Advertisements

அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ்

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate GT / Ultimate GT Flash Disk. அண்மையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் காட்சித் திருவிழாவின் போது, இது அறிமுகமாகியுள்ளது. GT என்பது Generation Terabyte என்பதாகும்

.
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், அதிக டேட்டா கொண்ட பைல்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே போல தொடர்ந்து அவற்றை சேமித்து வைக்கின்ற பணியும் உயர்ந்து வருகின்றது. இதற்கு உதவிடும் வகையில், கிங்ஸ்டன் நிறுவனம், தான் தயாரிக்கும் யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ்களின் கொள்ளளவை உயர்த்திக் கொண்டே வந்தது. தற்போது இந்த அதிக பட்ச அளவு 2 டெரா பைட் ஆக உள்ளது.
இதன் விலை சற்று அதிகம் என்றாலும், அதிக டேட்டாவை மிக எளிதாகப் பகிர்ந்து கொண்டு, அவற்றைக் கையில் எடுத்துச் செல்லும் வகையிலான சாதனம் ஒன்று உள்ளது என்ற நிலை மிகவும் மதிப்புடையதாகும். விலை மற்றும் அதில் பதியப்படும் டேட்டாவின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிக் கவசம், ஸிங்க் அலாய் உலோகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தவறுதலாக இதனைக் கை தவறிக் கீழே போட்டாலும், இதற்குப் பாதிப்பு இருக்காது. இதற்கு தொழில் நுட்ப உதவியுடன் 5 ஆண்டுகள் காப்புறுதி தரப்படுகிறது. இதன் செயல் அம்சங்கள்:
இதனை மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் முதல் 85 டிகிரி செல்சியஸ் வரையிலான சீதோஷ்ண நிலையில் வைத்திருக்கலாம். 25 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிர் செல்சியஸ் வரையிலான சீதோஷ்ண நிலையில் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 72 x 26.94 x 21மிமீ. இதன் வேகம் USB 3.1 Gen. 13 . அதாவது, விநாடிக்கு 5 கிகா பிட் தகவல்களைப் பரிமாறும் திறன் கொண்டது. கீழ்க்காணும் கம்ப்யூட்டர் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம்: அவை Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7 (SP1), Mac OS v.10.9.x, Linux v.2.6.x+ மற்றும் Chrome OS. DTUGT/1TB மற்றும் DTUGT/2TB என இரண்டு அளவுகளில், இரண்டு மாடல்களில் இது வெளியாகியுள்ளது.
சென்ற 2013 ஆம் ஆண்டு, இந்நிறுவனம் ஒரு டெரா பைட் கொள்ளளவு கொண்ட டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது இது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. பதிந்து எடுத்துச் செல்லக் கூடிய டேட்டா அளவினை, எந்த அளவிற்குக் கொண்டு செல்ல முடியுமோ, அந்த அளவிற்குக் கொண்டு செல்வதில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என இந்நிறுவனத்தின் நிர்வாகி ஜீன் தெரிவித்துள்ளார்.
புதிய ட்ரைவ் ஒன்றில், 70 மணி நேரம் ஓடக்கூடிய 4 கே படங்களைப் பதிந்து கொள்ளலாம்.
இதன் விலை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், 5,500 அமெரிக்க டாலர் அளவில் விலை குறிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தியப் பண மதிப்பில் ரூ. 3,74,000 ஆக இருக்கும்.

Advertisements
%d bloggers like this: