Advertisements

மிஸ்டர் கழுகு: கண்டிப்பு காட்டும் கவர்னர் வருகிறார்!

‘‘இங்கே வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், டெல்லியில் இன்னும் குளிர் விடவில்லை’’ என்ற பீடிகையுடன் உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ!   திடீர் டெல்லி விஜயமா? டெல்லியில் நடைபெறும் ஆலோசனைகள் எல்லாம் தமிழகத்தை மையப்படுத்தித்தான் இருக்கிறது போல…’’ – ஆவி பறக்கும் பிளாக் டீ கொடுத்தபடி விசாரித்தோம்.

‘‘டெல்லி வாலாக்களின் இப்போதைய கவனம் முழுவதும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில்தான் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டியும் அவர்கள் அக்கறை காட்டும் ஏரியாவாக தமிழகம் இருக்கிறது! குறிப்பாக கவர்னர் நியமனம்.

ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்தது. உடனே புதியவரை நியமிக்காமல், மகாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவுக்குக் கூடுதல் பொறுப்பு கொடுத்தனர். அவர் வந்த நேரம், தமிழகத்தில் மிக முக்கியமான காலகட்டமாக அமைந்தது. ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் அப்போலோவில் அட்மிட் ஆனது, அவருடைய உடல்நிலை பற்றிய அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பியது, ஓ.பன்னீர்செல்வத்திடம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்களை ஒப்படைத்தது, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ்-ஸுக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் வித்யாசாகர் மேற்பார்வையில் நடந்தன. இவ்வளவு கொந்தளிப்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், வித்யாசாகர் ராவ் இங்கு தங்கியது விரல்விட்டு எண்ணக்கூடிய சில நாட்கள் மட்டும்தான்! ‘இது நிர்வாகத்துக்கு நல்லதல்ல… பி.ஜே.பி அல்லாத ஒரு கட்சியால் ஆளப்படும் மிகப் பெரிய மாநிலம், தமிழகம். உடனடியாக இங்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும்’ என்ற ஆலோசனை டெல்லியில் தீவிரமாகி உள்ளது.’’
‘‘ம்ம்ம்ம்… கவர்னரை நியமிப்பதில் என்ன இழுபறி?’’

‘‘முதலில் கர்நாடக பி.ஜே.பி-யின் மூத்த நிர்வாகி சங்கரமூர்த்தி பரிசீலனை செய்யப்பட்டார். டெல்லியிலும் அவரை அழைத்துப் பேசினார்கள். அவருக்கு இதில் விருப்பம் என்றாலும், ஒரு விஷயத்தில் தயக்கம் காட்டினார். ‘தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் காவிரிப் பிரச்னை, முன்பைவிட தற்போது தீவிரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்துக்கு கவர்னராக பொறுப்பேற்பது பல சிக்கல்களை உருவாக்கும்’ என்பதே அவர் தயக்கத்துக்குக் காரணம். சங்கரமூர்த்தி தயங்கியதைப் போலவே, அவர் பெயர் அடிபட்டதுமே, தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதனால், வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த கிருஷ்ணம் ராஜுவையும் இப்போது பரிசீலிக்கின்றனர். இதையடுத்து, அவரையும் அழைத்துப் பேசி உள்ளனர். அவரும் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரின் பெயர்களும், இவர்களை நியமித்தால் ஏற்படும் சாதக பாதகங்களும் அறிக்கையாக பி.ஜே.பி  தேசியத் தலைவர் அமித் ஷாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ‘கண்டிப்பு காட்டும் ஒருவரே தமிழகத்துக்குத் தேவை’ என நினைக்கிறாராம் அமித் ஷா. அவருடைய டிக் யார் பெயரில் இருக்கிறதோ, அவர் விரைவில் தமிழக கவர்னராகப் பொறுப்பேற்பார்!’’
‘‘கவர்னர் இல்லையென்றால், குடியரசு தினத்தன்று யார் கொடியேற்றுவார்கள்?’’
‘‘கவர்னர் இல்லாதபோது, முதலமைச்சர் கொடியேற்றலாம். அந்த அடிப்படையில், இந்த முறை கடற்கரை காந்தி சிலையில் முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்!’’
‘‘டெல்லியில் வேறு என்ன விசேஷம்?’’

‘‘முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை கஸ்டடியில் கொண்டு வருவதற்கான வேலைகள் டெல்லியில் தீவிரமாக நடக்கின்றன. கடந்த மாதம் சேகர் ரெட்டி, மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் வீடுகளில் ரெய்டுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவர் மகன் விவேக் வீடுகளிலும் ரெய்டுகள் நடைபெற்றன. இந்திய வரலாறு காணாத வகையில் தலைமைச் செயலகத்துக்குள், துணை ராணுவத்துடன் நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள், தமிழக அரசின் அதிகாரத்தை எள்ளி நகையாடினர். இந்த விவகாரத்தில், சேகர் ரெட்டி, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராம மோகன ராவை விட்டு வைத்தனர். இந்த ரெய்டைக் கண்டித்து ராம மோகன ராவ் கொடுத்த பேட்டி, மத்திய அரசையும் வருமான வரித் துறையையும் கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.’’
‘‘ஆனால், ராம மோகன ராவைக் கைது செய்வதற்கு கோபம் மட்டும் போதாதே! வலுவான ஆதாரங்கள் வேண்டும் அல்லவா?’’

‘‘ஆமாம்! அவரைக் கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள், அவர் வீட்டில் நடத்திய ரெய்டில் சிக்கவில்லை. ஆனால், அவர் ஒப்புதலுடன் கையெழுத்தான கோப்புகள், ஒப்பந்தங்கள், டெண்டர்கள், அவருடைய வெளிநாட்டுத் தொடர்புகள் என்று மொத்தமாகத் தோண்டி எடுக்கிறார்கள். இவற்றில் பல விவகாரங்கள் வில்லங்கங்களாக உள்ளன. சட்ட நிபுணர்கள் அவற்றை ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் அவர் கைது செய்யப்படுவதற்கான உத்தரவு வரலாம்…’’

‘‘முன்பெல்லாம் டெல்லிக்குப் போனாலே காங்கிரஸ் பற்றி ஏதாவது செய்தி சொல்வீர்…’’

‘‘இருக்கிறது! அதைத்தான் சொல்ல வந்தேன். ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நம் இருப்பைத் தெரியப்படுத்தவும் எனக்கு சில அதிகாரங்கள் வேண்டும்’ என்று கேட்டுள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். அவர் கேட்பது, கட்சியின் நிர்வாகிகளை அடியோடு மாற்றுவதற்கான அதிகாரம். ‘தற்போது மாவட்ட, மாநில அளவில் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரத்தின் ஆட்கள். இவர்கள் என் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது இல்லை. கட்சியின் வளர்ச்சி என்பது, தங்களுக்கு பொறுப்புகளை வாங்கிக் கொடுத்த தலைவர்களுக்காக போஸ்டர் அடிப்பதுதான் என்ற எண்ணத்தில் இவர்கள் இருக்கின்றனர். இவர்களை மாற்றினால்தான், கட்சியை வலுப்படுத்த முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், டெல்லித் தலைமை வழக்கம்போல், திருநாவுக்கரசரை கொஞ்சம் பொறுத்திருக்கச் சொல்லி இருக்கிறது!’’

‘‘அப்படியே தமிழகச் செய்திகள் பக்கம் கொஞ்சம் பார்வையைத் திருப்பும்…’’
‘‘சேகர் ரெட்டிக்குப் பிறகு மணல் கான்ட்ராக்ட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன அல்லவா? புதிய ஆட்களை கார்டன் தரப்பு தேடிக் கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு கண்டிஷன்கள் விதிக்கிறார்கள். ஒன்று, பழைய டீம்களான ஆறுமுகச்சாமி, படிக்காசு, சேகர் ரெட்டி உள்ளிட்ட நெட்வொர்க்கோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்கக்கூடாது; மற்றொன்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது என்பது. பலரும் மேல்மட்டத் தொடர்புகளைப் பிடிப்பதில் தீவிரம்காட்டி வருகின்றனர். ஆனால், இதுவரை எதுவும் செட்டாகவில்லை. பொங்கலுக்குப் பிறகுதான் மணல் மூலம் கொட்டும் பணச்சுரங்கம் யாருக்கு என்பது தெரியவரும்!’’
‘‘சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷம் குறைந்துள்ளதே?’’
‘‘சசிகலாவும் நடராஜனும் இந்த முயற்சிகளில் இருந்து கொஞ்சம் பின்வாங்கி உள்ளனர். கடந்த இதழில் நாம் சொல்லியிருந்ததுபோல், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அதற்கு முக்கியக் காரணம். அதுபோக, குடும்பத்துக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. குறிப்பாக திவாகரன், ‘ஓ.பி.எஸ்-ஸே முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்கட்டும்; அக்கா பொதுச்செயலாளர் பதவியை மட்டும் பார்க்கட்டும்’ என்று சொல்லி வருகிறார். ஆனால், நடராஜனுக்கு இதில் உடன்பாடு இல்லை. ‘முதலமைச்சர் நாற்காலியில் சசிகலாவை அமர்த்துவதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்’ என்பது அவருடைய வாதம். இதில், நடராஜனுக்கும் திவாகரனுக்கும் இடையில் கடும் மோதல் உருவாகி உள்ளது என்று கார்டன் வட்டாரங்கள் சொல்கின்றன. இன்னொரு பக்கம் நடராஜனுக்கும் பல தலைவலிகள் ஆரம்பம் ஆகக்கூடும்…’’
‘‘என்ன அது?”

‘‘நடராஜன் மீதான பல வழக்குகள் மீண்டும் உயிர் பெறலாம் என்கிறார்கள். இந்தத் தகவல் அவருக்கும் தெரியும். அவர் மீது 13 வழக்குகள் இருக்கின்றன. காபிபோசா, பெரா வழக்குகள், தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், கராத்தே வீரர் உசைனி சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எல்லாம் அப்படி அப்படியேதான் கிடக்கின்றன. இவை தன்னை அலைக்கழிக்கக்கூடும் என்பதால்தான், அவர் தற்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.’’

‘‘ஓஹோ… அப்படியானால் பன்னீர்செல்வம் நான்கு ஆண்டுகள் நாற்காலியில் நீடித்துவிடுவாரோ?’’
‘‘அது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சசிகலா குடும்பத்துக்கு எதிர்ப்புகளும், அவர்களைச் சூழ்ந்துள்ள பிரச்னைகளும் அப்படி ஓர் அமைப்பை அவருக்குத் தருகின்றன. ஆனால், பன்னீர் பெயரால் நடக்கும் சில செயல்கள், அவருக்குத் தெரிந்துதான் நடக்கின்றனவா என குழம்புகிறார்கள் அதிகாரிகள் தரப்பில்! கடந்த 9-ம் தேதி ஓ.பி.எஸ்-ஸின் உறவினர் என கூறிக்கொண்டு மதனகோபால் என்பவர் ராமேஸ்வரம் வந்துள்ளார். இளைஞர், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரை திருமண மஹால் ஒன்றில் வைத்து சந்தித்துள்ளார். ‘முதல்வராக ஓ.பி.எஸ்-ஸின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு எப்படி உள்ளது?’ எனக் கேட்டறிந்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதையடுத்து உற்சாகமான மதனகோபால், ‘அடுத்த கட்டமாக விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்துவோம்’ எனச் சொல்லிவிட்டு வந்தாராம். இந்த மதனகோபால் 7 ஆண்டுகளுக்கு முன் ஓ.பி.எஸ்-ஸின் தேனி அலுவலகத்தில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றியவர் எனவும், நிறைய புகார்கள் வரவே அங்கிருந்து ஓ.பி.எஸ். சொந்தங்களால் விரட்டிவிடப்பட்டவர் எனவும் சொல்கிறார்கள். மதனகோபாலை ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள்தான் அனுப்பினார்களா, அல்லது அவரது எதிரிகள் மதனகோபாலைப் பயன்படுத்தி பன்னீருக்கு எதிராக கொம்பு சீவுகிறார்களா என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்!’’
– சொல்லி முடித்து கழுகார் பறந்தபோது தேநீர்க் கோப்பை காலியாகி இருந்தது.

Advertisements
%d bloggers like this: