மிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை… சொத்துக் குவிப்பு வழக்கு… அச்சத்தில் சசிகலா!

‘ஏதோ வானிலை மாறுதே” – ஹம் செய்தபடியே என்ட்ரி ஆனார் கழுகார். அவரிடம், ‘‘நீங்கள் இப்படிப் பாடினால் அதற்கு ஏதோ அர்த்தம் இருக்கும்’’ என்று கொக்கிப் போட்டோம்.

‘‘சொல்கிறேன்… ஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா… இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.”

‘‘ஏனாம்? என்ன சிக்கல்?”

‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் இந்த (ஜனவரி) மாதத்துக்குள்ளாகவே தீர்ப்பு வெளியாகும் என்று உறுதி செய்கின்றன. சுப்பிரமணியன் சுவாமியும் இதையே சொல்லியிருக்கிறார். வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்று சசிகலா தரப்பு உறுதியாக நம்புகிறது. ஆனால், நீதித்துறைக்கு நெருக்கமான டெல்லி வட்டாரங்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றன. வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘ஜெயலலிதாவின் மரணம் எந்த வகையிலும் தீர்ப்பை பாதிக்காது. வாதங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்தாலும், வழக்கம் போல தீர்ப்பைத் தந்த முன்னுதாரணங்கள் பல உள்ளன’ எனக் கூறியிருக்கிறார். எது எப்படியோ… தீர்ப்புக்குப் பிறகே தங்களுடைய அடுத்த அடியை எடுத்துவைக்கலாம் என்றே சசி தரப்பும் யோசிக்கிறது. அதனால்தான், முதலில் 12-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்பதாக முடிவுசெய்து வைத்திருந்ததைத் தற்போது, மேலும் சில நாட்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.”

‘‘அப்படியா?”

‘‘பொங்கல் அன்று பதவி ஏற்கலாம் என்கிறது ஒரு தரப்பு. பொங்கல் முடிந்தபிறகு எம்.ஜி.ஆர் பிறந்தநாளின் போதோ, அதற்கு மறுநாளோ இருக்கலாம் என்கிறது இன்னொரு தரப்பு. சசிகலா உடனடியாகப் பதவி ஏற்பதில் அவரது குடும்பத்துக்குள்ளேயே மாறுபட்ட கருத்துகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகலா உடனடியாக முதல்வர் ஆக வேண்டும் என்கிறாராம் நடராசன். கொஞ்சம் காத்திருந்து அப்புறம் ஆகலாம் என்கிறாராம் திவாகரன். ‘சசிகலா உடனடியாக முதல்வர் ஆகி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால் பெரும் பின்னடைவு ஏற்படும்’ என்று இந்தத் தரப்பு சொல்கிறதாம். இது சசிகலாவைக் குழப்பம் அடைய வைத்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சசிகலா புஷ்பா எம்.பி., மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் கொடுத்தார். இந்த மனுவை விசாரிக்க சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இருக்கிறது. ‘ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து சொல்லி வந்த  சசிகலா புஷ்பா, இதே கோரிக்கையுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து வந்தார். சி.பி.ஐ-க்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதை அனுப்பும் என்று சசிகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது சசிகலாவை அச்சத்தில் உறையவைத்துள்ளது.”

‘‘ஓ!”

‘‘பிரதமர் மோடிக்கு சசிகலாவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டி போட்டுக்கொண்டு கடிதம் எழுதுகிறார்களே?”

‘‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தபால்தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிட வேண்டும், மீனவர் பிரச்னையில் படகுகளை விடுவிக்க வேண்டும்… இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்கிற முறையில் சசிகலாவும், தமிழக முதல்வர் என்கிற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி கடிதங்களை பிரதமருக்கு எழுதினார்கள். ஆனால், தமிழக செய்தித்துறையினர் சசிகலா தரப்பிலான கடிதம் மீடியாவுக்குப் போய் சேர்ந்ததா என்று உறுதிசெய்துவிட்டு, பிறகுதான் முதல்வரின் கடிதங்களை மீடியாவில் தெரியப்படுத்தினார்களாம். சசிகலா மீது அவர்களுக்கு அவ்வளவு விசுவாசம்!”

‘இந்தியா டுடே’ இதழ் சென்னையில் நடத்திய நிகழ்ச்சி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆன பிறகு சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி. உள்ளே நுழைந்ததும் போட்டோஷூட்டுக்கு அமர்த்தலாக போஸ் கொடுத்த சசிகலா, அதன்பின் ஜெயலலிதா புகைப்படக் கண்காட்சியைத் துவக்கி வைத்தார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆங்கில உரையைப் படிக்க ஆரம்பித்த போதே சசிகலா அவசரமாக வெளியேறிவிட்டார்.

‘‘பாவம் பன்னீர்!”

‘‘மாவட்ட வாரியாக கட்சிப் பொறுப்பாளர் களை சசிகலா சந்தித்து வருகிறார். இந்தக் கூட்டத்தின் நோக்கமே கட்சியினரை ஆழம் பார்ப்பதுதான் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அமைச்சர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை ஜெயலலிதா மீது விசுவாசம் என்பதைத் தாண்டி ஒரு பக்தியோடு இருந்தார்கள். `அதே விசுவாசத்தை தன்மீதும் வைத்துள்ளார்களா?’ என்ற சந்தேகம் சசிகலாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்சிக்குள் கிளம்பும் புகைச்சல்கள் சசிகலாவை யோசிக்க வைத்துவிட்டன. மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி சரிக்கட்டிவிடலாம் என்றே இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ’’

‘‘மாஜிக்களையும் சந்தித்துள்ளாரே?’’

‘‘ஆமாம்! மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்கு இடையே முன்னாள் எம்.பி-க்கள் மற்றும்  எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்துள்ளார். அவர்களிடம் ‘நமது கட்சிக்கு எதிராக நடைபெறும் விஷமப் பிரசாரங்களை முறியடிக்க நீங்கள் எல்லாம் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். கட்சியில் உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும்’ என்று பேசி குஷியாக்கியுள்ளார். இதே போல் பேச்சாளர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்களிடம் ‘இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். நீங்கள் அம்மா இருந்தபோது எப்படி கட்சி மீது விசுவாசமாக இருந்தீர்களோ, அதே போல் இனியும் இருக்க வேண்டும். நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள்’ என்று உறுதி கொடுத்துள்ளார்.’’

‘‘ம்!’’

‘‘இந்தக் கூட்டத்துக்கு வரும்போதே அனைவருக்கும் டோக்கன் ஒன்று வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு பேச்சாளர்களை வெளியே போக வேண்டாம் என்று இருக்க வைத்துள்ளனர். இப்படி மூன்று மணிநேரம் அவர்களைக் காக்க வைத்தனர். இதனால் கடுப்பாகி சிலர் வெளியே கிளம்பிவிட்டார்கள். உட்கார்ந்து இருந்தவர்கள் அனைவருக்கும் ‘டோக்கனை காண்பித்்து கவர் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆவலோடு கவரை வாங்கி பிரித்துப் பார்த்துள்ளார்கள். அதில் புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்றே ஒன்று மட்டும் படபடத்துள்ளது. இதில் பேச்சாளர்களுக்கு ஏக வருத்தமாம். ‘ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இவர்கள் படியளப்பது இவ்வளவுதானா?’ என்று புலம்பியுள்ளார்கள்.’’

‘‘ம்!”

‘‘தனக்கு எதிரான சிந்தனையுடன் யாரும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சசிகலா. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய துணை நிர்வாகியான ஒரு பெண்மணி, அங்கு நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு ஏனோ போகவில்லை. இதுகுறித்த தகவல் சசிகலா தரப்பினருக்குப் போக, ‘ஏதோ அதிருப்தி’ என்று நினைத்து சமாதானம் பேசியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக, அந்தப் பெண்மணியின் மகனுக்கு மிகப்பெரிய கான்ட்ராக்ட் வேலையைக் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த மற்ற நிர்வாகிகள் இப்போது யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.’’

‘‘வாய்ப்பு கிடைக்கும்போதே வாரிக்கொள்ள வேண்டியதுதானே!”

‘‘சேலம் மாவட்டத்தில் ஜெயலலிதா படத்தை சிறியதாகவும், சசிகலா படத்தைப் பெரியதாகவும் போட்டு முதலில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பிறகு திடீரென அது அப்புறப்படுத்தப்பட்டு ஜெயலலிதா படத்தை பெரியதாக போட்டு புதிய போஸ்டரை ஒட்டினார்கள். இந்த அதிரடி மாற்றத்துக்கான பின்னணி என்ன தெரியுமா? ‘சசிகலாவின் உருவப் படத்தை பிரமாண்டமாகப் போட்டு ஃப்ளெக்ஸ் வைப்பது தமிழகம் முழுவதும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது’ என்று உளவுப் பிரிவு கார்டனை உஷார்படுத்தியுள்ளது. இதையடுத்து, ‘இனி சசிகலா படத்தை மிகப் பெரியதாகப் போட்டு எந்த ஃப்ளெக்ஸும் வைக்கக்கூடாது’ என்று கடுமையான உத்தரவு போட்டுள்ளார்கள். அதே போல் அ.தி.மு.க-வின் உறுப்பினர் அட்டையும் விரைவில் மாற உள்ளதாம். அதில் புதிய பொதுச்செயலாளர் சசிகலாவின் புகைப்படம் இருக்கும் என்று எதி்ர்பார்க்கப்படுகிறது.’’

‘‘ஓஹோ?”

‘‘சசிகலாவுக்கு கடும் சவால் கொடுக்கத் தயாராகிவிட்டார் தீபா. அ.தி.மு.க தலைமை மீது வருத்தத்தில் இருக்கும் கட்சியினர் பலர், கடந்த ஒரு வாரமாகவே தீபா வீட்டில், மாலை நேரத்தில் கூட்டமாகக் கூடிவிடுகிறார்கள். மாலை ஐந்து மணிக்கு தனது வீட்டு மாடியில் நின்றுகொண்டு தன்னை சந்திக்க வருபவர்களைப் பார்த்து வருகிறார் தீபா. அத்தை ஜெயலலிதாவின் மேனரிஸத்தையே இவரும் செய்வதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் மக்கள். தீபா வீட்டு வாசலில் நோட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தீபாவை சந்திக்க வருபவர்களின் பெயர்கள், மொபைல் எண்கள், வீட்டு முகவரி போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. ‘நீங்கள் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக உள்ளீர்களா?’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டு, ‘ஆம்’ என்றால் அது குறித்த விவரங்களையும் பதியச் சொல்லியுள்ளார்கள். அந்த நோட்டில் ஒரு லட்சத்தைத் தாண்டி பதிவுகள் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுதான் தீபாவை உற்சாகப்படுத்தியுள்ளது. அரசியலில் தீவிரம் காட்டும் முடிவுக்கு அவர் வந்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளாராம். அ.தி.மு.க தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சிலர் இவருக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்!”

‘‘நாஞ்சில் சம்பத் பல்டிக்கு என்ன காரணம்?”

‘‘தி.மு.க-வில் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லையாம். அதேநேரத்தில் தினகரன் சொன்ன டீல் சம்பத்துக்கு பிடித்து இருந்ததாம்! தன்னை வந்து சந்தித்த சம்பத்திடம், ‘நீங்கள் வராவிட்டால் இன்னோவா காரை நானே திருப்பி அனுப்ப இருந்தேன்’ என்றாராம் சசிகலா. ‘அம்மா அனைவரையும் அலட்சியப்படுத்துவார். சின்னம்மா அனைவரையும் அரவணைத்துப் போகிறார்’ என்று கட்சிக்குள் இப்போதே பாராட்டுப் பட்டயம் வாசிக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: