ்வப்போது அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் என பாப் அப் செய்திக் கட்டங்களைக் காட்டும். ஆனால், வேலை அவசரத்தில், அவற்றை அலட்சியப்படுத்தி விடுவோம். அவற்றை எல்லாம் நினைவு படுத்தி, அவற்றின் இணைய தளம் வழியாக மேம்படுத்தவும்.
மேம்படுத்த வேண்டிய புரோகிராம்களில் முக்கியமானவை ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் எதிர்ப்பு புரோகிராம்களாகும். இவை மேம்படுத்தப்படவில்லை என்றால், அண்மைக் காலத்திய வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைவது உறுதியாகிவிடும். எனவே, மறு சிந்தனை இல்லாமல், இவற்றை மேம்படுத்தவும்.
சிதறல்களை ஒன்றிணைக்க
மேலே காட்டியபடி, கோப்புகளை அழித்துவிட்டதால், ஹார்ட் டிஸ்க்கில் ஆங்காங்கே இந்த பைல்கள் இருந்த இடம் காலி என அறிவிக்கப்படும். இதனால், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் சிதறல்களாக இருக்கும். ஒரே பைல் பல இடங்களில் பதியப்பட்டு இருக்கும். இதனைச் சரி செய்திடும் பணி தான் defragment என்பதாகும். உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 இருந்தால், சிஸ்டமே இந்த செயலை மேற்கொள்ளும். இருப்பினும், நாமும் இதனை ஒருமுறை சோதனை செய்து, டிஸ்க் சரியாக உள்ளதா எனக் கவனித்துக் கொள்ள வேண்டும். விண்டோஸ் 7 கொண்டு கம்ப்யூட்டரை இயக்குபவர்கள், Start > All programs > Accessories எனச் செல்லவும். இங்கு எந்த நிலையிலும், சிஸ்டம் பாஸ்வேர்ட் எதுவும் கேட்கப்பட மாட்டாது. இங்கு System Tools என்பதில் Disk Defragmenter என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இறுதியாக, Defragment now என்பதைக் கிளிக் செய்தால், பணி நிறைவேறும். இறுதியாக, சிஸ்டம் பாஸ்வேர்ட் தேவைப்படலாம்.
விண்டோஸ் 8.1 இருந்தால், தேடல் கட்டத்தில் defrag என டைப் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் Defragment and Optimize என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு முன், Analyze என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் ஹார்ட் டிஸ்க்கிற்கு டிபிராக் செயல்பாடு தேவைதானா என்பதை அறியலாம். டிபிராக் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்குரிய இடம் இருந்தால் தான், சிஸ்டம் அந்தப் பணியை மேற்கொள்ளும்.
உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் டிபிராக் செய்யப்பட சில மணி நேரங்கள் கூட ஆகலாம். டிபிராக் செய்யப்படுகையில், நீங்கள் உங்கள் வழக்கமான பணியை மேற்கொள்ளலாம்.
கம்ப்யூட்டரைச் சீரமைக்கும் பணியில், இறுதியாக பேக் அப் செய்திடும் பணி குறித்துச் சொல்ல வேண்டும். டேட்டா பேக் அப் எடுப்பது குறித்து, முன்பு கம்ப்யூட்டர் மலரில் தனி கட்டுரை ஒன்று அளிக்கப்பட்டது. நாம் பேக் அப் எடுக்கையில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் உருவாக்கிய அனைத்தும் பேக் அப் எடுக்கப்படுகிறது. இது டாகுமெண்ட், படம், இசை மற்றும் விடியோ கோப்புகளாக இருக்கலாம். பேக் அப் எடுப்பதற்குப் பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விண்டோஸ் சிஸ்டத்திலும் இதற்கான புரோகிராம் தரப்பட்டுள்ளது. பேக் அப் எடுப்பதற்கு, பெரிய அளவில் தேக்ககம் கொண்டுள்ள ப்ளாஷ் ட்ரைவ், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அல்லது நெட்வொர்க் ட்ரைவ் தேவைப்படும். பேக் அப் எடுக்கும் செயல், நாம் அச்சமின்றி பணியாற்றவே. கம்ப்யூட்டர் மற்றும் எந்த ஒரு டிஜிட்டல் சாதனமும் எந்த நேரமும் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டு திருப்பிச் சரி செய்யாத நிலைக்குத் தள்ளப்படலாம். கம்ப்யூட்டரில் நாம் டேட்டா பைல்களைத் தேக்கி வைக்கும் ஹார்ட் டிஸ்க் எந்த நேரமும் க்ராஷ் ஆகி, சரி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம். ஹார்ட் டிஸ்க்கின் விலை நாம் எதிர்கொள்ளும் விலையாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள டேட்டாவிற்கு, அதனை உருவாக்க நாம் மேற்கொண்ட உழைப்பிற்கு விலையே இல்லை. எனவே, ஆண்டுக்கு ஒருமுறை என்றில்லாமல், அடிக்கடி பேக் அப் எடுப்பது, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் செயலாகும்.
தூசுகளை நீக்கி காற்றை விடு
இறுதியாகப் பராமரிப்பு பணியில், கம்ப்யூட்டரின் வெப்பக் காற்று வெளியேறும் துளைகளைச் சுத்தம் செய்திடும் பணி முக்கியமான ஒன்றாகும். கம்ப்யூட்டர் செயலாற்றுகையில், அதன் மதர் போர்டிலிருந்து வெப்பம் வெளியாகிக் கொண்டே இருக்கும். அதனால் தான் இப்போது சிப் மேலாகவும், மற்றும் சி.பி.யு. பெட்டியிலும் சிறிய மின் விசிறிகள் அமைக்கப்பட்டு சுழல்கின்றன. வெப்பக் காற்று வெளியேற வெளிப்புறத் தகடுகளில் நீண்ட துளைகள் அமைக்கப்படுகின்றன. காலப் போக்கில் இந்த துளைகளில் தூசு தங்குவதுண்டு. இவற்றை அவ்வப்போது நீக்கி, சுத்தம் செய்திட வேண்டும். இந்தப் பணியை மாதம் ஒரு முறையாவது மேற்கொள்ளுதல் நல்லது. நம் வாழ்வின் ஓர் அங்கமாக இணைந்துவிட்ட கம்ப்யூட்டரைப் பராமரிப்பது குறித்த குறிப்புகள் மேலே தரப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளின்படி செயல்பாடுகளை மேற்கொண்டால், கம்ப்யூட்டர் தொடர்ந்து நம் தோழனாகச் செயல்படும். இல்லை எனில், அதுவே சில சமயங்களில் நம்மைக் கைவிடும் நபராகவும் மாறிவிடும். எனவே, நேரம் எடுத்து, அக்கறை எடுத்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.

Advertisements
%d bloggers like this: